உலகம் சுற்றும் சினிமா - 31: இரு மரணங்களும் பெரும் மர்மங்களும்

‘தி இன்விசிபில் கெஸ்ட்’ (2016)
உலகம் சுற்றும் சினிமா - 31: இரு மரணங்களும் பெரும் மர்மங்களும்

சினிமாவில் பல வகையான கதைக்களங்கள் இருந்தாலும், த்ரில்லர் வகைக் கதைகளுக்கென்று தனி வசீகரம் உண்டு. அடுத்து என்ன நடக்கும் என்று கணிக்க முடியாத நிலையில் ரசிகர்கள், தாங்கள் காண்பது திரைப்படம் எனும் மாய பிம்பம் என்பதை மறந்து அதனுடன் ஒன்றிவிடுவார்கள். எளிதில் ஊகிக்க முடியாத மர்மமும், விறுவிறுப்பும் நிறைந்ததாகத் திரைக்கதையைச் செதுக்கிவிட்டால், படத்தை ரசிகர்கள் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடிவிடுவார்கள். அப்படி ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படம், ‘கான்ட்ராடைம்போ’ (Contratiempo).

2016-ல் ஸ்பானிய மொழியில் வெளிவந்த இந்தப் படம், ஆங்கிலத்தில் ‘தி இன்விசிபில் கெஸ்ட்’ (The Invisible Guest) என்ற பெயரில் வெளியானது. ‘தி பாடி’(2012), ‘மிராஜ்’ (2018) போன்ற த்ரில்லர் படங்களை எடுத்த ஓரியல் பவுலா இந்தப் படத்தை இயக்கியிருந்தார். படத்தின் ஒன்லைன் என்னவோ, ‘ஐ நோ வாட் யூ டிட் லாஸ்ட் சம்மர்’ படம் போன்ற வழக்கமான விபத்து ப்ளஸ் பிளாக் மெயில் வகையறாவைச் சேர்ந்துதான். ஆனால், திரைக்கதை உத்திகள் மூலம் ரசிகர்களை இருக்கை நுனிக்குக் கொண்டுவர முடியும் என்று நிரூபித்த படம் இது.

காற்றில் கலந்த கொலைகாரன்

படத்தின் நாயகனான ஏட்ரியன், வளர்ந்துவரும் தொழிலதிபர். அன்பான மனைவி, அழகான குழந்தை என நிறைவான வாழ்க்கை வாழும் ஏட்ரியன், சிறந்த தொழிலதிபருக்கான விருது பெறும் அளவுக்குச் சிறப்பாக முன்னேறி வருவான். இப்படி வெளிச்சம் நிறைந்த வாழ்க்கைக்கு இடையில், ஏட்ரியனுக்கு ஒரு இருள் பக்கமும் இருக்கும். அவனுக்கும் லாவ்ரா என்ற பெண்ணுக்கும் இடையில் திருமண உறவைத் தாண்டிய உறவு இருக்கும். ஒரு முறை இருவரும் ஆளில்லாத காட்டுப் பகுதியில் காரில் செல்லும்போது விபத்து ஏற்பட்டுவிடும். எதிரில் வந்த காரில் இருந்த இளைஞன் அந்த விபத்தில் இறந்துவிடுவான்.

பதறிப்போகும் ஏட்ரியனும் லாவ்ராவும் அவனது உடலையும் காரையும் யாருக்கும் தெரியாமல் அப்புறப்படுத்திவிடுவார்கள். சில மாதங்கள் கழித்து, இருவருக்கும் அநாமதேய அழைப்புகள் வரத் தொடங்கும். அவர்களை அழைத்துப் பேசும் நபர், இருவரின் ரகசியமும் தனக்குத் தெரியும் என்றும், ஒரு லட்சம் யூரோ பணத்தை எடுத்துக்கொண்டு ஊருக்கு வெளியில் இருக்கும் ஹோட்டலுக்கு வருமாறும் கட்டளையிடுவான். அவன் சொன்னபடி இருவரும் ஹோட்டலுக்குச் செல்வார்கள். ஹோட்டல் அறையில் இருவரும் காத்திருக்கும் சமயம், ஏட்ரியனைப் பின்னாலிருந்து யாரோ தாக்கிவிட்டு, லாவ்ராவைக் கொலைசெய்துவிட்டுத் தப்பிவிடுவார்கள். ஆனால், போலீஸ் வந்து பார்க்கும்போது அந்த அறை உள்பக்கமாக சாத்தப்பட்டிருக்கும். ஜன்னல்களும் திறக்க முடியாத வகையில் பூட்டப்பட்டிருக்கும். ஒரு லட்சம் யூரோ கரன்ஸியும் அங்கேயே இருக்கும்.

