அரசியல்

6 ராஜ்ய சபா சீட் யாருக்கு? - அதிமுக, திமுக ‘சதுரங்கம்’

செய்திப்பிரிவு

மாநிலங்களவையில் திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, கனிமொழி சோமு, அந்தியூர் செல்வராஜ் ஆகிய திமுக எம்.பி.க்கள் மற்றும் அதிமுகவின் தம்பிதுரை, அதிமுக ஆதரவோடு எம்.பியான தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரின் பதவி காலம் முடிவடைவதால், அந்த இடங்களுக்கு மார்ச் 16-ல் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே தனக்கு ஒரு எம்.பி சீட் என்ற உறுதியைப் பெற்றுக் கொண்டே பாமக தலைவர் அன்புமணி, அதிமுக கூட்டணிக்குள் வந்தார். எனவே அந்த ஒரு இடம் ஏற்கெனவே ரிசர்வ் ஆகிவிட்டது. அதிமுக வசம் மீதமுள்ள இன்னொரு இடத்துக்கு, கட்சியின் மூத்த தலைவர் தம்பிதுரை ஆவலோடு காத்திருக்கிறார். இவர் தவிர்த்து தமாகா தலைவர் ஜி.கே.வாசனும் தனக்கு மீண்டும் சீட் எதிர்பார்க்கிறார்.

          

மக்களவையில் அதிமுகவுக்கு ஒரு எம்.பி கூட இல்லாத நிலையில், மாநிலங்களவையிலும் அதிமுகவுக்கு 5 எம்.பிக்கள்தான் உள்ளனர். அதிலும், தம்பிதுரையின் பதவிக் காலம் முடிவடைய உள்ளதால், கிடைக்கும் ஒரு இடத்தையும் வேறு கட்சிக்கு விட்டுக் கொடுப்பதால், தனது டெல்லி செல்வாக்கு குறையும் எனவும் கவலைப்படுகிறது அதிமுக தலைமை.

அதே நேரத்தில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வலுவான கூட்டணியை உருவாக்கும் நெருக்கடியிலும் இபிஎஸ் சிக்கியுள்ளார். எனவே, வேறு மாநிலத்தில் பாஜக கோட்டாவில் ஜி.கே.வாசனுக்கு சீட் கொடுக்கும்படி பழனிசாமி டெல்லிக்கு தகவல் சொல்லியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் தினகரனின் கோரிக்கையை பரிசீலிப்பதாகவும் அதிமுக உறுதி கொடுத்துள்ளது.

திமுகவும் தனது 4 இடங்களை யாருக்கு கொடுப்பது என்ற சிக்கலில் தவித்துக் கொண்டிருக்கிறது. திருச்சி சிவாவுக்கு ஒரு சீட் நிச்சயமாகிவிட்டது. மீதமுள்ள 3 இடங்களில், இம்முறை காங்கிரஸ் தங்களுக்கு ஒரு சீட் கட்டாயம் வேண்டும் என அடம்பிடிக்கிறது. தங்கள் வசம் 17 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் ஒரு சீட் ஒதுக்குவதில் என்ன தயக்கம் என்றும் கேள்வியெழுப்பி வருகிறது.

அதேபோல, பாமக ராமதாஸ் தரப்பிலும் எங்களுக்கு சட்டப்பேரவைத் தொகுதி எண்ணிக்கையை குறைத்தாலும், மகள் ஸ்ரீகாந்திக்கு ஒரு ராஜ்யசபா சீட் கொடுத்துவிடுங்கள் என்ற கோரிக்கையோடு கூட்டணிக்கு அணுகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்புமணிக்கு போட்டியாக ஸ்ரீகாந்தியை டெல்லிக்கு அனுப்புவோம் என காய் நகர்த்தி வருகிறதாம் ராமதாஸ் தரப்பு.

இன்னொரு பக்கம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான சில திமுக புள்ளிகள் தேமுதிகவிடம் பேச்சு நடத்தினர். அதில் 6 அல்லது 7 தொகுதிகள் ஒதுக்க உறுதி சொல்லப்பட்ட நிலையில், கூடுதலாக ராஜ்ய சபா சீட் குறித்து நல்ல செய்தியை சொல்லியுள்ளார்களாம். அதனால்தான் உடனடியாக திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து கூட்டணியை உறுதி செய்துள்ளார் பிரேமலதா.

SCROLL FOR NEXT