திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென்மாவட்டங்கள் அடங்கிய தென்மண்டலத்தின் பொறுப்பாளராக இருக்கிறார் திமுக துணைப் பொதுச் செயலாளரான கனிமொழி. இந்த மாவட்டங்களில் யாரை நிறுத்தினால் சிரமப்படாமல் ஜெயிக்க முடியும் என்பது குறித்து தனிப்பட்ட முறையில் சர்வே டீமை களத்தில் இறக்கி இருக்கிறார் கனிமொழி. இந்த நான்கு தென்மாவட்டங்களிலும் உள்ள 22 தொகுதிகளிலும் சென்னையிலிருந்து வரவழைக்கப்பட்ட சிறப்புக் குழுவினரால் சர்வே நடத்தப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே வெற்றி பெற்றவர்களையே மீண்டும் நிறுத்தலாமா அல்லது ஆளை மாற்றலாமா, கடந்த முறை தோற்றுப் போனவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கலாமா, புதிதாக தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் இந்த சர்வே நடத்தப்பட்டிருக்கிறது. இந்த சர்வே முடிவுகளை கட்சி தலைமையிடம் விரைவில் கனிமொழி அளிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதன் முடிவுகளும் இந்த நான்கு மாவட்ட வேட்பாளர்கள் தேர்வில் முக்கிய பங்காற்றும் என்பதால் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.