தொடாமல் தொடரும் 19

தொடாமல் தொடரும் 19

“அவ ஃப்ரெண்ட்ஷிப்ப விட்ருன்னு சொன்னப்ப நீ கேக்கல. பாரு… இப்ப எமோஷனலா லாக் ஆகிட்டே!” என்றான் மதன்.
“நடந்ததைப் பத்திப் பேசாம இப்ப என்ன செய்யலாம்னு மட்டும் சொல்லேன்.”
“போன்லயே சொல்லணுமா?”
“வேணாம். ஈவினிங் மீட் பண்ணலாம். 
யோசிச்சி வையி.”
போனைக் கத்தரித்துவிட்டு பைக்கில் 
புறப்பட்டான் ரகு.


கேரம் விளையாட்டு இருவருக்குமே போரடித்துப்போய் பாதி ஆட்டத்தில் நிறுத்திவிட்டு காய்களை அதற்கான டப்பாவில் சரஸ்வதி போட… போர்டை மர பீரோவிற்குப் பின்னால் எடுத்த இடத்தி
லேயே செருகி வைத்தாள் அஞ்சலி.
வெளியே அந்த நிதான மழை நிற்
பதற்கான அறிகுறியே தெரியவில்லை. வீட்டின் ஓடுகளில் பட்டு இறங்கும் மழை நீர் செய்த சீரான சப்த ஜாலம் எல்லாப் பக்கங்களிலும் ஸ்டீரியோ எஃபெக்ட்டில் ஒலித்துக்கொண்டிருந்ததால், கொஞ்சம் குரலுயர்த்திதான் பேச வேண்டியிருந்தது.
“டின்னருக்கு என்ன வேணும் அஞ்சலி?” என்றார் சரஸ்வதி.
“பசியே இல்லம்மா. ரெண்டு பிரெட் ஸ்லைஸ் போதும். உங்களுக்கும், சத்யாவுக்கும் செஞ்சிக்கங்க. நான் ஹெல்ப் பண்ணட்டுமா?'' என்றாள் அஞ்சலி.
“எப்பவோ அதிசயமா வர்றே. பிரெட்டா?அதெல்லாம் முடியாது. என்ன பிடிக்கும்னு சொல்லு? பூரி, சப்பாத்தி, சேமியா உப்புமா இப்படி ஏதாச்சும் சொல்லேன்.”
“மாவு இருந்தா இட்லி சாப்புடறேன்ம்மா.”
“அடப் போ அஞ்சலி… இட்லிதான் எப்பவும் சாப்பிடறமே. பூரியும், மசாலும் பண்ணித் தர்றேன். இந்த மழைக்கு சூடா சாப்பிட்டா நல்லா இருக்கும். நீ எதுவும் ஹெல்ப் பண்ண வேணாம். பேசாம உக்காரு. நான் பாத்துக்கறேன்.”
சரஸ்வதி எழுந்து சமையலறைக்குள் சென்றபடி, “டிவி போட்டுக்கோ. ரிமோட் அங்கயே இருக்கு பாரும்மா” என்றார்.
அறைக் கதவைத் திறந்து வெளியில் வந்த சத்யா, “இந்த மழையில எப்படிம்மா டிவி தெரியும்? அஞ்சலி, ஏதாச்சும் படிக்கிறியா? என்ன புக் வேணும்? நீயே எடுத்துக்கோ. இல்ல… மியூசிக் கேக்கறியா?” என்றான்.
“எதுவும் வேணாம். சும்மா மழையப் பாத்துட்டிருக்கேன்.”
அவளெதிரில் வந்து அமர்ந்தான்.
“ஸாரி” என்றான் சன்னக் குரலில் முகம் பார்க்காமல்.
“அதெல்லாம் எதுவும் எதிர்பார்க்கல. கூல்.”

