கோவை மாவட்டம் மட்டுமின்றி, தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதிகளில் ஒன்றாக இருப்பது கவுண்டம்பாளையம் ஆகும். கோவையில் பிரசித்தி பெற்ற பரிகாரத் தலமான கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் கோயில், அனுவாவி சுப்பிரமணியர் கோயில், பாலமலை அரங்கநாதர் கோயில், இடிகரை வில்லீஸ்வரர் கோயில் உட்பட பல்வேறு கோயில்களும், எண்ணிலடங்கா தொழிற்சாலைகளும் இத்தொகுதியில் உள்ளன.
மாநகராட்சியின் 22 வார்டுகளுக்குட்பட்ட விளாங்குறிச்சி, சரவணம்பட்டி, சின்னவேடம்பட்டி, வெள்ளக்கிணறு, துடியலூர், கவுண்டம்பாளையம், காளப்பட்டி பகுதிகளும் வெள்ளமடை, கொண்டையம்பாளையம், அக்ரஹார சாமக்குளம், நாயக்கன்பாளையம், தடாகம் (ஆர்.எப்), ஆனைகட்டி (வடக்கு), ஆனைகட்டி (தெற்கு), வீரபாண்டி, சின்னதடாகம், நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம், பன்னிமடை, கீரணத்தம், கள்ளிப்பாளையம் மற்றும் வெள்ளானைப்பட்டி ஆகிய ஊராட்சிகளும், பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி, இடிகரை, அசோகபுரம், குருடம்பாளையம், சர்க்கார் சாமக்குளம் உள்ளிட்ட பகுதிகளும் இத்தொகுதியில் உள்ளன.
தொகுதியில் நிலவும் பிரச்சினை
கிராமங்களில் விவசாயமும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களும், பெரு நிறுவனங்கள் மற்றும் சரவணம்பட்டி பகுதியில் மென்பொருள் நிறுவனங்களும் ஏராளமாக உள்ளன. நொய்யல் நதிக்கும், பவானி ஆற்றுக்கும் இடையே உருவாகி திருப்பூர் மாவட்டத்தில் நொய்யலில் கலக்கும் கவுசிகா நதி இந்த தொகுதியில் தான் உள்ளது. இந்த நதியை மீட்டு அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் இணைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் பல ஆண்டுகால எதிர்பார்ப்பாக உள்ளது.
தொகுதியின் பல பகுதிகள் வனத்தை ஒட்டி இருப்பதால் கிராமங்களில் வன விலங்குகள் ஊருக்குள் அடிக்கடி புகுவது, அதிகரிக்கும் காட்டு யானைகள் நடமாட்டம் என பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. மனித -வனவிலங்கு மோதல் அடிக்கடி நடக்கும் பகுதியாக இந்த தொகுதி உள்ளது. ஆனைகட்டி, பாலமலை அடிவார கிராமங்களில் யானை, மான், காட்டுப்பன்றிகள் தொந்தரவால் விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர்.
இதுபோன்ற பிரச்சினைகள் பல ஆண்டுகாலமாக தீர்க்கப்படாமல் இருப்பதால் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர். அதேபோல, பாதாள சாக்கடை வசதி, குடிநீர் வசதிகள் இல்லை என்ற குறைபாடுகளும், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கைகளும் உள்ளன. தொகுதி மறுசீரமைப்பின்போது, கடந்த 2011-ம் ஆண்டு முதன் முதலாக கவுண்டம்பாளையம் தொகுதி உருவாக்கப்பட்டு தேர்தலை எதிர்கொண்டது.
இதுவரை நடந்த தேர்தல்களில் அதிமுகவே ‘ஹாட்ரிக்’ வெற்றியை பெற்று தொகுதியை தொடர்ந்து தக்க வைத்துள்ளது. கோவை மாநகரில் அதிமுகவின் விருப்ப சாய்ஸாக இந்த தொகுதி இருந்து வருகிறது. இந்த முறை காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதால், தொகுதியை தக்கவைக்கும் முனைப்பில், ‘சிட்டிங்’ எம்எல்ஏ பி.ஆர்.ஜி.அருண்குமாரே மீண்டும் களம் காண்கிறார்.
பாஜகவுக்கு இப்பகுதியில் கணிசமான வாக்குகள் வைத்திருப்பது அதிமுகவுக்கு கூடுதல் பலம். அதேசமயம் கடந்தமுறை தோல்வி அடைந்த திமுக இந்தமுறை கூட்டணியான காங்கிரஸுக்கு ஒதுக்கி உள்ளது. இதில் தமிழக இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவரான கே.பி.சூர்யபிரகாஷ் களம் இறங்குகிறார்.
திமுக கூட்டணி பலம் இருந்தாலும், பிரச்சாரத்தில் கூட்டணி பலம் பெரிதாக எதிரொலிக்கவில்லை. நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கலாமணி, ஏற்கெனவே தொகுதிக்கு அறிமுகமானவர். கடந்தமுறை போட்டியிட்டவர். தமிழக வெற்றிக்கழகம் சார்பில் போட்டியிடும் கனிமொழியும், நாம் தமிழர் கட்சியின் கலாமணியும் வாக்குகளை பிரிப்பதை பொறுத்து இந்த தொகுதியின் வெற்றிவாய்ப்பு இருக்கும்.
வாக்காளர்கள் விவரம்
ஆண் 2,05,189
பெண் 2,16,834
3-ம் பாலினத்தவர் 115
மொத்த வாக்காளர்கள் 4,22,138