செய்திப்பிரிவு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து வருகிறது. 2024 ஜனவரியில் 1 டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 83.22 ஆக இருந்தது. இது, இப்போது 86-ஐ தாண்டிவிட்டது.
இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவை கட்டணங்களை டாலராக செலுத்த வேண்டி உள்ளது. ரூபாய் மதிப்பு சரிவதால் கூடுதல் பணம் செலுத்த வேண்டி இருக்கும்.
இறக்குமதி செய்யும் நிறுவனங்களின் வருமானம், லாபத்தில் பாதிப்பு ஏற்படும். குறிப்பாக, கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான செலவு அதிகரிக்கும்.
எரிபொருள் விலை உயர்ந்து காய்கறிகள், அத்தியாவசிய பொருட்கள் விலையும் அதிகரித்து பணவீக்கம் அதிகரிக்கும். இது சாமானிய மக்களுக்கு பெரிய பாதிப்பை தரும்.
செல்போன், கேமரா, இயந்திரங்கள் உள்ளிட்ட இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிக்கும்.
வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு அதிகரிக்கும். வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் அதிகரிக்கும்.
ரூபாய் மதிப்பு சரிவதால், அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் இருந்து வெளியேறுவர். இதனால் பங்குச் சந்தை மேலும் சரிய வாய்ப்பு உள்ளது.
இனி லாபம் யாருக்கு என்பதை பார்ப்போம். பொதுவாக, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி நிறுவனங்கள் தங்கள் பொருட்கள், சேவைகளை டாலரில்தான் விற்பார்கள்.
எனவே, ரூபாய் மதிப்பு சரிவதால் ஏற்றுமதி செய்யும் இந்திய நிறுவனங்களின் வருமானம் கூடும்.
குறிப்பாக, ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கும் தகவல் தொழில் நுட்பத் துறை நிறுவனங்கள், மருந்து உற்பத்தி நிறுவனங்களின் வருவாயும் லாபமும் கூடும்.
ரூபாய் மதிப்பு சரிவால், இந்தியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும். எனினும், ரூபாய் மதிப்பு சரிவால் லாபத்தை விட இழப்பே அதிகம்.