சென்னை கொளத்தூரில் போட்டியிடும் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் வேட்புமனுவுடன் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரத்தை முதலில் பார்ப்போம்.
கடந்த ஆண்டு தனக்கு 30 லட்சத்து 59 ஆயிரம் ரூபாயும், மனைவி துர்காவுக்கு 5 லட்சத்து 33 ஆயிரம் ரூபாயும் வருமானம் கிடைத்ததாக வருமான வரி கணக்கில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தன்னிடம் தற்போது கையிருப்பாக 10 ஆயிரம் ரூபாயும், மனைவி துர்காவிடம் 40 ஆயிரம் ரூபாயும் ரொக்கம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தன்னிடம் நகைகள் எதுவும் இல்லை. மனைவி துர்காவிடம் 720 கிராம் நகைகள் உள்ளன. இருவர் பெயரிலும் கார் உட்பட எந்த வாகனங்களும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். தனது பெயரில் 3 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகளும், மனைவி துர்கா பெயரில் ஒரு கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகளும் என மொத்தம் 4 கோடியே 62 லட்சம் ரூபாய்க்கு அசையும் சொத்துகள் உள்ளன.
விவசாய நிலம், குடியிருப்பு கட்டிடம் என முதல்வர் ஸ்டாலின் பெயரில், 2 கோடியே 96 லட்சம் ரூபாய்க்கும், மனைவி துர்கா பெயரில் 2 கோடியே 11 லட்சம் ரூபாய்க்கும் என 5 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகள் உள்ளன. மொத்தமாக, அசையும், அசையா சொத்துகள் என 9 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பில் சொத்துகள் உள்ளன. தனக்கும், தனது மனவைிக்கும் கடன்கள் இல்லை. வழக்குகள் ஏதும் இல்லை எனவும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிடுள்ளார்.
பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய் தனது பிரமாண பத்திரத்தில், கையில் 2 லட்சம் ரூபாய் ரொக்கம் இருப்பதாகவும், மனைவியிடம் 1 லட்சம் ரூபாய் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். வங்கி சேமிப்பு கணக்குகள், வைப்பீடுகள் என மொத்தம் 404 கோடியே 58 லட்சம் ரூபாய்க்கு அசையும் சொத்துகள் உள்ளன. கட்டிடங்கள், குடியிருப்புகள், நிலங்கள் என அசையா சொத்துகளின் மதிப்பு 115 கோடியே 13 லட்சம் ரூபாய் ஆகும். குற்ற வழக்குகள் ஏதும் தன் பெயரில் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
தனது மனைவி சங்கீதா பெயரில் 15 கோடியே 51 லட்சம் ரூபாய் அசையும் சொத்துகள், 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இரண்டு பிஎம்டபிள்யு, லெக்சஸ், டோயட்டோ வெல்பயர், மாருதி ஸ்விப்ட், டிவிஎஸ் எக்ஸ்எல் உள்ளிட்ட வாகனங்கள் இருக்கின்றன.
தனது பெயரில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 883 கிராம் தங்கம் உள்ளது. 135 காரட் வைர நகைகள் மனைவி சங்கீதா பெயரில் இருக்கிறது. கொடைக்கானலில் இரண்டு பங்களா உள்ளது. தனது பெயரில் கடன் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.
அதேநேரத்தில், தந்தை சந்திரசேகருக்கு 3 கோடியே 2 லட்சம் ரூபாய், மனைவி சங்கீதாவுக்கு 12 கோடியே 60 லட்சம் ரூபாய், தாய் ஷோபாவுக்கு 8 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய், புஸ்ஸி ஆனந்த்துக்கு 3 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரமாண பத்திரத்தில் விஜய் தெரிவித்துள்ளார்.
காரைக்குடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனக்கும், தனது மனைவிக்கும் 3 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பில் சொத்துகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சீமானுக்கு கையிருப்பு 50 ஆயிரம் ரூபாய், வங்கியிருப்பு 7 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய், 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார், 19 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 150 கிராம் தங்கம் என மொத்தம் 39 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய்க்கு அசையும் சொத்துகள் உள்ளன. தனது மொத்தக் கடன் 5 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் என்றும், தன் மீது 24 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், ஆனால் எந்த வழக்குகளிலும் தண்டனை பெறவில்லை என்றும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.
சீமானின் மனைவிக்கு கையிருப்பு 35 ஆயிரம் ரூபாய், வங்கி இருப்பு 5 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய், பங்கு முதலீடு 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், 25 லட்சம் ரூபாய் மற்றும் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு கார்கள், 2 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1,600 கிராம் தங்கம் என மொத்தம் 2 கோடியே 57 லட்சம் ரூபாய்க்கு அசையும் சொத்துகள் உள்ளன.
மேலும், 51 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 25.45 ஏக்கர் வேளாண் நிலம், 36 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10 ஏக்கர் வேளாண் இல்லாத நிலம் என 87 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துகள் உள்ளன. மொத்தக் கடன் 18 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக, சீமானுக்கும், அவரது மனைவிக்கும் சேர்த்து மொத்தம் 3 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகள் உள்ளன.