டெல்லியில் இன்று இந்தியா-வங்கதேசம் முதலாவது டி20 போட்டி நடக்குமா?

டெல்லியில் நிலவும் கடுமையான காற்றுமாசு, புகையால் இந்தியா, வங்கதேசம் இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் நிலவும் கடுமையான காற்றுமாசு, புகையால் இந்தியா, வங்கதேசம் இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

டெல்லியில் கடந்த இரு நாட்களாகக் காற்று மாசின் அளவு உச்சக்கட்ட அபாயத்தையும் தாண்டிச் சென்றுவருகிறது. இதற்கிடையே நேற்று சிறிதுநேரம் பெய்த மழையால் நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளது.

இன்று மாலை 6 மணிக்கு மேல் இந்தியா, வங்கதேசம் இடையே டி20 போட்டி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடக்கிறது. இந்த மோசமான சூழலில் பந்துவீச்சாளர்கள் பந்துவீசினால் பேட்ஸ்மேன்கள் கண்களுக்குப் பந்து தெரியுமா என்ற சந்தேகம் ஆடுகள வடிவமைப்பாளர்களுக்கு எழுந்துள்ளது.

டெல்லியில் கடந்த சில நாட்களாகக் காற்று, புகை மாசு உச்சக் கட்டத்தையும் தாண்டி இருக்கிறது. காற்றுமாசுக் குறியீடு இன்று 600 புள்ளிக்குளுக்கு மேல் சென்று மக்கள் சுவாசிக்கத் தகுதியற்ற நிலையை எட்டியுள்ளது.இதனால், வரும் 5-ம் தேதிவரை டெல்லியில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறையும், எந்தவிதமான கட்டிடப் பணிகளும் செய்வதற்குச் சுற்றுச்சூழல் மாசுக்கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சூழலில் இந்தியா, வங்கதேசம் இடையிலான இன்றைய முதலாவது டி20 போட்டியை இன்று நடத்துவது சந்தேகத்துக்குரிய விஷயமாக மாறியுள்ளது. வங்கதேச, இந்திய அணி வீரர்களும் முகத்தில் சுவாசக் காப்பு அணிந்துதான் பயிற்சியில் ஈடுபட்டார்கள். கடந்த 3 நாட்களாக புகை மாசு குறையாமல் இருந்து வருகிறது, இன்று நிலைமை மிகவும் மோசமாகி இருக்கிறது.

இதை கருத்தில் கொண்டு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவைச் சந்தித்து நேற்று முன்தினம் பேசியுள்ளார். அப்போது, டெல்லியின் காற்று மாசு, புகைமூட்டம் ஆகியவற்றுக்கிடையே விளையாட முடியுமா என்று இருவரும் ஆலோசித்துள்ளனர். அப்போது எந்தவிதமான சிக்கலும் இல்லை விளையாடிவிடுவோம் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், கடந்த இரு நாட்கள் இருந்த சூழலைக் காட்டிலும் இன்று டெல்லி காற்று மாசு அதிகமாகவும், புகைமூட்டமும் அதிகமாக இருப்பதால், போட்டியின் போது பல்வேறு சிக்கல்கள் எழக்கூடும் என்று ஆடுகள வடிமைக்கப்பாளர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

இரவு நேரத்தில் புகையும், காற்று மாசும் அதிகரிக்கும். அந்த நேரத்தில் பந்துவீச்சாளர்கள் பந்துவீசும் போது மின் விளக்குகள் இருந்தாலும் பேட்ஸ்மேன்களுக்கு பந்து தெரிவது கடினம், வீரர்களுக்கு கண் எரிச்சல், சுவாசிப்பதில் சிரமம், பீல்டிங் செய்ய ஓடிவிட்டு மூச்சிரைக்கும் போது சுவாசிப்பதில் சிக்கல் எழலாம் என்று தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து டெல்லி கிரிக்கெட் மைதானத்தின் அதிகாரிகள் கூறுகையில், " டெல்லியின் காற்று மாசு கடந்த இரு நாட்களைக் காட்டிலும் இன்று மிக மோசமாக இருக்கிறது. அதிலும் நேற்று மாலை பெய்த மழையால் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது.

மாலை நேரத்தில் போட்டி நடக்கும் போது பீல்டர்களுக்கும், பேட்ஸ்மேன்களுக்கும் கண் எரிச்சலைக் கொடுக்கலாம் என்று அஞ்சுகிறோம். ஒருவேளை சூரிய வெளிச்சம் நன்றாக இருந்து புகை வெளியேறினால் மட்டுமே நிலைமை சீராகும். இல்லாவிட்டால் போட்டி நடத்துவது மிகவும் கடினம்தான். இந்த விஷயத்தில் நாங்கள் எந்த உதவியும் செய்ய இயலாதவர்களாகவே இருக்கிறோம்.

போட்டியை நடத்தும்போது புகை மூட்டம், காற்று மாசு அதிகமாக இருந்தால் தொடர்ந்து போட்டி நடத்துவது குறித்து போட்டி நடுவர்,கள நடுவர்கள்தான் முடிவு செய்வார்கள். ஒருவேளை இப்போது இருக்கும் நிலை தொடர்ந்தால், போட்டியை நடத்துவது ஆலோசனைக்கு உட்பட்டதாகஇருக்கும்.

ஆனால், மாலைநேரத்திலும், இரவு நேரத்திலும் சூழல் எவ்வாறு மாறும் என்று இப்போது கூற இயலாது. ஆனால், இப்போது டெல்லியில் இருக்கும் சூழலில் நேர்மையாகக் கூறினால் போட்டி நடத்துவது சற்று கடினம்தான்" எனத் தெரிவித்தார்

இதனால்,போட்டி நடக்கும் முன் டெல்லியில் உள்ள சூழல் குறித்து ஆய்வு செய்தபின்தான் முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

இதற்கிடையே போட்டி நடத்துவதில் எந்தவிதமான இரண்டாம் கருத்துக்கே இடமில்லை. திட்டமிட்டபடி போட்டி நடக்கும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளதும் கவனிக்கத்தக்கது.

ஐஏஎன்எஸ்

READ SOURCE