அரசியல்

திமுகவிடம் கறார் காட்டும் ஐயுஎம்எல் - தொகுதிப் பங்கீடு சிக்கல்

செய்திப்பிரிவு

கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு கடையநல்லூர், வாணியம்பாடி, சிதம்பரம் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், மூன்றிலுமே அந்தக் கட்சி தோற்றுப் போனது. அதனால் இம்முறை சிறுபான்மையின வாக்காளர்கள் அதிகம் உள்ள தொகுதியை திமுக தலைமையிடம் கேட்டுப்பெற அக்கட்சி வியூகம் வகுத்து வருகிறது.

அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், திருச்சி கிழக்கு உள்ளிட்ட சில தொகுதிகளை திமுக கூட்டணியில் கேட்டுப் பெறுவது என அந்த மாவட்டங்களில் நடைபெற்ற ஐயுஎம்எல் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து அக்கட்சியின் மேலிட நிர்வாகிகள் நம்மிடம் பேசுகையில், “கடந்த முறை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின்போது எங்களுக்கு முதலில் பாபநாசம், ஆம்பூர், கடையநல்லூர் ஆகிய தொகுதிகள் தான் ஒதுக்கப்பட்டன. பின்னர், அது மாற்றப்பட்டு கடையநல்லூர், வாணியம்பாடி, சிதம்பரம் ஆகிய தொகுதிகளை ஒதுக்கினர்.

இருந்தபோதும், கூட்டணி தர்மம் கருதி வேண்டா வெறுப்பாக அந்தத் தொகுதிகளை ஏற்றுக்கொண்டோம். ஆனால், இம்முறை விரும்பும் தொகுதிகளை பெறுவதில் உறுதியாக இருக்கிறோம். அதன்படி, வக்பு போர்டு முன்னாள் தலைவர் அப்துல் ரஹ்மான், பொதுச்செயலாளர் அபுபக்கர் ஆகியோரில் ஒருவர் போட்டியிட வசதியாக திருச்சி கிழக்கு தொகுதியையும், மாநிலச் செயலாளர் ஆடுதுறை ஷாஜஹான் போட்டியிட வசதியாக பாபநாசம் தொகுதியையும் கேட்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது” என்றனர்.

இதில், கடந்த முறை திமுக கூட்டணியில் திருச்சி கிழக்கு தொகுதியில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜும், பாபநாசம் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவும் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இந்த இரண்டு தொகுதிகளையும் இம்முறை முஸ்லிம் லீக் கேட்பது, தோழமைக் கட்சிகளுக்குள் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தோழமைக் கட்சியினர் சமூக ஊடகங்களில் வார்த்தை யுத்தம் நடத்தி வருகின்றனர். - அ.சாதிக் பாட்சா

SCROLL FOR NEXT