பாமக இரண்டாக பிளவுப்பட்டு நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஓர் அணியும், தலைவர் அன்புமணி தலைமையில் ஓர் அணியும் செயல்படுகிறது. அன்புமணி நடத்திய பொதுக்குழுவை அங்கீகரித்து, அவரது தலைவர் பதவியை ஓராண்டுக்கு, அதாவது ஆகஸ்ட் வரை நீட்டித்தும், தேர்தல் படிவத்தில் கையொப்பமிடும் அதிகாரத்தை அளித்தும் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது. இதை எதிர்த்தும், பாமக மற்றும் மாம்பழம் சின்னத்தை அன்புமணி பயன்படுத்துவதற்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் தொடர்ந்த வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க மூன்று வாரம் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், பாமக தன்னிடம் மட்டுமே இருக்கிறது, கூட்டணிக்கு தன்னுடன்தான் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்ய வேண்டும் என நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார். இருப்பினும், ராமதாஸை பொருட்படுத்தாமல், அன்புமணியை அழைத்து பாமகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்தார்.
இதனால் கோபமடைந்த ராமதாஸ், திமுகவுடன் கூட்டணி அமைக்க காய்களை நகர்த்தினார். ‘ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி நடத்துகிறார்’ என சான்றளித்தார். ராமதாஸின் வரவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்தால், அவருக்கு பின்னடைவு ஏற்பட்டது. இது ஒருபுறம் இருக்க, தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ராமதாஸின் நிழலாக செயல்படும் சேலம் மேற்கு எம்எல்ஏ அருள் தெரிவித்தார். தகவலை கசிய விட்டதால், அவரை ராமதாஸ் கடிந்து கொண்ட தகவலும் வெளியானது.
இந்தச் சூழலில், வேட்பு மனுக்களை தாக்கல் செய்த சென்னை, வேலூர், திருவண்ணாமலை உட்பட 13 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் நிறுவனர் ராமதாஸ், கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, செயல் தலைவர் காந்தி ஆகியோர் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் சமீபத்தில் நேர்காணல் நடத்தினார். அப்போது ராமதாஸ் கூறும்போது, “தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யவில்லை. விரைவில் முடிவு செய்வோம். ‘கடந்த காலங்களை போன்று அதிக இடங்களை பாமக பெற முடியுமா?’ என கேட்கிறீர்கள். நம்பிக்கையின் அடிப்படையில்தான் உலகமே இயங்குகிறது. கூட்டணி தொடர்பாக என்னுடன் பேசினார்கள்; பேசிக் கொண்டிருக்கிறோம்; பேசுவோம்” என்றார்.
‘பொங்கல் பண்டிகைக்குள் கூட்டணியை முடிவு செய்து அறிவித்து விடுவோம்’ என்று ஏற்கெனவே ராமதாஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்னும் கூட்டணியை முடிவு செய்ய முடியாமல் எந்தப் பக்கம் போவது என்று தெரியாமல் அவர் திரிசங்கு நிலையில் தவிப்பதாகவும் மருத்துவர் அய்யாவின் நிலையை பார்த்தால் பாவமாக உள்ளது என்றும் பாமகவினர் வருத்தத்துடன் தெரிவித்தனர்.
இந்த நிலையில், பாமக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் திங்கள்கிழமை 3-வது நாளாக நேர்காணல் நடைபெற்றது. அப்போது பாமக நிறுவனர் ராமதாஸ் பேசும்போது, “குடுகுடுப்பைக்காரர் சொல்வது போல், ‘நமக்கு நல்ல காலம் பிறக்குது, நல்ல காலம் பிறக்குது... பாமகவுக்கு நல்ல காலம் பிறக்குது’... பாமகவில் நிறைய சட்டப்பேரவை உறுப்பினர்கள் வரப்போகிறார்கள்... நல்ல காலம் பிறக்குது. நடக்குமா? நிச்சயம் நடக்கும்” என்று தொண்டர்களுக்கு உற்சாகம் அளித்தார்.
பின்னர் பாமக, கொடி மற்றும் சின்னத்துக்கு உரிமை கோரி தொடர்ந்த வழக்கு குறித்து ராமதாஸ் பேசும்போது, “சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு வரும் 24-ம் தேதி தெரிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், மாம்பழம் கிடைத்து விட்டது என ஒரு பிரிவினர் கூறி வருகின்றனர். தீர்ப்பே வரும் 24-ம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், சில பதர்கள் வானத்துக்கும் பூமிக்கும் குதித்து, ‘நாங்கள் பதர்கள்தான்’ என்பதை நிருபித்துள்ளனர். பிப்ரவரி 24-ம் தேதி வரை நாம் காத்திருப்போம். மாம்பழம், நிச்சயமாக நமக்குத்தான்” என்றார் நம்பிக்கையுடன்.