திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக உள்ளிட்ட 22 கட்சிகள் உள்ளன. இந்த அணியில் தேமுதிக தான் கடைசியாக வந்து சேர்ந்தது. மற்ற கட்சிகள் நீண்டகாலமாக திமுக கூட்டணியில் இருக்கின்றன. ஆனால், கூட்டணியில் புதிதாக சேர்ந்த தேமுதிகவுக்கு தரப்படும் முக்கியத்துவம் மற்ற தோழமை கட்சிகளிடம் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து திமுக தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், ‘தலைவலியாக இருந்த காங்கிரஸ் பிரச்சினையை முடித்து சற்று மூச்சுவிடும் முன்னரே பழைய மக்கள் நலக் கூட்டணியால் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது. தேமுதிகவுக்கு 10 தொகுதிகள், 1 ராஜ்ய சபா சீட் தருவதாகச் சொல்லித்தான் கூட்டணிக்குள் கொண்டு வந்தது திமுக. ஆனால், மற்ற கட்சிகளை சமாளிப்பதற்காக 6 அல்லது 7 தொகுதிகள் வரை தேமுதிகவுக்கு ஒதுக்கப்படும் என தகவல்கள் வெளியிடப்பட்டன.
தேமுதிகவை முன்வைத்து இடங்களை குறைத்துக் கொள்ளுமாறு மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் திமுக பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் மதிமுக 4, கம்யூனிஸ்ட்கள் தலா 5 இடங்களுக்கு கிட்டதட்ட சம்மதித்து விட்டன. விசிக-வுக்கு மட்டும் 8 தொகுதிகள் ஒதுக்க முடிவானது. ஆனால், தேமுதிக-வுக்கு 10 இடங்கள் தரும் தகவலறிந்த பின்னர், இந்த 4 கட்சிகளும் தங்களுக்கும் கூடுதல் தொகுதிகள் வேண்டுமென கொடிபிடிக்கின்றன. இதில் மதிமுக தனிச்சின்னம் கேட்டும் நச்சரிக்கிறது.
தேமுதிகவுக்கு என்ன கொள்கை இருக்கிறது, நாங்கள் நீண்ட காலமாக கூட்டணியில் இருக்கிறோம். அவர்களுக்கு வாக்கு வங்கியும் பெரிதாக இல்லை என கம்யூனிஸ்ட்கள் கொந்தளிக்கின்றனர். அதனால் அவர்களை சமாதானம் செய்யும் முயற்சிகள் நடக்கின்றன. 2016-ல் மக்கள் நலக் கூட்டணியால்தான் திமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. மீண்டும் அதே கூட்டணியால் இப்போது சிக்கல் வந்துள்ளது” என்றனர்.