ஏமாற்றங்களை குழந்தைகளுக்கு பழக்குவீர்... ஏன்?

செய்திப்பிரிவு

எதிர்பார்ப்புகள் பொய்க்கும் சூழல்களை இன்றைய பெற்றோர் குழந்தைகளுக்குத் தருவதே இல்லை. 

பிள்ளைகள் ஏமாற்றம் அடையவே கூடாது என்று பார்த்துப் பார்த்து வளர்ப்பதுதான் சிறந்தது என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

`இல்லை’ என்று சொல்லாமல் குழந்தைகளை வளர்ப்பதே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார்கள். இதனால் குழந்தைகள் மன அளவில் கடுமையாக பலவீனப்படுகிறார்கள்.

நிராகரிப்பும், நெருக்கடியும் மனத்தை எப்படி உறுதிப்படுத்துகின்றன என்பதை அறியவிடுவதே இல்லை. அதையும் தாண்டி வரும் துன்பத்தை பெற்றோர்களே ஓடிவந்து துடைத்துவிடுகிறார்கள்.

இதனால், பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது ஏற்படும் உணர்வு மாற்றங்கள் மனத்தை எப்படிப் பக்குவப்படுத்தும் என்பது தெரியாமல், ஒரு சந்ததி வளர்ந்துவருகிறது.

இந்த இளம் சந்ததி சந்திக்கும் முதல் அமிலச் சோதனை திருமண உறவுதான். பொய்க்கும் எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தைத் தரும். ஏமாற்றம் கோபத்தை கொடுக்கும்.

கோபம் எதிராளியைக் காயப்படுத்தும். காயப்பட்ட எதிராளி காயப்படுத்துவார். இப்போது எதிர்பார்ப்புகள் பற்றி பேச்சு இருக்காது. 

மிகுந்த அன்பும், புரிதலும், நிதானமும் இருந்தால் இந்த குறைகளும் சண்டைகளும் பின்னுக்குத் தள்ளப்பட்டு, அங்கு உறவு பாதுகாக்கப்படுகிறது. 
 
 

பயம் - கோபத்துடன் எடுக்கப்படும் முடிவுகள் பெரும்பாலும் தவறாகத்தான் இருக்கும். முக்கியமாக எதிர்பார்ப்புகளை குறைத்தல் மிகுந்த மனவலிமையைக் கொடுக்கும்.  
 

உள்ளும் புறமும் உள்ள இரைச்சலை நீக்கிப் பந்தில் கவனம் வையுங்கள். சிக்ஸர் அடிக்கலாம். உங்கள் உறவு விளையாட்டின் பந்து, அன்புதான்! | கைடன்ஸ்: டாக்டர் ஆர்.கார்த்திகேயன்