மலச்சிக்கலை தவிர்க்க பொதுவான வழிகள் என்னென்ன?

செய்திப்பிரிவு

மலச்சிக்கலைத் தவிர்க்க, நார்ச்சத்து நிறைந்த உணவு வகைகள் அவசியம். கோதுமை, கேழ்வரகு. தினை, வரகு, கொள்ளு போன்ற தானிய உணவுகள் நல்லது.

வாழைத்தண்டு, காரட், முள்ளங்கி, முட்டைக்கோஸ், பாகற்காய், புடலங்காய், அவரைக்காய், கொத்தவரங்காய் போன்ற காய் வகைகளும் நல்லது.

பொட்டுக்கடலை, கொண்டைக்கடலை, மொச்சை போன்ற பருப்பு வகைகள், கீரைகளிலும் நார்ச்சத்து அதிகம்.

ஆரஞ்சு, கொய்யா, மாதுளை, ஆப்பிள், அத்திப்பழம், பேரீச்சை, வாழைப்பழம், மாம்பழம் போன்ற பழ வகைகளில் நார்ச்சத்து அதிகம்.

மிளகு, ஓமம், கொத்துமல்லி, மிளகாய் போன்றவற்றிலும் நார்ச்சத்து மிகுதி. இவற்றில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை அதிகப்படுத்த வேண்டும்.

தினமும் 3 லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும். பால், பால் தொடர்பான உணவு வகைகளையும் குறைத்துக் கொள்ளுங்கள்.

காபி, தேநீர், மென்பானங்கள் குடிப்பதையும் குறைத்துக் கொள்ள வேண்டும். நீண்ட நேரம் தொடர்ந்து ஒரே இடத்தில் உட்காரக் கூடாது.

தினமும் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது.

மலம் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு வந்ததும் மலம் கழித்துவிடுகிற பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும்.

இந்தப் பொதுவான வழிகளைப் பின்பற்றியும் மலச்சிக்கல் நீடித்தால், உங்களுக்குக் குடல் பரிசோதனை தேவை. மருத்துவரை தவறாமல் நாடுங்கள்.