முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில், சட்டப்பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பாஜக கைவிட்ட நிலையில், பன்னீர்செல்வம் திமுகவுடன் நெருக்கம் காட்ட தொடங்கி இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பன்னீர்செல்வம் பாஜகவை முழுமையாக நம்பினார். எப்படியும் அதிமுகவில் இணைந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஆனால் பாஜக, பழனிசாமியுடன் கூட்டணி வைத்து, பன்னீர்செல்வத்தை கைவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். தேர்தல் தேதி நெருங்க நெருங்க, பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், ஆர்.வைத்திலிங்கம் திமுகவுக்கு சென்றனர். கு.ப.கிருஷ்ணன், ஜேசிடி பிரபாகரன் ஆகியோர் தவெகவுக்கு சென்றனர். தர்மர் எம்.பி, பழனிசாமியுடன் சேர்ந்துவிட்டார்.
பண்ருட்டி ராமச்சந்திரனும், பன்னீர்செல்வம் அத்தியாயம் முடிந்துவிட்டது எனக் கூறி புதுக்கட்சி தொடங்கிவிட்டார். கையறு நிலையில் இருக்கும் பன்னீர்செல்வம் வேறு வழியின்றி, இதுநாள்வரை தான் ஏற்றிருந்த கொள்கைக்கு முரணாக இருந்தாலும், வேறு வழியின்றி திமுக பக்கம் சாய்ந்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.