“என் லிமிட்ஸ் தெரிஞ்சிருக்கணும். வற்புறுத்துனது தப்பு. வீட்டுக்கு வந்த கெஸ்ட் கிட்ட கோபப்பட்ருக்கக் கூடாது.”
“ஓ… நான் கெஸ்ட்டா? உன் ஃப்ரெண்டுன்னு நினைச்சிட்டிருந்தனே… இல்லையா?''
“கெஸ்ட்டா வந்துருக்கற ஃப்ரெண்டு.”
“இங்க பேசறது கிச்சன்ல கேக்குமா சத்யா?”
“கத்திப் பேசினாதான் கேக்கும். இப்ப பேசற வால்யூம்ல பேசினா கேக்காது. ரகசியம் சொல்லப் போறியா?”
“உனக்கும் தெரிஞ்ச ரகசியம்தான். உங்கம்மா மனசுல என்ன இருக்குன்னு எனக்குத் தெரியும்.”
“நான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும். அதான?”
“என்னை மருமகளா நினைச்சிப் பார்க்கறாங்க சத்யா.”
“மை குட்னெஸ்! சத்தியமா இது எனக்கு நியூஸ். எங்கிட்ட அப்படில்லாம் எதுவும் உளறினதில்ல. இங்கிதம் தெரியாம ஏதாச்சும் கேட்டு சங்கடப்படுத்திட்டாங்களா?''
“நேரா அப்படி கேக்கல. ஆனா புரிஞ்சுக்க முடியுது.”
“ஸாரி அஞ்சலி. அவங்க…”

“நீ விளக்கம்லாம் சொல்ல வேண்டியதில்ல. என் மனசுல ஏதாச்சும் குழப்பம் இருந்தாதானே சங்கடமா இருக்கும்.”
“உன்னை மறுபடியும் ரகுவோட சேர்த்துவைக்க முடியாதான்னுதான் எங்கிட்ட அடிக்கடி கேட்டுட்டு இருப்பாங்க.”
“நீ சென்னை போறே இல்ல… அப்ப எனக்கு ஒரு ஹெல்ப் செய்றியா சத்யா?”
“சொல்லு.”
“ரகுவோட ஆபீஸ் அட்ரஸ் தர்றேன். இப்பவும் அதே கம்பெனிலதான் இருக்காரான்னு தெரியாது. தேடிக் கண்டுபிடிக்க முடியுமா ரகு?”
“இதைத்தானே நான் கேட்டேன்.”
“நீ கேட்ட நோக்கம் வேற. நான் சொல்ற நோக்கம் வேற.”
“ரகுவோட நம்பர்…”
“அந்த நம்பர்ல இல்ல. மாத்திட்டார்.”


“அவரைக் கண்டுபிடிக்கிறது ஒண்ணும் பெரிய பிரச்சினை இல்ல அஞ்சலி. பாத்து என்ன பேசணும்?”
“கொஞ்ச நாள் பரணிய அவர் வெச்சுக்க முடியுமான்னு கேட்டுப் பாரு. அவர் சூழ்நிலை என்னன்னு எனக்குத் தெரியாது. எப்பப் பாரு டாடி, டாடின்னு அவர் நினைப்பாவே இருக்கான். படிப்புல கவனம் அநியாயத்துக்குக் குறைஞ்சிடுச்சி. அதிகமா கோபப்படறான். அவன் ஃபியூச்சரை நினைச்சா கவலையா இருக்கு.”
“அப்படியே உன் ஃபியூச்சரையும் கொஞ்சம் நினைச்சுப் பார்க்கமாட்டியா அஞ்சலி? நீ என்னை அறைய நினைச்சா அறைஞ்சிடு. ஆனாலும் கேக்கறேன். அணுகுண்டு போட்ட அமெரிக்காவும், பாதிக்கப்பட்ட ஜப்பானும் இப்போ பகை நாடுகள் இல்ல. தீர்க்க முடியாத அளவுக்கு என்னதான் பிரச்சினை உங்களுக்குள்ள?”
கண்களில் நீர் கோர்த்துக்கொள்ள தன் நகங்களைப் பார்த்துக்கொண்டாள்.
“வலிக்கும் சத்யா. கோர்வையா நிறைய சொல்லணும். மறுபடியும் அத்தனையும் நினைச்சுப் பார்க்கறது ரொம்ப வலிக்கும். பாரம் இறக்கிவைக்கிற விஷயமில்ல இது. பாரம் சேர்ந்துக்கும்.”
“சரி. விட்ரு. கதை கேக்கற சுவாரசியத்துக்காக நான் கேக்கலன்னு மட்டும் புரிஞ்சுக்கிட்டா சரி. சென்னை போறப்போ அவசியம் ரகுவை மீட் பண்றேன்” என்றான் சத்யா.

