தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் அதிரடியாகத் தொடங்கியுள்ளன. முதல் நாளே ஐயூஎம்எல் கட்சிக்கு திமுக விதித்த ‘கறார்'’ நிபந்தனை கூட்டணிக்குள் கவனம் ஈர்த்துள்ளது. அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக உயர்நிலைக் குழுவுடன், காதர் மொகிதீன் உள்ளிட்ட ஐயூஎம்எல் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, தங்கள் கட்சியினர் 5 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாக காதர் மொகிதீன் கோரிக்கை வைத்தார். பின்னர் பேச்சுவார்த்தையின் போது, ‘குறைந்தபட்சம் 4 இடங்களாவது வேண்டும்’ என இறங்கி வந்தார். “புதிய கட்சிகள் கூட்டணிக்கு வந்துள்ளதால், பழைய கட்சிகள் இடங்களை விட்டுக் கொடுக்க வேண்டும். கடந்த முறை போட்டியிட்ட 3 இடங்களிலுமே நீங்கள் தோல்வியடைந்தீர்கள். எனவே, இந்த முறை 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும்” என திமுக தரப்பு கறாராகத் தெரிவித்துவிட்டது.
பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த காதர் மொகிதீன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாங்கள் 5 இடங்கள் கேட்டோம், ஆனால் அவர்கள் 2 இடங்கள் மட்டுமே தருவதாகக் கூறியுள்ளனர். இது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசிப்போம். இது கொள்கை ரீதியான கூட்டணி, தொகுதிகளுக்காக நாங்கள் கூட்டணி மாறமாட்டோம்” என்று உறுதியாகத் தெரிவித்தார்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ஐயூஎம்எல் கட்சி வாணியம்பாடி, சிதம்பரம், கடையநல்லூர் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், அந்த மூன்றிலுமே அக்கட்சி தோல்வியைத் தழுவியது. எனவே, இந்த முறை திமுக தனது வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய தொகுதிகளைக் குறைக்க முடிவு செய்திருக்கிறது.