மேற்கு வங்கத்தில் ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி அலைகள் நிலவுவதாக அடுக்கடுக்காக விமர்சனங்களை பாஜக முன்வைத்தாலும் கூட மம்தா பானர்ஜி எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் பணிகள் ஆரம்பித்தபோதே சாட்டையை சுழற்றி அசத்த ஆரம்பித்துவிட்டார். அவர் அடுக்கிய குற்றச்சாட்டுகளை உறுதிசெய்வது போலவே, மாநிலத்தில் 62 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டது. எஸ்ஐஆர் பணிகள் ஆரம்பித்தபோது முன்வைத்த எதிர்ப்பின் வீரியம் இன்றளவும் கொஞ்சமும் நீர்த்துப்போகாமல் பார்த்துக் கொண்டுள்ளார் மம்தா.
அது மட்டுமல்லாது, திரிணமூல் காங்கிரஸில் யாரையெல்லாம் முன்வைத்து பாஜக விமர்சனங்களை அடுக்கியதோ, அவர்களையெல்லாம் குறிப்பெடுத்து வைத்தார்போல், இந்த முறை 74 சிட்டிங் எம்எல்ஏக்களை சீட் தராமல் புறக்கணித்துள்ளார் மம்தா பானர்ஜி. இது அவர் எடுத்துள்ள டேமேஜ் கன்ட்ரோல் நடவடிக்கை என்கின்றனர் தேர்தல் அரசியல் நிபுணர்கள்.
அதேவேளையில், அசராத பாஜகவோ, ‘மம்தா பானர்ஜி ஆட்சியில் ஊடுருவல்காரர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள், மம்தா அரசு சிறுபான்மையினரை சமாதானப்படுத்தும் அரசியலைச் செய்கிறது, இந்த ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது, எம்எல்ஏக்களே வசூல் வேட்டையில் ஈடுபடுகிறார்கள், வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடுகிறது, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’ என்று அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது.
இவற்றில் ஆர்ஜி கர் மருத்துவமனை பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை, கொலை சம்பவம் இந்தத் தேர்தலில் மம்தாவுக்கு எதிராக நிச்சயமாக எதிரொலிக்கும் என்றே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மற்றபடி மேற்கு வங்க வாக்காளர்களில் கடந்த முறையைவிட 62 லட்சம் வாக்காளர்கள் சார் நடவடிக்கை மூலம் சுரண்டப்பட்டிருந்தாலும், முஸ்லிம் வாக்குகள் மம்தாவுக்கு கை கொடுக்கும் என்றே கூறுகிறார்கள்.
மேற்கு வங்க சட்டப்பேரவைக் களம் சாதி ரீதியில் கட்டமைக்கப்படவில்லை என்றாலும் கூட, மாத்துவா பட்டியல் சமூகத்தின் நம்பிக்கையை இழந்தது மம்தாவுக்கு பெரிய பின்னடைவு என்றே கூறுகின்றனர். மாத்துவா பட்டியல் சமூகத்தினர், மேற்கு வங்க மக்கள் தொகையில் 23.51%-ஐ உள்ளடக்குகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் பாஜகவின் பக்கம் திரும்பிவிட்டதால் அது இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு கூடுதல் சீட்களைப் பெற்று இன்னும் பலமாக வழிவகுக்கும் என்று கணிக்கப்படுகிறது.
உயர் சாதி இந்துக்கள், பட்டியல், பழங்குடியின சமூகத்தைத் தவிர மற்ற பிரிவினர், சிறுபான்மையினர் மம்தா தீதீயின் பக்கம் தான் நிற்கின்றனர் என்பதால் அவருக்கே தேர்தலில் வெற்றி வாய்ப்பு அதிகம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். அதை உறுதி செய்வது போல் சிஎன்என் - நியூஸ் 18 கருத்துக் கணிப்பும் திரிணமூல் காங்கிரஸ் 184 முதல் 194 வரை எளிதில் வென்றுவிடும். கிட்டத்தட்ட திரிணமூலுக்கு இது ‘க்ளியர் ஸ்வீப்’ என்று கூறுகிறது. பாஜக 98 முதல் 108 சீட் வரை வெற்றி கிட்டும் என்றும் அந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது.
பாஜகவுக்கு ஏன் வெற்றி வாய்ப்பு இல்லை என்று அரசியல் நிபுணர்கள் தரப்பில் சில காரணங்களும் அடுக்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு மிகப் பெரிய சவாலாக சொல்லப்படுவது, மாநிலத்தில் கட்சிக்குள் நிலவும் பூசல்கள். உட்கட்சிப் பூசல்களால் அமைப்பு ரீதியாக பாஜக உடைந்து கிடக்கிறது. அதுமட்டுமல்லாது, கடந்த முறை, மம்தா vs பாஜக என்ற பாணியில் பிரச்சாரங்களை முன்னெடுத்த பாஜக இந்த முறை அந்தப் புள்ளியை பாஜக vs திரிணமூல் ஆட்சியின் அவலங்கள் என்று திருப்ப வேண்டும் என்று அம்மாநில அரசியல் நோக்கர்களும், பாஜக அனுதாபிகளும் கூறுகின்றனர்.
மேற்கு வங்க அரசு ஊழலில் திளைத்து, வசூல் ராஜா போக்கைக் கடைப்பிடிக்கும் ஆட்சி என்ற விமர்சன ஆயுதத்தை பாஜக சற்று தாமதமாகக் கையிலெடுத்ததால் அதன் தாக்கத்தை இந்தத் தேர்தலிலேயே பார்ப்பது கடினம் என்கின்றனர். பூவா, தலையா என்பது நாணயத்தை சுண்டிவிட்டால் தான் தெரியும் என்பதுபோல், இரு கட்டங்களாக நடைபெறவிருக்கும் மேற்கு வங்க தேர்தல் முடிவு மே.4-ல் வெளியாகும் போது திரிணமூல் vs பாஜக போட்டியில் வெற்றி யார் பக்கம் என்பதை உணர்த்தும்.