வடசென்னையின் பிரதான தொகுதியாக பெரம்பூர் உள்ளது. தவெக தலைவர் விஜய் இந்தத் தொகுதியில் போட்டியிடுவதால் விஐபி தொகுதியாக மாறியுள்ளது. மேலும் திமுக, அதிமுக கூட்டணியில் பாமக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என 47 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
திமுக - ஆர்.டி.சேகர்
திமுக வேட்பாளராக மீண்டும் போட்டியிடும் ஆர்.டி.சேகர் வீடு வீடாகச் சென்று, தேர்தல் அறிக்கையை விநியோகித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
மேலும், எம்எல்ஏவாக இருந்தபோது செய்த பணிகள், கொடுங்கையூர் குப்பை மேடு மீட்டெடுப்பு பணி, கொருக்குப்பேட்டை மற்றும் வியாசர்பாடி கணேசபுரத்தில் மேம்பாலங்கள் அமைத்தது உள்ளிட்ட சாதனைகளைக் கூறி பிரச்சாரம் செய்து வருகிறார்.
தமிழக வெற்றிக் கழகம் - நடிகர் விஜய்
தவெக தலைவரான நடிகர் விஜய், கடந்த மார்ச் 30-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு பெரம்பூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதன் பிறகு அவரது ரசிகர்கள் அவருக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர்.
கட்சியின் தேர்தல் அறிக்கை, ஏஐ தலைநகராக தமிழகத்தை மாற்றும் திட்டம் உள்ளிட்டவை குறித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
பாமக - ம.திலகபாமா
அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் ம.திலகபாமா, தொகுதியில் கழிவுநீர் வடிகால் அமைப்பை ஏற்படுத்துதல், பசுமை பூங்காக்களை உருவாக்குதல், பயோமைனிங் முறையில் கொடுங்கையூர் குப்பை கிடங்கை மீட்டெடுப்பது, காற்று மாசுவை அகற்ற மரக்கன்று நடுதல், சிறுதொழில் தொடங்க வட்டியில்லாக் கடன் திட்டம் போன்ற வாக்குறுதிகளை முன்வைத்து வீதிதோறும் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
நாம் தமிழர் கட்சி - வெற்றித்தமிழன்
நாதக வேட்பாளரான வெற்றித்தமிழன், ஒவ்வொரு வாக்காளரையும் தனித்தனியாகச் சந்தித்து, கட்சியின் தேர்தல் அறிக்கை விவரங்களை விளக்கி வாக்கு சேகரித்து வருகிறார்.
குறிப்பாக மருத்துவம், கல்வி, குடிநீர் இலவசமாக வழங்குவது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கனிம வளம் பாதுகாப்பு உள்ளிட்ட தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை விளக்கி வாக்கு சேகரிக்கிறார். பெரம்பூர் விஐபி தொகுதியாக மாறி உள்ளதால் இங்கு வெற்றிபெறப் போவது யார் என்பதை நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.