‘நிலக்கடலை’ ஏழைகளின் சத்துப்பொருள்... ஏன்?

செய்திப்பிரிவு

புரதம், கொழுப்புச் சத்துகளைக் குறைந்த செலவில் தரும் தாவரச் சத்துப் பொருட்களில் முக்கியமானது நிலக்கடலை. இது ஏழைகளின் சத்துப்பொருள்.

நிலக்கடலையில் புரதம் (26%), கொழுப்பு (75%), கொலின், பாஸ்பரஸ், வைட்டமின் பி தொகுதிகள் அதிகம் உள்ளன. தயமின், நியாசின் வைட்டமின்களும் நார்ச்சத்தும் அதிகம் உள்ளன.

100 கிராம் நிலக்கடலை 570 கலோரி ஆற்றலைத் தரக்கூடியது. உடலுக்கு உடனடியாக ஆற்றல் தேவைப்படுபவர்களும் புரதம் தேவைப்படுபவர்களும் இதைச் சாப்பிடலாம்.

வளரும் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைந்தோர், குறைந்த உடல் எடை கொண்டோர், தாய்மார்கள், மாணவர்கள் தினமும் 100 கிராம் அளவுக்கு நிலக்கடலை சாப்பிடலாம்.

உடல் பருமன் கொண்டவர்கள் கூடக் குறைந்த அளவில் நிலக்கடலைச் சாப்பிடலாம். ரத்தக் கொழுப்பு மிக்கவர்கள், வாயுப் பிரச்சினை உள்ளவர்களுக்கு இது ஆகாது.

எச்சரிக்கை: ஈரமான அல்லது கெட்டுப்போன நிலக்கடலையில் ஒருவித பூஞ்சைக் கிருமி வளரும். இது ஒவ்வாமையை ஏற்படுத்தும். நஞ்சாக மாறும். கல்லீரலைப் பாதிக்கும்.

பச்சை நிலக்கடலையைச் சாப்பிடாதீர்கள். அதை அவித்து அல்லது வறுத்துச் சாப்பிடுவதே நல்லது. | குறிப்புகள்: பொதுநல மருத்துவர் கு.கணேசன்.