அரசியல்

‘டஃப்’ மதுரை வடக்கு தொகுதியில் ‘டக்கர்’ வெற்றி யாருக்கு?

ஒய்.டேவிட் ராஜா

மதுரை வடக்குத் தொகுதியானது கடந்த 2011-ம் ஆண்டு தொகுதி மறு சீரமைப்பின்போது உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதி உருவாகி சந்தித்த முதல் இரண்டு (2011, 2016) தேர்தல்களில் அதிமுக வென்றது. எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் தோல்வி யடைந்தது. கடந்த 2021 தேர்தலில் திமுக கூட்டணியில் இந்தத் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்காமல் திமுகவே போட்டியிட்டு அதன் மாநகரச் செயலாளர் தளபதி வென்றார்.

அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட பி.சரவணன் 22,916 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அப்போது சரவணன் இத்தேர்தலில் போட்டியிடுவதற்கு சிலநாட்கள் முன்பு வரை திமுகவில்தான் இருந்தார். அவர், இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்று திருப்பரங்குன்றம் எம்எல்ஏ-வாக இருந்தார். மார்க்சிஸ்ட் கட்சிக்கு திருப்பரங்குன்றம் ஒதுக்கியதால் அதிருப்தியடைந்த அவர், பாஜகவில் சேர்ந்த மறுநாளே மதுரை வடக்குத் தொகுதி வேட்பாளரானார்.

சரவணன், கடந்த 2021-ல் திருப்பரங் குன்றத்தில் போட்டியிட காய் நகர்த்தி வந்ததால் மதுரை வடக்கில் எந்த தயாரிப்பும், திட்டமிடலும் இல்லாமல் போட்டியிட்டார். அப்படியிருந்தும் திமுக வேட்பாளர் கோ.தளபதிக்கு கடும் போட்டியைக் கொடுத்தார். ஆனால், இந்த முறை கடந்த சில ஆண்டுகளாகவே திட்டமிட்டு, அதிமுக தலைமையிடம் அடம்பிடித்து மதுரை வடக்கில் ‘சீட்’ பெற்று போட்டியிடுகிறார். இந்த முறை டாக்டர் சரவணன், திமுகவை வீழ்த்த மிகப்பெரிய திட்டமிடு தலுடன் களத்தில் குதித்துள்ளார்.

திமுக வேட்பாளர் கோ.தளபதி, தனது பகுதிச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்களை கடந்த ஓராண்டுக்கு முன்பிருந்தே தொகுதியில் களம் இறக்கி தேர்தல் பணிகளைத் தொடங்கினார். காங்கிரஸ் கட்சி வடக்குத் தொகுதியை கூட்டணியில் பேசி பெறுவதற்கு முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த திமுக மாநகரச் செயலாளர் கோ.தளபதி, ‘பூத்’ கமிட்டிக்குக்கூட ஆட்கள் இல்லாத காங்கிரஸ் கட்சி என்று விமர்சனம் செய்துவிட்டார்.

காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், இந்தமுறை எக்காரணம் கொண்டும் மதுரை வடக்குத் தொகுதியை விட்டுக்கொடுக்க மாட்டோம், கார்கேயிடம் பேசி காங்கிரஸ் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று கூறினார். தன்னுடைய மாமனாருக்காக மதுரை வடக்குத் தொகுதியைக் கேட்டு மாணிக்கம்தாகூர் கலகம் செய்கிறார் என திமுகவினர் கொதித்தனர். இரு தரப்பினரும் ஒருவரை விமர்சனம் செய்தும், வடக்கு எங்களுக்கே என்று மாறிமாறி சுவரொட்டிகள் ஓட்டியதால் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கே விரிசல் ஏற்படும் நிலை உருவானது.

கோ.தளபதி (திமுக), சரவணனை (அதிமுக) தவிர புதிதாக தவெக வேட்பாளர் கல்லாணை போட்டியிடுகிறார். கடந்தமுறை தனித்துப் போட்டியிட்ட மநீம தற்போது திமுக கூட்டணியில் உள்ளது. அதிமுக கூட்டணியில் அமமுக இணைந்துள்ளது. நாதக சார்பில் திருநாவுக்கரசு மற்றும் சுயேச்சைகள் உட்பட 13 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தொகுதியில் சுமார் 35 ஆயிரம் பேர் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர்.

கடந்த தேர்தலில் திமுக, பாஜக, நாதக, மநீம, அமமுக என 5 முனைப்போட்டி இருந்த நிலையில், இத்தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, நாதக என 4 முனைப் போட்டியாக களம் மாறியுள்ளது. தவெக, நாம் தமிழர் கட்சிகள் பெறப்போகும் வாக்குகள், கோ.தளபதி, டாக்டர் சரவணன் இருவரில் யார் வெற்றிபெறப் போகிறார் என்பதை தீர்மானிக்கும் என்று கள நிலவரம் சொல்கிறது.

கட்டாய வெற்றியில் தளபதி, சரவணன்

திமுக வேட்பாளர் கோ.தளபதி, 2-வது முறையாக வெற்றிபெற்றால் மட்டுமே தன்னுடைய மாவட்டச் செயலாளர் பதவியைத் தக்கவைக்க முடியும். அதனால், சொந்த செல்வாக்கு, திமுகவின் பலம் மற்றும் தமிழக அரசின் திட்டங்கள் போன்றவற்றை எடுத்துக் கூறி பிரச்சாரம் செய்கிறார். `கடைசி நேர கவனிப்பும்' கனமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

அதிமுக வேட்பாளர் பி.சரவணனுக்கும், இத்தேர்தல் அவரது அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடியதாக பார்க்கப்படுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, மதுரை மாவட்டத்தில் தனது கோட்டாவில் வழங்கிய இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற வேட்கையில் டாக்டர் சரவணன் திமுகவுக்கு இணையான கவனிப்பு, தன்னுடைய அனைத்து உத்திகளையும், வியூகங்களையும் பயன்படுத்தி வருகிறார்.

தனது மருத்துவமனை மற்றும் அறக்கட்டளை மூலம் தொகுதி எம்எல்ஏ-வாக இல்லாமலே பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார். அதனால், ஆளும்கட்சி வேட்பாளராகவும், ஆளும் கட்சி மாவட்டச் செயலாளராகவும் கோ.தளபதி இருந்தாலும் அவருக்கு டாக்டர் சரவணன் கடும் போட்டியாளராகத் திகழ்கிறார்.

SCROLL FOR NEXT