இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான இரா.நல்லகண்ணு காலமானார். அவருக்கு வயது 101. மகத்தான அந்த அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாற்றை சற்றே சுருக்கமாகப் பார்ப்போம்.
எவருக்கும் கிட்டாத அரிய வாய்ப்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்க நாளான 1925 டிசம்பர் 26 தான் நல்லகண்ணுவின் பிறந்தநாளாகும். கட்சி தோன்றிய நாளில் தோன்றிய ஒரே மனிதர் நல்லகண்ணுதான். வேறு எந்த அரசியல் தலைவரின் வாழ்விலும் அமைந்திராத அரிய ஒற்றுமை இது. கம்யூனிஸ்ட் கட்சி பிறந்த நாளில் பிறந்தவரான நல்லகண்ணுவின் குடும்பம், கம்யூனிஸ்ட் இயக்கக் குடும்பம் அல்ல.
விடுதலைப் போராட்டத்தின் எழுச்சியால் உந்தப்பட்ட ஆர்.நல்லகண்ணு, பள்ளி மாணவனாக இருந்த காலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். ஆனால், இளம் வயதிலேயே பெற்றிருந்த தனது பரந்துபட்ட வாசிப்பு ஆற்றலால், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டபோது சிறு வயதிலேயே கிடைத்த அனுபவங்களால், பலவேசம் செட்டியார் போன்ற தனது ஆசிரியர்கள் தந்த வழிகாட்டுதலால் அவர் கம்யூனிஸ்ட் இயக்கத்தைத் தேர்ந்தெடுத்தார்.
1948-இல் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில், ஏராளமான சதி வழக்குகளில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் ‘நெல்லை சதி வழக்கு’, வரலாற்றில் பதிவான முக்கிய வழக்காகும். இந்த வழக்கில்தான் நல்லகண்ணு கைது செய்யப்பட்டு, பல ஆண்டுகள் சிறையில் இருந்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் தலைவர்களில் நல்லகண்ணுதான் நீண்ட காலம் சிறையில் இருந்தவர். நல்லகண்ணுவின் இளம் வயதுப் போராட்டங்களையும், அவர் அனுபவித்த சிறைக் கொடுமைகளையும் அறியும் அனைவருக்கும் அவர் மீது பெரும் ஈர்ப்பு உருவாகும் என்பது நிச்சயம்.
குறிப்பாக, அவருடைய வாழ்க்கைப் பயணம் பற்றி அறியும் இளம் தலைமுறையினர், மக்களுக்காகத் தொண்டு செய்ய இப்படியும் ஓர் உறுதிமிக்க தலைவர் இருக்க முடியுமா என்று வியப்பில் ஆழ்ந்து போவதைத் தவிர்க்க முடியாது. அரசியலில் கொள்கை மாறுபாடுகள் இருக்கலாம்; ஆனால், சாமானிய மக்களைப் பாதிக்கும் பொதுப் பிரச்சினைகளில் அரசியல் பார்க்காமல் எல்லோரும் இணைந்து ஓரணியில் மக்களுக்காகப் போராட வேண்டும் என்பதில் நம் அரசியல் தலைவர்கள் அனைவருக்கும் நல்லகண்ணு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர்.
கடந்த நூறாண்டுகளில், தமிழ்நாட்டில் குறுக்கும் நெடுக்குமாக அவரது காலடி படாத ஊர்களே இல்லை எனலாம். தமிழ்நாட்டின் கடந்த ஒரு நூற்றாண்டு கால வரலாற்றை எழுதும்போது, நல்லகண்ணுவைத் தவிர்த்துவிட்டு எழுத முடியாது. ஏனெனில், அவருடைய வாழ்க்கை என்பது தமிழ்நாட்டின் நூறாண்டு கால வரலாற்றோடு பின்னிப் பிணைந்திருக்கிறது.
எல்லா மக்களுக்கும் எல்லாமும் கிடைத்திடச் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில், அரசியல், சமூகம், கல்வி, பொருளாதாரம், விவசாயம், அறிவியல், கலை, இலக்கியம், பண்பாடு என அனைத்துத் தளங்களிலும் செயல்படும் தமிழகத்தின் முன்னோடிகளோடு இணைந்து, நவீன தமிழ்நாட்டைக் கட்டமைப்பதில் பெரும் பங்களிப்பு செய்தவர் நல்லகண்ணு.
அரசியல் கட்சிக்கான வேலிகளையெல்லாம் கடந்து, தமிழ்நாட்டின் பொதுத் தலைவராகப் பரிணமித்த அந்த மாமனிதர் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.முத்தரசன் பகிர்ந்த தகவல்களை இனி பார்ப்போம்.
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் இராமசாமி - கருப்பாயி தம்பதிக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார் நல்லகண்ணு. பள்ளியில் படிக்கின்றபோதே, தேச விடுதலையே தனது மூச்சென்றிருந்தார். தேசப்பிதா காந்தியின் எளிமை, நேர்மை ஆகியவை இவரை ஆட்கொண்டன. பொது வாழ்க்கைக்கு வந்த நாள் முதல் கடைசி வரை எளிமையின் சிகரமாய் - நேர்மையின் அடையாளமாய் தொடர்ந்த இவரது வாழ்க்கை, ஆரம்பத்தில் காந்தியப் பாதையில் பயணித்தது.
அதன்பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திவந்த இயக்கங்களாலும், தோழர் ஜீவா பொதுக் கூட்டங்களில் ஆற்றிய உரைகளைக் கேட்டும் நல்லகண்ணுவின் கவனம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்பால் திரும்பியது. அதனால் கல்லூரிப் படிப்பைக் கைவிட்டார். சின்னஞ்சிறு வயதில் செங்கொடியைக் கரங்களில் ஏந்தியவர், கடந்த எண்பது ஆண்டு காலமாகத் தனது லட்சியப் பயணத்தைத் தொய்வின்றித் தொடர்ந்தார்.
