தென் மாவட்டங்களில் அமைந்துள்ள முக்கிய தொகுதிகளில் முத்துநகர் என்றழைக்கப்படும் தூத்துக்குடி தொகுதியும் ஒன்றாகும். நாட்டின் பெருந்துறைமுகங்களில் ஒன்றான வ.உ.சி. துறைமுகம் அமைந்துள்ளது. இதனால் தென் தமிழகத்தின் தொழில் நகரமாக தூத்துக்குடி விளங்கி வருகிறது.
17-வது தேர்தல்
தூத்துக்குடி தொகுதி இதுவரை 16 தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி 1952, 1957, 1962 ஆகிய 3 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது. அதன்பிறகு திராவிட கட்சிகளே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
திமுக 7 முறையும், அதிமுக 6 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்த தொகுதியில் வெற்றி பெற்ற எஸ்.என்.ராஜேந்திரன், பி.கீதா ஜீவன், சி.த.செல்லப்பாண்டியன் ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பு வகித்துள்ளனர்.
வாக்காளர் விவரம்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியை மட்டும் உள்ளடக்கிய இந்த தொகுதியில் ஆண்கள் 1,20,614 பேர், பெண்கள் 1,27,623 பேர், மூன்றாம் பாலினத்தவர் 63 பேர் என மொத்தம் 2,48,300 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் 36 சதவீதம், பர்ணான்டோ 19 சதவீதம், தேவேந்திரகுல வேளாளர் 9 சதவீதம், பிள்ளைமார் 8 சதவீதம், முஸ்லிம்கள் 4 சதவீதம் பெரும்பான்மை வாக்காளர்களாக உள்ளனர்.
தீர்வு காணப்பட்டவை
தூத்துக்குடி தொகுதியின் முக்கிய பிரச்சினையாக மழைக்காலங்களில் வெள்ளநீர் தேங்கி வந்தது. இதனால் மக்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டனர். ஆனால், இந்த பிரச்சினைக்கு தற்போது ஓரளவுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் மழைநீர் வடிந்துள்ளது. குடிநீர் பிரச்சினைக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. காற்று மாசை குறைப்ப தற்காக அதிகமாக மரக்கன்றுகள் நடும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மக்களின் எதிர்பார்ப்புகள்
தூத்துக்குடியின் பிரதான பிரச்சினையாக போக்குவரத்து நெரிசல் உள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண 1, 2 மற்றும் 4-வது ரயில்வே கேட் பகுதிகளில் மேம்பாலம் அமைக்க வேண்டும். விவிடி சந்திப்பில் மேம்பாலம் அமைக்க வேண்டும். முக்கிய சந்திப்பு பகுதிகளில் உள்ள சிக்னல்களை அகற்றி ரவுண்டானாக்கள் அமைக்க வேண்டும்.
மீன்பிடித் துறைமுகத்தை நவீன மயமாக்க வேண்டும். திரேஸ்புரத்தில் உள்ள தூண்டில் பாலத்தை முழுமையாக அமைக்க வேண்டும். தூத்துக்குடியில் அரசு சட்டக்கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும்.
உப்பு உற்பத்தி அவ்வப்போது மழையால் பாதிக்கப்படும் போது, அரசு நிவாரணம் வழங்க வேண்டும், தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு கூடுதல் ரயில் இயக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் தூத்துக்குடி தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகளாக உள்ளன.
கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட பி.கீதாஜீவன் 92,314 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் 42,004 வாக்குகளை பெற்றார். கீதாஜீவன் 50,310 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
4 முனை போட்டி
இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் மீண்டும் பி.கீதாஜீவனே போட்டியிடுகிறார். இவர் இந்த தொகுதியில் 5-வது முறையாக களம் காண்கிறார். ஏற்கெனவே மூன்று முறை வென்றுள்ளார். ஒரு முறை வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்.
கடந்த 2016 மற்றும் 2021 தேர்தல்களில் தொடர்ச்சி யாக வென்ற கீதாஜீவன் தற்போது ஹாட்ரிக் வெற்றி வாய்ப்புக்காக தீவிர களப்பணியாற்றி வருகிறார். அவருக்கு எதிராக அதிருப்தி அலை எதுவும் பெரிதாக இல்லை. கூட்டணியும் அவருக்கு மிகப்பெரிய பலமாக உள்ளது.
அவரை எதிர்த்து அதிமுக வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் போட்டியிடுகிறார். இவர் கடந்த 2011 தேர்தலில் இந்த தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராக பணியாற்றினார். 2016 தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
கடந்த 2021 தேர்தலில் கூட்டணி கட்சியான தமாகாவுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த முறை அதிமுக நேரடியாக களம் காண்கிறது. சி.த.செல்லப்பாண்டியனே மீண்டும் போட்டியிடுகிறார். தூத்துக்குடி தொகுதியை பொறுத்தவரை அதிமுக வுக்கு என வலுவான வாக்கு வங்கி உள்ளது.
நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்.ஜேக்கப் தேவதாஸ் அபிஷேக் களம் காண்கிறார். கடந்த 2021 தேர்தலில் இத்தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேல்ராஜ் 30,937 வாக்குகள் பெற்றுள்ளார்.
இந்த தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவெக சார்பில் நடிகர் விஜய்யின் நண்பரும், திரைப்பட நடிகர் மற்றும் இயக்குநருமான நாத் போட்டியிடுகிறார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜி.ஆர்.எட்மண்டின் சகோதரி மகனான இவர் நடிகர் சந்திரபாபுவின் நெருங்கிய உறவினர் ஆவார்.
சிறுபான்மையினர் வாக்குகள், குறிப்பாக கடற்கரை கிராம வாக்குகள் மற்றும் திமுக, அதிமுக மீதான அதிருப்தி வாக்குகள் தவெக வேட்பாளருக்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தூத்துக்குடி தொகுதியில் 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு இன்னும் 13 நாட்கள் உள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.