செய்திப்பிரிவு
தலை சுற்றுவதுபோல் உணர்ந்தால், உடனே தரையில் படுத்துக்கொள்ளுங்கள். கால்களைச் சற்று உயரமாக வைத்துக்கொள்ளுங்கள்.
படுக்க முடியாத போது தரையில் உட்கார்ந்துகொண்டு, உடலை முன்பக்கமாகச் சாய்த்து, முழங்கால்களை மடக்கி, கால்களுக்கு இடையில் தலையை வைத்துக்கொள்ளுங்கள்.
படுக்கையை விட்டு எழுந்திருக்கும்போது நேராக எழுந்திருக்காமல், முதலில் பக்கவாட்டில் படுத்துக்கொண்டு அந்தப் பக்கவாட்டிலேயே எழுந்திருங்கள். எழுந்தவுடனேயே நடந்துசெல்ல வேண்டாம்.
படுக்கையில் சிறிது நேரம் உட்கார்ந்த பிறகு நடந்தால் தலை சுற்றல் ஏற்படாது. எழுந்ததும் குனியவோ சட்டென்று திரும்பவோ முயலாதீர்கள்.
தலைக்குத் தலையணை வைக்காதீர்கள். உடலின் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு உடனடியாக மாறாதீர்கள்.
உதாரணத்துக்கு, புரண்டு படுக்கும்போது திடீரெனப் புரளாதீர்கள். உடல் திரும்பும்போது தலையை மட்டும் திருப்பாதீர்கள். உடலோடு திரும்புங்கள்.
மாடிப்படிகளில் ஏறி, இறங்குவதைக் குறைத்துக்கொள்ளுங்கள். ரோலர் கோஸ்டர் போன்ற ராட்டினங்களில் சுற்றுவதைத் தவிருங்கள். | தொகுப்பு: கு.கணேசன்