அரசியல்

கேள்விகளை அடுக்கிய சிபிஐ... சளைக்காத விஜய்... - டெல்லியில் நடந்தது என்ன?

செய்திப்பிரிவு

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த 2025 செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில், இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஜனவரி 12-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு விஜய்க்கு சிபிஐ கடந்த 6-ம் தேதி சம்மன் அனுப்பியது.

சென்னையில் இருந்து விஜய் செவ்வாய்க்கிழமை காலை 7.40 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை பொதுச் செயலாளர் சிடிஆர்.நிர்மல்குமார், உதவியாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள், வழக்கறிஞர்களும் சென்றனர்.

டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் விஜய் காலை 11.30 மணி அளவில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக திட்டமிடப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன? இதுதொடர்பாக காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் என்னென்ன தகவல்கள் பரிமாறப்பட்டன? 10 ஆயிரம் பேருக்கு அனுமதி வாங்கப்பட்ட நிலையில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டதா?

திட்டமிட்ட நேரத்தைவிட சுமார் 7 மணி நேரம் தாமதமாக வந்தது ஏன்? உங்கள் வருகை தாமதம் ஆனதால் மக்கள் நீண்ட நேரம் காத்திருந்ததே நெரிசலுக்கு காரணம் என்ற புகாருக்கு உங்கள் விளக்கம் என்ன? என்பது உட்பட பல கேள்விகளை அதிகாரிகள் எழுப்பியுள்ளனர். சிபிஐ வசம் இருநத பிரச்சார நிகழ்வு தொடர்பான வீடியோ காட்சிகள், ட்ரோன் கேமரா பதிவுகளை காண்பித்த அதிகாரிகள், அந்தச் சூழலில் கூட்டத்தை கட்டுப்படுத்த ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விளக்கம் கேட்டனர்.

கூட்டத்தின் நடுவே பிரச்சார வாகனம் சென்ற விதம், அதன் வேகம், அதனால் ஏற்பட்ட நெரிசல் குறித்து ஓட்டுநரிடம் ஏற்கெனவே நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் விஜய்யிடம் குறுக்கு விசாரணையும் நடத்தப்பட்டது. சிபிஐ அதிகாரிகளின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு விஜய்யும் சளைக்காமல் பதில் அளித்துள்ளார். குறிப்பாக, அதிகாரிகளின் கேள்விகளுக்கு விஜய் மிக நிதானமாக பதில் அளித்ததாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

அதேநேரம், விசாரணையின் நடுவே சட்ட ரீதியான சில நுணுக்கங்களை விளக்க அவரது வழக்கறிஞர்கள் குழுவும் அங்கு தயாராக இருந்தது. விஜய் அளித்த பதில்களை சிபிஐ அதிகாரிகள் எழுத்துப் பூர்வமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டனர். விசாரணைக்கு நடுவே, விஜய்க்கு ஒரு மணி நேரம் உணவு இடைவேளை வழங்கப்பட்டது. பின்னர், விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. மாலை 6.15 மணி அளவில் விசாரணை முடிந்த பிறகு, காரில் விஜய் புறப்பட்டுச் சென்றார்.

டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய்யிடம் விசாரணை நடந்த அதே நேரத்தில், தமிழக ஆயுதப்படை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை தலைமையிட கூடுதல் காவல் ஆணையர் ஜோஷி நிர்மல் குமார் ஆகியோரிடமும் சிபிஐ அதிகாரிகள் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். கரூர் நெரிசல் சம்பவத்தின்போது, சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்தார் டேவிட்சன் தேவாசீர்வாதம். நெரிசல் நடந்த இடத்துக்கு சென்ற இவர், செய்தியாளர்களை சந்தித்து சம்பவம் தொடர்பாக விரிவாக விளக்கி பேட்டி அளித்திருந்தார். இதனால், இவரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.

அதேபோல, நெரிசல் சம்பவம் நடந்தபோது, திருச்சி மத்திய மத்திய மண்டல ஐ.ஜி.யாக இருந்தவர் என்பதால், ஜோஷி நிர்மல் குமாரிடமும் விசாரணை நடைபெற்றுள்ளது. பொங்கல் விடுமுறை முடிந்த பிறகு, மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கூறி, இவர்களை சிபிஐ அதிகாரிகள் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT