செய்திப்பிரிவு
குளிர்பானம் என்பது அதிக அளவில் ‘ஃபிரக்டோஸ்’ எனும் சர்க்கரையும் கார்பன்-டை-ஆக்சைடும் கலக்கப்பட்ட ஒரு பானம். இதில் எவ்வித ஊட்டச்சத்தும் இல்லை.
குளிர்பானத்தைக் குடிப்பதால் ஆற்றலும் கிடைப்பதில்லை. மிக முக்கியமாக தாகம் தணிவதும் இல்லை. குளிர்பானங்களின் சுவைக்காக காஃபீன் சேர்க்கிறார்கள்.
இனிப்பை நிலைப்படுத்த சிட்ரிக் அமிலம், பாஸ்பாரிக் அமிலம் போன்றவற்றைக் கலக்கிறார்கள். வண்ணமூட்டுவதற்காக கேராமல், பீட்டா கரோட்டினைப் பயன்படுத்துகிறார்கள்.
அஸ்பர்டேம் போன்ற செயற்கைச் சுவையூட்டிகள், நிறமூட்டிகள், பதப்படுத்தும் வேதிப்பொருட்கள் ஆகியவை அதிக அளவில் சேர்க்கப்படுகின்றன.
குளிர்பானங்களில் சேர்க்கப்படும் பொருட்கள் நம் உடல் உறுப்புகளுக்கு ஆபத்தைத் தரக்கூடியவை. ‘ஃபிரக்டோஸ் கார்ன் சிரப்’ எனும் சர்க்கரை, ரத்தத்தில் கலக்கிறது.
250 மி.லி குளிர்பானத்தில் 10 டீஸ்பூன் அளவு சர்க்கரை உள்ளது. இது ரத்தச் சர்க்கரையை அதிகரிக்கிறது. ‘டைப் 2’ நீரிழிவு அதிகரிக்க இதுவும் ஒரு காரணம் என்கிறது ஆய்வு.
தினமும் குளிர்பானம் குடிக்கும் குழந்தைகளில் 60% பேர் ஒன்றரை ஆண்டுகளில் உடல் பருமன் பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர்.
சிறுநீரகத்தில் கற்கள் உருவாகவும் குளிர்பானம் ஒரு காரணமாகிறது. இரைப்பைப் புண், குடற்புண் அச்சுறுத்தலும் அதிகம். | கைடன்ஸ்: பொதுநல மருத்துவர் கு.கணேசன் |