ஹாட் லீக்ஸ்: தனபாலுக்கு தர்மசங்கடம்

ஹாட் லீக்ஸ்: தனபாலுக்கு தர்மசங்கடம்

தனபாலுக்கு தர்மசங்கடம்

அவிநாசி சட்டமன்றத் தொகுதி எப்போதுமே அதிமுகவின் கோட்டை. இதன் தற்போதைய எம்எல்ஏ-வாக இருக்கிறார் சபாநாயகர் பா.தனபால். சபாநாயகராக இருப்பதாலோ என்னவோ இவரால் தொகுதியை அவ்வளவாய் கண்கொண்டு கவனிக்க முடியவில்லை. இதனால், அவிநாசிக்குள் திரும்பிய பக்கமெல்லாம் இப்போது அதிமுக அதிருப்தி அலைகள். ‘குடிநீர் பிரச்சினைக்கு நடவடிக்கை இல்லை. குறைகளைச் சொல்ல வந்தால் ஆளைப் பார்க்கமுடியவில்லை’ என்றெல்லாம் தனபாலுக்கு எதிராக பிரச்சினைகள் வரிசை கட்டும் நிலையில், சுண்டக்காம்பாளையம் என்ற ஊருக்கு தார்சாலை அமைக்கும் பணியின் பூமிபூஜைக்காகக் கடந்த 29-ம் தேதி அங்கு வந்தார் தனபால். அப்போது அவரை முற்றுகையிட்ட ஆதிதிராவிடர் காலனி மக்கள், “மாட்டோம்... மாட்டோம்... தேர்தலில் அதிமுகவுக்கு ஓட்டுப்போட மாட்டோம்...” எனத் துணிந்து கோஷமிட்டனர். அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்குள் போலீஸார் வெடவெடத்துவிட்டனர். ஆனாலும் எதுவுமே நடக்காதது போல் சலனமே இல்லாமல் பூமி பூஜையில் பங்கேற்றுவிட்டு கிளம்பினார் தனபால். சபையையே சமாளிக்கிறவருக்கு இதெல்லாம் எம்மாத்திரம்?

பத்மஸ்ரீயும் பங்காரு சர்ச்சையும்!

தனக்கு பத்மஸ்ரீ விருதுஅளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கும் சாக்கில், மக்களை பாஜகவுக்கு வாக்களிக்குமாறு தனது அறிக்கையில் இடைச்செருகல் செருகியிருந்தார் பங்காரு அடிகளார். அதே அறிக்கையில், “எனக்குபத்மஸ்ரீ விருது அறிவித்ததற்காக இதை நான் கூறவில்லை. எனக்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் இருக்கிறார்கள். அவர்களின் அன்புக்கு முன்னால் இந்த விருது கால்தூசுக்கு ஈடாகாது” என்று பத்ம விருதை பங்காரு அடிகளார் கால் தூசுக்கு ஒப்பிட்டிருந்தது இப்போது சர்ச்சையாகிக் கொண்டிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in