“கலைஞர் மகளிர் உரிமைத் தொகையாக 5 ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இது பெண்களுக்கு சர்ப்ரைஸ். மக்கள் விரோதிகளுக்கு நான் கொடுத்த ஷாக். இதுதான் என் ஸ்டைல்” என்று மேடைகளில் மார்தட்டுகிறார் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.
தோல்வி பயத்தில்தான் முதல்வர் ஸ்டாலின் 5000 ரூபாய் அறிவித்துள்ளார் என அதிமுக, பாமக, பாஜக, நாம் தமிழர், தவெக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர். அதே நேரத்தில் உரிமைத் தொகை திட்டத்தை நிறுத்த பாஜக - அதிமுக கூட்டணி செய்த சதியை முறியடித்து, ஸ்டாலின் ‘சிக்ஸர்’ அடித்துள்ளார் என திமுக கூட்டணிக் கட்சிகள் பெருமிதப்பட்டு வருகின்றன.
எதிர்க்கட்சிகள் விமர்சனங்கள் செய்தாலும், மொத்தமாக வந்த 5000 ரூபாய் தொகை என்பது பெண்களின் வாக்குகளில் கணிசமான தாக்கத்தை உருவாக்கும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். ஆனால், “மகளிர் உரிமைத் தொகை மட்டுமே தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது ஒரு மூடநம்பிக்கை” எனச் சொல்லி, திமுக கூட்டணிக்குள் மீண்டும் ஓர் அரசியல் குண்டை வீசியிருக்கிறார் காங்கிரஸ் மூத்த நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி.
திமுக கூட்டணியில் கூடுதல் இடங்கள் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டு காங்கிரஸ் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின், “தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த ராகுல் காந்திக்கு நெருக்கமான பிரவீன் சக்ரவர்த்தி, “தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சரிவராது என்ற மாயையை ஏற்படுத்தி உள்ளனர். மற்ற மாநிலங்கள் கூட்டணியை ஏற்கும்போது தமிழகம் மட்டும் ஏன் ஏற்கக் கூடாது?” என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில்தான், பிரவீன் சக்ரவர்த்தி தனது 'எக்ஸ்' பக்கத்தில், "மகளிர் உரிமைத் தொகை ஒரு சிறந்த நலத்திட்டம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை; அதைச் செயல்படுத்தியது பாராட்டத்தக்கது. ஆனால், இந்த ஒரு திட்டம் மட்டுமே தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது வெறும் மூடநம்பிக்கை. கடந்த மூன்று ஆண்டுகளில், தேர்தலுக்கு முன்னதாக இதுபோன்ற திட்டங்களை அறிவித்த 9 பெரிய மாநிலங்களில், 4 மாநில அரசுகள் மட்டுமே மீண்டும் வெற்றி பெற்றுள்ளன” என்று ஒரு லாஜிக்கை முன்வைத்து கருத்து தெரிவித்திருப்பது திமுக - காங்கிரஸ் கூட்டணியில் மேலும் சலசலப்பை கூட்டியுள்ளது.