செய்திப்பிரிவு
தினமும் பல மணி நேரம் அலைபேசியில் இலக்கின்றி ரீல்களையும் வீடியோக்களையும் பார்த்துக்கொண்டே இருக்கிறீர்களா? உங்களுக்கு ‘மூளை அழுகல்’ பாதிப்பு இருக்கக்கூடும்.
மூளை என்ன முட்டைக்கோஸா அழுகிப் போவதற்கு என்பவர்களுக்கு, மூளை அழுகுதல் எனப் பொருள்படும் ‘Brain Rot’ என்கிற சொல்லை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை. தேர்வு செய்திருக்கிறது.
மூளை அழுகல் என்கிற சொல் மூளையின் செயல்திறன்கள் குறைவதைத்தான் குறிக்கிறது. உணர்வுகளில் ஏற்படும் பாதிப்புகளை இச்சொல் குறிக்கிறது.
அறிகுறிகள்: மூளை அழுகலில் மிக முக்கியமான அறிகுறி கவனச் சிதறல். ஒரு விஷயத்தில் சிறிது நேரத்திற்கு மேல் கவனம் குவிக்க முடியாமல் போய்விடும்.
இதனால், தொடர்ச்சியாக எதையும் செய்யவோ, வாசிக்கவோ, எழுதவோ முடியாமல் அடிக்கடி நமது கவனம் வேறுபக்கம் சென்றுகொண்டே இருக்கும். விளைவு?
ஆழமாகச் சில விஷயங்களில் கவனம் செலுத்துவதற்குப் பதில் மேலோட்டமாக நமது கவனம் சிதறுகிறது. இதனால் ஆராய்ந்து சிந்திக்க முடியாது என்கின்றன ஆய்வுகள்.
காரணம் என்ன?: பல காலம் பயன்படுத்தாமல் இருந்தால் கை கால்களில் உள்ள தசைகள் வலுவிழப்பைதப் போன்றே மூளை நரம்பிணைப்புகளும் வலுவிழந்து திறன்கள் குறைகின்றன.
தவிர்க்கும் வழிகள்: திறன்பேசிகள், சமூக ஊடகங்கள் பார்க்கும் நேரத்தை நெறிப்படுத்தி ஒரு வரைமுறைக்குள் கொண்டுவர வேண்டும். குறிப்பிட்ட நேரம் மட்டுமே பார்க்க வேண்டும்.
புத்தகங்கள் வாசிப்பது (அச்சுப் புத்தகம்), நாளிதழ்கள் வாசிப்பது, குறுக்கெழுத்துப் புதிர்கள் போன்றவை நமது மூளைக்கு வேலை கொடுப்பவை.
எல்லா விஷயங்களையும் அலைபேசியில் பதிந்து வைக்காமல் நினைவில் வைக்கவும் பழகுங்கள். பத்து, இருபது நபர்களின் அலைபேசி எண்களை மனப்பாடம் செய்யப் பழகுங்கள்.
முக்கியமாக உடற்பயிற்சி செய்வதும் நல்ல தூக்கமும் மூளையைச் சுறுசுறுப்பாக வைக்க உதவும். அழகான மூளையை அழுக விடாமல் காக்கலாம். | கைடன்ஸ்: டாக்டர் ஜி. ராமானுஜம்