இதனால் இந்தக் கொலையை ஏட்ரியனே செய்திருக்கக் கூடும் என்ற சந்தேகத்தில் போலீஸார் அவனைக் கைது செய்வார்கள். பிணையில் வெளிவரும் ஏட்ரியன், தன் ஆஸ்தான வழக்குரைஞர் ஃபிலிக்ஸின் உதவியை நாடுவான். அவரோ திறமைவாய்ந்த பெண் வழக்குரைஞரான விர்ஜினியா குட்மேனைப் பரிந்துரைப்பார். ஏட்ரியன் தங்கியிருக்கும் அறைக்குச் சென்று அவனைச் சந்திப்பாள் விர்ஜினியா குட்மேன். என்ன நடந்தது என்பதை ஏட்ரியன் அவளிடம் விவரிப்பதில்தான் கதையே தொடங்கும். படத்தின் நிகழ்வுகளில் ஏற்படும் மாற்றங்களை இருவரின் சம்பாஷணை வாயிலாகவே கடத்தியிருப்பார் இயக்குநர் ஓரியல் பவுலா.

நான் – லீனியர் திரைக்கதை

இரண்டு மரணங்கள் நடக்கின்றன. விபத்தில் அந்த இளைஞன் மரணமடைந்ததில் ஏட்ரியனின் பங்கு அதிகமா, லாவ்ராவின் பங்கு 
அதிகமா, லாவ்ராவைக் கொன்றது யார், இரண்டு மரணங்களுக்குமான தொடர்பு என்ன என்ற அனைத்துக் கேள்விகளுக்கும் படத்தில் பதில் இருக்கும். சிக்கலான இந்தக் கதையைத் திறமையான கதைசொல்லல் மூலம் காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குநர். கடைசி நொடி வரை நம்மால் கணிக்கவே முடியாதபடி உருவாக்கப்பட்ட திரைக்கதை இந்தப் படத்தின் விறுவிறுப்பைக் கூட்டும்.

ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் கதையாக அல்லாமல், நான் - லீனியர் முறையில் காட்சிகளை முன்னும் பின்னும் மாற்றி அடுக்கி, அதேசமயம் குழப்பமில்லாத தெளிவான கதையாக உருவாக்கியது தான் இந்தப் படத்தை உலக சினிமா ரசிகர்கள் கொண்டாடுவதற்குக் காரணம்.

எடுபடாத இந்தியப் பிரதிகள்

இந்தப் படத்தை அதிகாரபூர்வமாகத் தழுவி எடுக்கப்பட்ட ‘பத்லா’ எனும் இந்திப் படம், அமிதாப் பச்சன், தாப்ஸி நடிப்பில் 2019-ல், வெளியானது. இதே கதை தெலுங்கில் ‘எவரு’ என்ற பெயரில் அடிவி சேஷ், ரெஜினா கெஸண்ட்ரா நடிப்பில் அதே ஆண்டில் வெளியானது. இந்த இரண்டு படங்களிலும், இந்திய ரசிகர்களுக்காகச் சில வணிக அம்சங்கள் சேர்க்கப்பட்டதால், திரைக்கதையில் விறுவிறுப்பு தடைப்பட்டிருப்பதை உணர முடிகிறது.

ஒரே த்ரில்லர் கதையை மூன்று மொழிகளில் பார்க்க வேண்டும் என்று விரும்பினால், மூலப்படைப்பான ‘தி இன்விசிபில் கெஸ்ட்’ படம் பார்த்துவிட்டு இந்த இரண்டு படங்களைப் பார்ப்பதே நல்லது.

ரஷ்யாவின் தலைசிறந்த எழுத்தாளர்களான ஆண்டன் செகாவ், ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி ஆகியோரின் கதைகளைத் தழுவி எடுக்கப்பட்ட துருக்கிய திரைப்படத்தைப் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in