செய்திப்பிரிவு
கோடைக்காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருள்படுத்தாமல் உள்ளூரில் சுற்றுலாவைத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால், இது உங்களுக்காகத்தான்...
அலைச்சறுக்கு: சென்னையை அடுத்த கோவளம், மாமல்லபுரம் ஆகிய கடற்கரைப் பகுதிகள். அலைச்சறுக்கு சாகச விளையாட்டை அனுபவிக்கச் சிறந்த இடங்கள் இவை.
சீறும் கடல் அலைகளைக் கிழித்துக்கொண்டு மிதப்பது போன்று தனித்துவமான அனுபவத்தைத் தரும் அலைச்சறுக்கு விளையாட்டை, இந்தக் கோடையில் தவறவிடக் கூடாது.
மலைப் பயணம்: மலையேற்றங்கள் செய்வதற்கெனத் தமிழ்நாட்டில் முக்கியமான இடம் வெள்ளகவி. அழகான மலையும் அருவியும் சேர்ந்து அமையப்பெற்ற இடம் இது. பலரும் அறிந்திடாத இடமும்கூட.
கொடைக்கானலிலிருந்து 6 கி.மீ. தொலைவில் வட்டக்கனல், அங்கிருந்து மேலும் 6 கி.மீ. தூரம் சென்றால், அழகான வெள்ளகவி கிராமத்தைத் தரிசிக்கலாம்.
வழி சவாலான பாதையாக இல்லாதது இன்னொரு சிறப்பம்சம். வெள்ளகவி செல்வோர், கும்பக்கரை அருவியையும் பார்க்கலாம். அருமையான ‘வியூ-பாய்ண்ட்’ பார்ப்பதற்கும் வெள்ளகவி சரியான தேர்வு.
ஒளிப்படச் சுற்றுலா: இப்போதெல்லாம் சுற்றுலா செல்வதே ஒளிப்படம் எடுக்கவும், யூடியூப் வீடியோ பதிவேற்றவும் ஃபேஸ்புக், இன்ஸ்டகிராமில் ரீல்ஸ் போடுவதற்காகவும் என்றாகிவிட்டது.
இது போன்றவர்களுக்கு ஏற்ற இடமாக கழுகுமலை உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலிருந்து 22 கி.மீ. தொலைவில் கழுகுமலை அமைந்துள்ளது.
ஒரே பாறையில் செதுக்கப்பட்ட ‘வெட்டுவான்’ கோயிலும் இங்குதான் உள்ளது. அழகும் வரலாறும் புதைந்து கிடக்கும் இடம்தான் கழுகுமலை.
‘ரீல்ஸ்’ பிரியர்களுக்கு இது சரியான இடம். ‘சிற்பிகளின் சொர்க்கம்’ என்று அழைக்கப்படும் இந்தக் கழுகுமலை அட்டகாசமான ‘ஃபோட்டோஷூட்’டுக்களுக்கான இடமாக உள்ளது. | தொகுப்பு: ராகா