2026 சட்டப்பேரவைத் தேர்தலில், ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தென் மாவட்டத்தில் போட்டியிடும் முனைப்பில் ஈடுபட்டுள்ளது. என்டிஏ கூட்டணியில் இருக்கும் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், தென் மாவட்டத்தில் போட்டியிடும் திட்டத்தில் உள்ளது.
இது குறித்து, நம்மிடம் பேசிய அக்கட்சியின் நிர்வாகிகள் சில தகவல்களைப் பகிர்ந்து கோண்டனர். “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நாங்கள் நீடிக்கிறோம். எங்கள் கட்சியின் பொதுக்குழு, செயற்குழு முடிந்துவிட்டது. இனி, சிறப்பு செயற்குழுக் கூட்டம் தான் நடக்க வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எங்களுக்கு ஓர் அங்கீகாரம் தருவார்கள் என்று நம்புகிறோம். அப்படிக் கிடைக்கும் பட்சத்தில் தென் மாவட்டத்தில் போட்டியிட விரும்புகிறோம்.
தென்காசி, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், வில்லிபுத்தூர் உள்ளிட்ட தேவேந்திரகுல வேளாளர் மக்கள் அதிகமுள்ள தொகுதிகளில் நாங்கள் தேர்தல் பணிகளை துரிதப்படுத்தி வருகிறோம். ஜனவரி தொடக்கம் முதல், சட்டப்பேரவை தொகுதி வாரியாக பொதுக் கூட்டங்களையும் நடத்த இருக்கிறோம். அதன்படி பரமக்குடி, தென்காசி, சங்கரன்கோவில், ஓட்டப்பிடாரம், மானாமதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், வாசுதேவநல்லூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளில் அந்தக் கூட்டங்களை நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம். இதில் எங்கள் கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இருக்கிறார்.
தேவேந்திரகுல வேளாளர் மக்களை பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் ஆகிய 2 கோரிக்கைகளை மையப்படுத்தி இந்தக் கூட்டங்களை நடத்த இருக்கிறோம்” என்றனர் ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக கட்சியினர்.