மர்ம மரணமும் இரண்டு ரொட்டித் துண்டுகளும்

மர்ம மரணமும் இரண்டு ரொட்டித் துண்டுகளும்

கணேசகுமாரன்
ganeshkumar.k@kamadenu.in

கிரேக்கப் புனைவு கதாபாத்திரங்களின் வழியே விறுவிறுப்பான நாவலைத் தந்திருக்கும் அண்டனூர் சுரா வெல்வது சமகால அரசியலின் அசல் நிகழ்வுகளை புனைவில் சாமர்த்தியமாக நுழைத்திருப்பதன் மூலம். மன்னர் மெனிலாஸ் இறந்து விட்டாரா இல்லையா என்ற கேள்வியுடன் தொடங்கும் நாவல் கடைசி பத்துப் பக்கத்தில் தனது மர்ம முடிச்சை அவிழ்த்து வாசகரை ரிலாக்ஸாக்குகிறது.

மெனிலாஸ், மெகம்னான், ஹெலன், தெட்டிஸ், அப்லாஸ், அப்பல்லோ, சிந்தி...என்ற கிரேக்கப் பெயர்களின் வார்ப்பில் சொல்லப்படும் மாய யதார்த்தவாத நாவலான அப்பல்லோவில்தான் சமாதிக்குள்ளிருந்து குதிரைக் குளம்படிகள் கேட்கிறதா என்று செவி வைத்துக் கேட்கப்படுகிறது. ஆடம்பரமாய் நிகழும் மெனிலாஸின் திருமணத்தால் அண்ணன் தம்பிக்குள் பிரச்சினை வந்து நாடு இரண்டாகிறது. வெறும் சுவாரசிய அடுக்குகளைத் தாண்டி ஆதிக்கவாதிகளின் பார்வையில் மருத்துவம் என்பது என்னவாகப் பார்க்கப்பட்டது என்பதில் தனித்து நிற்கிறது நாவல்.

சொல்லப்போனால் மெனிலாஸின் தாய் தெட்டிஸுக்கு நிகழும் பிறப்பு இரகசிய சம்பவமே வேறு வடிவில் மெனிலாஸின் மகனான அப்லாஸுக்கும் நிகழ்கிறது. ஃபேன்டஸித்தனமான கதை சொல்லல் முறையில் வரும் மருத்துவமா மந்திரமா என்ற கேள்விக்கான பதிலாய் மருத்துவக் குடிகள் எரிக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள். அதன் அல்லது அவர்களின் சாப வழியே மெனிலாஸுக்குத் தொற்றும் நோயாகிறது. அந்நோய் தீர்க்கும் வழியில் நிகழ்வதோ மெனிலாஸின் மரணத்துக்கான சாபம் என்று ஒன்றை ஒன்று தொட்டுத் தன்னை எழுதிச் செல்லும் நாவல் விறுவிறுப்பான வரலாற்றுப் புனைவில் தனி விறுவிறுப்பைத் தருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in