செய்திப்பிரிவு
வெற்றிலைக் கொடிகள் பற்றி ஏற ஆதாரமாகவும், பயிர்களுக்கான வேலித் தாவரமாகவும் பயிரிடப்படும் அகத்தி, பித்தம் போக்கும் நற்கீரையாகப் பார்க்கப்படுகிறது.
அகத்தில் இருக்கும் தீயை (அகம், தீ) அணைக்கும் இதன் பண்பை மையப்படுத்தியதே இதற்கான பெயர்க் காரணம் எனலாம்.
தாய்லாந்தில் இதன் இலைகளையும் மலர்களையும் ஆவியில் வேகவைத்து உருவாக்கப்படும் உணவு வகை பிரபலமானது.
தேங்காயை மையமாக வைத்துத் தயாரிக்கப்படும் சுவையான குழம்பு வகையில் அகத்திக் கீரையைச் சேர்க்கும் வழக்கம் சிங்கள மக்களிடத்தில் உண்டு.
அகத்திக் கீரையைப் பிரட்டல், பொரியல், சூப் என ஏதாவதொரு வகையில் சமைத்து, ரசித்துச் சாப்பிட தனித்துவமான ஊட்டங்கள் உடலில் தங்கும்.
பருப்பு ரகங்களோடு அகத்திக் கீரையைச் சேர்த்து ஊட்டமிக்க கீரைக் குழம்பைத் தயாரிக்கலாம்.
மலத்தை நன்றாக இளக்குவதோடு, மலத்தை முழுமையாக வெளித்தள்ளும் செயல்பாடு அகத்திக் கீரைக்கு உண்டு.
மருந்துகளை முறிக்கும் செய்கை கொண்ட அகத்திக் கீரையை மருந்துகள் உட்கொள்ளும் காலத்தில் தவிர்க்க வேண்டிய பத்தியப் பொருளாகச் சுட்டுகிறது சித்த மருத்துவம்.
அதிகமாகச் சாப்பிட லேசான தோல் நோய் அறிகுறிகளை உண்டாக்கலாம் என்பதால் அகத்திக் கீரையை அளவோடு சாப்பிட வேண்டும்.
அளவுக்கு மிஞ்சும்போது அகத்தியும் நஞ்சே. மாதம் ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டும் அகத்தியைச் சாப்பிடும் பழக்கம் ஏற்பட்டிருக்கலாம்.
வயிற்றுப் புண், வாய்ப் பகுதியில் ஏற்படும் புண்களின் வீரியத்தைக் குறைக்கவும் அகத்திக் கீரை உதவுகிறது.
வாந்தி, குமட்டல் அடிக்கடி ஏற்படுபவர்கள், பித்த உடல் கொண்டவர்கள் தவிர்க்காமல், அகத்திக் கீரையை உணவாகப் பயன்படுத்த வேண்டும்.
அகத்திக் கீரைக்கு, நுரையீரல் சார்ந்த தொற்று, சிறுநீரகப் பாதையில் ஏற்படும் தொற்றுக்கிருமிகளின் பெருக்கம் போன்றவற்றை அழிக்கும் ஆற்றல் உள்ளது. | தகவல்கள்: டாக்டர் வி.விக்ரம்குமார்