கட்சி தடை செய்யப்பட்டபோது தலைமறைவு வாழ்க்கையில், காடுமேடுகளில் அலைந்து திரிந்த நிலையில் காவல் துறை இவரின் ரகசிய இடமறிந்து கைது செய்தது. காவல் அதிகாரி மற்ற தலைவர்களைப் பற்றி விசாரித்தபோது அதற்கு நல்லகண்ணு பதில் சொல்ல மறுத்தார். அதனால் அடித்து, உதைத்து, நையப்புடைத்து, தலைகீழாகத் தொங்கவிட்டு அடித்தும் வாய் திறக்கவே இல்லை. இனி என்ன செய்யலாம் என ஆழ்ந்து யோசித்த காவல் அதிகாரி, இவருடைய மீசை ரோமத்தை ஒவ்வொன்றாகப் பிடுங்கி மகிழ்ந்தார். இருப்பினும் நல்லகண்ணுவிடமிருந்து பதில் எதுவும் கிடைக்கவில்லை.
காவல் துறையினர் ஜோடித்த பொய்யான நெல்லை சதி வழக்கில் ப.மாணிக்கம், கே.பாலதண்டாயுதம், வாத்தியார் ஜேக்கப் உள்ளிட்ட தலைவர்களோடு தோழர் நல்லகண்ணுவுக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. சிறையில் நடந்த அனைத்துக் கொடுமைகளையும் நெஞ்சுரத்தோடு அவர் எதிர்கொண்டார்.
கட்சியில் உறுப்பினராகத் தொடங்கி, விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளராக நீண்ட காலமும்; கட்சியின் மாநிலச் செயலாளராக நான்கு முறை தேர்வு செய்யப்பட்டு 12 ஆண்டுகளும்; கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினராகவும், தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவராகவும் பணியாற்றிய அனுபவம் மிக்கவர்.
தன்னை நாடி வந்த நிதிகள் எதையும் இவர் தனதாக்கிக் கொண்டதில்லை. சான்றாக, தமிழ்நாடு அரசின் சார்பில் அம்பேத்கர் விருது வழங்கப்பட்டபோது கொடுக்கப்பட்ட நிதியைக் கட்சியின் வளர்ச்சிக்கும், சங்க வளர்ச்சிக்கும் வழங்கினார். 2022-இல் தமிழ்நாடு அரசு ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கியபோது, தனக்கு அளிக்கப்பட்ட 10 லட்சம் ரூபாயுடன் மேலும் 5 ஆயிரம் ரூபாயை சேர்த்து, 10 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கரோனா நிதியாகத் திரும்ப அளித்தார்.
இவரது எண்பதாம் ஆண்டில் விழா எடுத்தபோது கட்சி இவருக்கு ஒரு கோடி ரூபாய் நிதி அளித்தது. அதனை அதே மேடையில் கட்சிக்கு நிதியாக வழங்கினார். இவருக்கெனச் சொந்தமாக வாகன வசதி கிடையாது என்பதறிந்து, அடையாறு மாணவர் நகலக உரிமையாளர் ஆனாரூனா கார் ஒன்றைப் பரிசளித்தார். அதன் சாவியை முன்னாள் முதல்வர் கருணாநிதி வழங்கினார். நல்லகண்ணு அந்த ஊர்தியையும் கட்சிக்கே அளித்தார்.
இவரது தியாகத்தைப் பலரும் பல கோணங்களில் பாராட்டி மகிழ்ந்தது உண்டு. திமுக தலைவர் கருணாநிதி, தோழர் நல்லகண்ணுவின் எண்பதாம் ஆண்டு விழாவில் பேசியபோது, “இன்றைக்கு நான் ஒரு உண்மையைச் சொல்கிறேன், எனது இரண்டு கண்களில் ஒன்று பழுதாகிவிட்டது, ஒரு கண் பார்வைதான் உண்டு, மற்றொரு கண் நல்லகண்ணு” என்றும், “என்னைவிட இரண்டு வயது இளையவர் என்றாலும், தியாகத்தால் என்னைவிட மூத்தவர்” என்றும் பெருமிதம் பொங்கக் கூறினார்.
பாஜக அணியில் திமுக இருந்தபோது திருச்சியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நிருபர்கள் கருணாநிதியிடம், “நீங்கள் பாஜக அணியில் இருந்து விலகி வர வேண்டுமெனத் தொடர்ந்து நல்லகண்ணு பேசிவருகிறார், அது குறித்து உங்கள் பதில் என்ன?” என்று வினவியபோது, கருணாநிதி சற்றும் தயக்கமின்றி, “நல்லகண்ணு எப்போதும் நல்லதைத்தான் சொல்வார்” என்றார்.
தன் வாழ்நாள் முழுவதும் ஏழை, எளிய மக்களுக்காக, உழைக்கும் மக்களுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டவர். தியாகத்தால் புடம்போட்ட தங்கமென ஜொலித்தவர். மணல் கொள்ளையை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்து, தானே நீதிமன்றம் சென்று வாதாடி வெற்றியும் கண்டவர்.
பொதுவாழ்வு என்பது பொழுதுபோக்கல்ல, எளிமையும், நேர்மையும், அர்ப்பணிப்பும், தியாகமும் நிறைந்ததாகும் என்பதை வாழ்ந்து காட்டியவர். சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு இன்றித் தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்ட எளிமையின் சிகரமாகத் திகழ்ந்தவர் தோழர் நல்லகண்ணு.