செய்திப்பிரிவு
இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவதற்கும் பல காரணங்கள் உண்டு என்றாலும், இரண்டு சமூகக் காரணங்களை முக்கியமாகச் சொல்லலாம்.
ஒன்று, புகைபிடிப்பது. அடுத்தது, மது அருந்துவது. இப்போது புகைபிடிப்பதற்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் உள்ள தொடர்பைப் பார்க்கலாம்.
மொத்த ஆரோக்கியமும் கெடும் உடலின் எல்லா உறுப்புகளையும் பாதிக்கிற ஒரு வஸ்து இருக்கிறது என்றால், அது சிகரெட்/பீடியில் இருக்கிற புகையிலைதான்.
புகையிலையில் 7,000க்கும் மேற்பட்ட நச்சுகள் இருக்கின்றன. அவற்றில் 350 நச்சுகள் மிகவும் ஆபத்தானவை.
‘நிகோட்டின்’ (Nicotine) எனும் நச்சு மாரடைப்பு, பக்கவாதம், கைவிரல் நடுக்கம், கண் நோய்கள் என 50க்கும் மேற்பட்ட நோய்களுக்குக் காரணகர்த்தா.
உலகில் வருடத்துக்கு 80 லட்சம் பேரை சிகரெட் புகை மட்டுமே கொல்கிறது என்றால், இதன் பேராபத்துகளைப் புரிந்து கொள்ளுங்கள்.
புகைபிடிப்பதின் ஆபத்தில் பலருக்கும் தெரியாத ஒரு நோய் என்னவென்றால் அது கால்களைத் தாக்கும் ‘டி.ஏ.ஓ.’ (TAO – Thromboangiitis Obliterans).
எப்படி பாதிக்கிறது: பயனாளிக்குப் புகைப் பழக்கம் நாள்படும்போது, நிகோட்டின் அவருடைய ரத்தக் குழாய்களைத் தடிக்கச் செய்கிறது.
ரத்தக் குழாய் தடிப்பதால் அவற்றின் உள்விட்டம் சுருங்கி விடுகிறது. சுருங்கிவிட்ட ரத்தக் குழாயில் ரத்தம் செல்வது குறைகிறது.
அதேநேரம், இந்த அசாதாரண ரத்தக் குழாய்க்குள் ரத்தத்தை உந்தித் தள்ள இதயமும் சிரமப்படுகிறது. இப்படி ஏற்படும் இரட்டைச் சுமையால், இதயம் தினமும் கதறுகிறது.
அடுத்து, புகைப்பவரின் ரத்த அழுத்தத்தை நிகோட்டின் எகிற வைக்கிறது. இதனால், ரத்தக் குழாய்களில் உள் காயங்கள் ஏற்பட்டு ரத்த உறைவு ஏற்படும். இது மாரடைப்புக்கு வழி.
சிகரெட் அல்லது பீடியிலிருந்து வெளியேறும் நச்சுப்புகை அதைப் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமல்லாமல், அவர்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் ஆபத்து.
புகைப்பழக்கத்தைக் கைவிடுவது என்பது தனிமனித ஆரோக்கியம் சார்ந்தது மட்டுமல்ல; சமூகப் பொறுப்புணர்வும்கூட.
இத்தனை வருடங்கள் புகைபிடித்துவிட்டேன் என்பவர்களுக்கு: எவரும், எந்த வயதிலும் புகைப்பதை நிறுத்தலாம்.
உங்களை ஆற்றுப்படுத்தும் வார்த்தைகள் இல்லை இவை ஒரு ஆராய்ச்சியின் முடிவு. அதில், “நடுவயதில் சிகரெட் புகைப்பதை நிறுத்தினாலும் ஆயுள் நீடிக்கும்.’’ என்கிறது அந்த முடிவு.
முப்பது வயதுக்குள் சிகரெட் புகைப்பதை நிறுத்தியவர்களின் ஆயுளும் அதுவரை சிகரெட் புகைக்காதவர்களின் ஆயுளும் சமமாகவே இருக்கிறது.
வயதான காலத்தில் நிறுத்தினாலும் இதய பாதிப்பு குறைந்து, அதற்குப் பிறகு ஐந்து வருடங்களுக்கு ஆயுள் நீடிக்கும்.
சிகரெட்டைத் தூக்கி எறிவது மாரடைப்பைத் தடுப்பதற்கு மூன்று மாத்திரைகள் எடுத்துக்கொள்வதற்குச் சமம். | தகவல்கள்: மருத்துவர் கு.கணேசன்.