அலையடிக்கும் கடலைப் பார்த்தபடி கடலை கொறித்துக்கொண்டிருந்தான் மதன்.
பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்துடன் கண்ணாடிச் சிறையிலிருந்த சோன் பப்டி விற்றபடி மணியடித்து வண்டி தள்ளிச் சென்றவன் கழுத்தில் கர்ச்சீப் கட்டியிருந்தான்.

பயந்த மனைவியின் கையை அழுத்தமாகப் பிடித்து வற்புறுத்தி அலையில் நிறுத்திய கணவனும், அனுமாரின் வால் நீளத்தின் முடிவில் கொத்து பலூன் சுமந்து நடக்கும் குழந்தையும், ஒருவரை ஒருவர் துரத்திய நண்பர்களும், வெளிச்சம் மறையும்போதெல்லாம் சில்மிஷத்துக்குத் தயாராகும் விரல்களுடன் காதலனும், சிணுங்கியபடி அனுமதிக்கும் காதலியும் ரகுவின் கவனத்தை ஈர்க்கவில்லை.
முழங்கால்களைக் கட்டிக்கொண்டு சிந்தனையுடன் அமர்ந்திருந்தவனின் தோள் தொட்டு, “சாப்ட்டுட்டே யோசியேன்'' என்று காகிதச் சுருளை நீட்டினான் மதன்.
எடுத்துக்கொண்டு காற்றில் அலைக்கழியும் தலை முடியை ஒருபக்கமாக ஒதுக்கிக்கொண்டு, “வயசான
வங்கடா. எப்படிடா தாங்குவாங்க?” என்றான் ரகு.
“ஒரு தடவை தற்கொலை எண்ணம் வந்தவங்களைத் தனியா தங்க விடறது தப்புன்னு டாக்டர் சொன்னாரா இல்லையா? அவ ஹாஸ்பிடல்ல இருக்கறவரைக்கும் ஸேஃப்ட்டி. டிஸ்சார்ஜ் ஆனதும் வீட்ல தனியாதானே இருப்பா? அது நல்லதா? நீயே சொல்லு.”
“பயமா இருக்குடா. அன்னிக்கு அவ கூப்பிட்டதும் நான் உடனே புறப்பட்டுப் போனேன். அதுக்குள்ள அவசரப்பட்டு முட்டாள்த்தனமா… ச்சே!''
“எதுவும் நடக்கல. சந்தோஷப்படுவோம். சப்போஸ் அவளைக் காப்பாத்த முடியாமப் போயிருந்தா? போலீஸ் கேஸ்டா. அவளோட கடைசியா நீதான் பேசினே. பெரிய பிரச்சினை ஆயிருக்கும்.”
“நானே டென்ஷன்ல இருக்கேன். பயமுறுத்தாத மதன்.”

“நான் பிராக்டிக்கலா யோசிக்கிறேன்ப்பா. அவ இனிமே யாராச்சும் துணையோடதான் தங்கியாகணும். உண்மையைச் சொல்லி அவ அம்மாவைக் கூட வெச்சிக்கலாம். இல்ல… வீட்டோட தங்கி வேலை செய்ற மாதிரி ஒரு சர்வென்ட் மெய்ட் ஏற்பாடு செய்.”
“பெரிய செலவுடா அது. ரெண்டாவது… நம்பிக்கையான லேடியா அமையணுமே.”
“அப்போ உன் பொண்டாட்டிக்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டு உன் வீட்லயே கூப்ட்டு வந்து தங்க வெச்சிக்கறியா?”
“டேய்!”
“முடியாதுல்ல? கடைசியா ஒரே ஆப்ஷன்தான். நல்ல லேடீஸ் ஹாஸ்டல்ல அவளைத் தங்கச் சொல்லு!''
“லேடீஸ் ஹாஸ்டல்லதான் தங்கிருந்தா. சாப்பாடு சரியில்ல, ரூம்மேட்ஸ் சரி இல்லன்னுதான் தனியா வீடெடுத்தா.”
“யப்பா… சாமி. இதுக்கு மேல எங்கிட்ட வேற யோசனை எதுவும் ஸ்டாக் இல்லப்பா ராஜா.”
ஒலித்த போனைப் பார்த்த ரகு, “ஹாஸ்பிட்டல்
லேர்ந்துடா. எதுக்குக் கூப்புடறாங்கன்னு தெரியலையே'' என்றபடி ஆன் செய்தான்.

(தொடரும்…)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in