தற்போது தவெக தலைவரைச் சுற்றி அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் பலவாறாக நெருக்கடிகள் சூழ்ந்துள்ளன. கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணை, 'ஜனநாயகன்' பட வெளியீட்டுச் சிக்கல்கள் மற்றும் குடும்ப விவகாரங்கள் என விஜய் கடுமையான அழுத்தத்தில் இருக்கிறார். அதேசமயம் தவெக தனித்துப் போட்டியிட்டால் அது வாக்கு பிரிப்புக்கு வழிவகுத்து, இறுதியில் திமுக கூட்டணிக்கே சாதகமாக முடியும் என்பதை பாஜக-வும் நன்கு உணர்ந்துள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொண்டு, தவெக-வை தங்கள் பக்கம் இழுக்க பாஜக தீவிரமாக காய் நகர்த்தி வருகிறது.
ஏற்கெனவே திரைமறைவில் நடந்த பலகட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், தற்போது இறுதி முயற்சியாக பாஜக மீண்டும் ஒருமுறை பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில் தான், 'பாஜக-வுடன் கூட்டணி அமைக்கலாமா?' என்ற யோசனை விஜய் தரப்புக்கும் வந்திருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன.
இது குறித்து விவாதிக்க, வெள்ளிக்கிழமை தவெக மாவட்டச் செயலாளர்களுடன் ஆன்லைன் வாயிலாக அவசர ஆலோசனை நடத்தினார் பொதுச் செயலாளர் ஆனந்த். அதில், மாநாட்டில் அறிவித்த ‘கொள்கை' மாறாமல் தனித்தே நின்று பலத்தைக் காட்டுவதா அல்லது, தற்போதைய நெருக்கடிகளைச் சமாளிக்க கூட்டணியில் கைகோப்பதா? ஒருவேளை, பாஜக-வுடன் கூட்டணி அமைத்தால், ஏற்கெனவே அவர்களை ‘கொள்கை எதிரி' என்று அறிவித்ததற்குப் பொதுமக்களிடம் என்ன பதில் சொல்வது என்பது குறித்தெல்லாம் பலவாறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.
கூட்டத்தில் பங்கேற்ற மாவட்டச் செயலாளர்களில் சிலர், "புதிதாகக் களம் காண்பதால் கட்சிக்கும், தலைவருக்கும் ஏற்படும் நெருக்கடிகளைத் தவிர்க்க இப்போதைக்கு பாஜக-வுடன் கூட்டணி அமைப்பதே பாதுகாப்பு" என வெளிப்படையாகக் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. எனினும், விஜய் எந்த முடிவெடுத்தாலும் கட்டுப்படுவோம் என மாவட்டச் செயலாளர்கள் உறுதி அளித்ததாகச் சொல்லப்படுகிறது.
இப்படியான சூழலில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராக விஜய் ஒருநாள் முன்னதாகவே டெல்லி செல்வது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. டெல்லி ஹோட்டலில் தங்கும் விஜய், பாஜக தேசியத் தலைவர்களை ரகசியமாகச் சந்தித்துப் பேசக்கூடும் என்றும் கூறப்படுகிறது. அப்படியான சந்திப்புகள் நடந்தால் கிட்டத்தட்ட பாஜக அணியில் தவெக இணைவது உறுதியாகி விடும் என்றே தெரிகிறது.