தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகள் வரிசையில் 113-வது இடத்தில் திருப்பூர் வடக்குத் தொகுதி இடம்பெற்றுள்ளது. திருப்பூர் மாநகராட்சியின் 28 வார்டுகளையும், பட்டம்பாளையம், மேற்குபதி, தொரவலூர், சொக்கனூர், வள்ளிபுரம், பெருமாநல்லூர், ஈட்டிவீரம்பாளையம், பொங்குபாளையம், கணக்கம்பாளையம், காளிபாளையம் ஆகிய 10 ஊராட்சிகளையும் இத்தொகுதி உள்ளடக்கியுள்ளது.
முக்கியத் தொழில்கள்
இந்தத் தொகுதியில் அதிக அளவில் பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச் சார்ந்த நிறுவனங்கள், சாய மற்றும் சலவை ஆலைகள், பிரிண்டிங் பட்டறைகள், அனுப்பர்பாளையம் பகுதியில் பாத்திர உற்பத்தி, விவசாயம் ஆகியவை பிரதான தொழிலாக உள்ளன.
இத்தொகுதியில், கொங்கு வேளாளர் சமூகத்தினரும், அதற்கு அடுத்தபடியாக ஆதிதிராவிடர் சமூகத்தினர் மற்றும் பிற சமூகத்தினரும் உள்ளனர். பின்னலாடை உற்பத்தி சார்ந்தநிறுவனங்களில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் வாக்குகளும் கணிசமாக உள்ளன.
தொகுதியில் நிலவும் பிரச்சினைகள்
டாலர் சிட்டி எனப்படும் திருப்பூர் மாநகரில் உள்ள 60 வார்டுகளில் 28 வார்டுகளை உள்ளடக்கிய பெரிய தொகுதி வடக்கு தொகுதியாகும். இந்தத் தொகுதியில் பின்னலாடை தொழில் சார்ந்த சிறு, குறு நிறுவனங்கள் 80 சதவீதம் உள்ளன. ஜிஎஸ்டி வரி, நூல் விலை உயர்வு, தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வு போன்ற பிரச்சினைகளால் பின்னலாடை உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.
அதேபோல், மாநகராட்சி சார்பில் குப்பை வரி, சொத்து வரி, பாதாள சாக்கடைகட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகளை உயர்த்தியுள்ளதாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும், மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் குப்பை சரிவர அள்ளப்படாமல் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது, மாநகராட்சி நிர்வாகத்தின் தோல்வியைக் காட்டுவதாக எதிர்க்கட்சியினர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
4-வது வெற்றியை பதிவு செய்யுமா அதிமுக?
திருப்பூர் வடக்கு தொகுதியில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் நடைபெற்ற 3 சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் அதிமுக வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர். அதிலும் குறிப்பாக 2011 தேர்தலில் தற்போதைய அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தமிழக அளவில் 73,271 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அமைச்சரானார்.
இதன் பிறகு நடைபெற்ற 2016, 2021 தேர்தல்களில் கே.என்.விஜயகுமார் வெற்றி பெற்றார். பல்லடம் தொகுதிசட்டப்பேரவை உறுப்பினர் எம்.எஸ்.எம். ஆனந்தன், இந்த முறை சொந்த தொகுதியை கட்சித் தலைமையிடம் கேட்டுப் போட்டியிடுகிறார். திமுக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்.ரவி களமிறங்கியுள்ளார். இவர் கட்சியின் மாநில துணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து வெளியேறி தவெகவில் இணைந்த முன்னாள் எம்.பி.சத்தியபாமாவும், நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்.அபிநயாவும் போட்டியிடுகின்றனர். களத்தில் உள்ள நான்கு பேரில் எம்.எஸ்.எம்.ஆனந்தன், எம்.ரவி, சத்தியபாமா ஆகியோர் அரசியல் அனுபவம் உள்ளவர்கள் என்பது அவர்களது பலமாகும். மேலும், திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட், மதிமுக, காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிநிர்வாகிகள் இணைந்து களப்பணியாற்றுவது கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு கூடுதல் பலமாகக் கருதப்படுகிறது.
திருப்பூர் வடக்குத் தொகுதியை அதிமுக 4-வது முறையாகத் தக்கவைக்குமா அல்லது இந்திய கம்யூனிஸ்ட் வெற்றியைப் பதிவு செய்யுமா, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் ஆகியவை தேர்தலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் போன்ற கேள்விகளுக்கு தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் விடை தெரியும்.
வாக்காளர்கள் விவரம்
ஆண் - 1,55,070
பெண் - 1,60,642
3-ம் பாலினத்தவர் - 125
மொத்த வாக்காளர்கள் - 3,15,837