ஆந்திராவின் கர்னூல் மாவட்டம், துக்காலி மண்டலம், ஜொன்னகிரி பகுதியில் புதிய தங்கச் சுரங்கம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இது இந்தியாவின் முதல் தனியார் தங்கச் சுரங்கம் ஆகும். இதை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்திருக்கிறார். அப்போது அவர் பகிர்ந்த தகவல்களை முதலில் பார்ப்போம்.
ராயல சீமா பகுதியை ரத்தின சீமாவாக மாற்றுவது இந்த ஜொன்னகிரியில் தொடங்க உள்ளது. இப்பகுதியை முன்பெல்லாம் சுவர்ணகிரி என்று அழைத்தனர். அசோக சக்கரவர்த்தியின் 4-வது தலை நகரம் இதுவாகும். பல நூறு வருடங்களுக்கு முன்பே இங்கு சாலைகளில் ரத்தின கற்கள், தங்கம் போன்றவற்றை கொட்டி விற்பனை செய்வார்கள். அசோகர் காலத்து சாசனங்கள் இதை நமக்கு தெரிவிக்கின்றன.
ஒரு காலத்தில் கேஜிஎஃப் தங்கச் சுரங்கம் குறித்து நாடு முழுவதும் பரவலாக பேசப்பட்டது. ஆனால் இப்பொழுது ஜொன்னகிரி குறித்து நாடு முழுவதும் பேசப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு ஒரு டன் தங்கம் வெட்டி சுத்தம் செய்யப்படும். ஆரம்பத்தில் 400 கிலோவில் தொடங்கி போகப்போக 1,000 கிலோவுக்கு வரும்.
தற்போது இங்கு 800 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். விரைவில் மேலும் 1,500 ஊழியர்கள் நியமனம் செய்யப்படுவர். வருங்காலத்தில் இங்கு 5,000 ஊழியர்கள் பணி செய்வார்கள். ஜொன்னகிரி ஆந்திராவின் ஒரு ‘பிராண்ட்’ ஆக மாறும். நகைக்கடைகள் இங்கு அமைக்கப்படும் என்றார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.
இந்தியாவில் ‘கேஜிஎஃப்’ எனச் சொல்லப்படும் கோலார் தங்கச் சுரங்கம் மூடப்பட்ட பின், ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்குப் பின் உதயமாகி இருக்கிறது இந்த ஜேஜிஎஃப். ஜொன்னகிரி கிராமத்தில் மட்டும் 50 டன் தங்கம் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அப்பகுதியில் 1500 ஏக்கர் நிலத்தை தோண்ட உள்ளனர். கூடுதலாகவும் நிலங்களையும் கொள்முதல் செய்ய உள்ளனர். இந்த தங்கச் சுரஙத்தின் மதிப்பு 7,500 கோடி முதல் 9,000 கோடி ரூபாய் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஜொன்னகிரி தங்கச் சுரங்கத்தை ஜியோமைசூர் சர்வீஸ் பிரைவேட் லிமிட் நிறுவனம் 400 கோடி முதலீட்டில் செயல்படுத்தி வருகிறது. இந்த சுரங்கத்தில் இருந்து ஆண்டுதோறும் 1,000 கிலோ தூய தங்கம் ஆண்டுதோறும் உற்பத்தி செய்ய இயலும் எனச் சொல்லப்படுகிறது. இந்த சுரங்கத்தை ஜியோமைசூர் சர்வீசஸ் பிரைவேட் லிமிட் மற்றும் திரிவேணி எர்த்மூவர்ஸ், டெக்கான் கோல்ட் மைன்ஸ் லிமிட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்துகிறார்கள். இந்த சுரங்கப் பணிகள் தாக்கமாக குர்னூல் மாவட்டம் அமைந்திருக்கும் ராயலசீமா பகுதி பெரும் வளர்ச்சி அடையும் என்று அரசு நம்புகிறது.
கர்நாடகாவில் உள்ள கோலார் தங்கச் சுரங்கம் 2000-ம் ஆண்டில் மூடப்பட்டபின் நாட்டில் ஹட்டி தங்கச் சுரங்கம் மட்டும் ஆண்டுக்கு ஒன்றரை டன் தங்கம் உற்பத்தி செய்து வருகிறது. இப்போது ஜொன்னகிரியில் தங்கம் கிடைக்கும் பட்சத்தில் தங்கம் உற்பத்தி அதிகரிக்கும், நாட்டின் அந்நியச் செலாவணி சுமை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“சுரங்கம் தோண்டுவதற்கு உலகிலேயே அதிநவீன எந்திரங்களையும், தொழில்நுட்பங்களையும் பயன்படுத்த இருக்கிறோம். கோலாருக்கு அடுத்து ஜொன்னகிரி மிகப் பெரிய தங்கச் சுரங்கமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மத்திய நிலவியல் துறையினர் முதலில் ஆய்வு செய்து அளித்த மதிப்பீட்டை விட தங்கம் வளம் இங்கு அதிகமாக இருப்பது இப்போது தெரியவந்துள்ளது.
15 முதல் 20 ஆண்டுகள் வரை இங்கு தங்கம் வெட்டி எடுக்க முடியும், நிலத்தை துளையிடுதல், தோண்டுதல், பாறைகளை அரைத்தல் போன்றவை கார்பன் இன் லீச் தொழில்நுட்பம் மூலம் செய்யப்பட்டு தங்கம் பிரித்தெடுக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்படும்” என்று திரிவேணி எர்த்மூவர்ஸ் மேலாண் இயக்குநர் பி.கார்த்திகேயன்.