உள்நாட்டு நிகழ்வுகள், வெளியுறவு விவகாரங்கள் எனப் பல்வேறு விஷயங்களை முன்வைத்து பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்தன. எனினும், தேர்தல் களத்தில் தொடர் வெற்றிகளைச் சுவைத்துவரும் பாஜகவுக்கு இந்த ஆண்டும் வெற்றிகரமான ஆண்டாகவே அமைந்தது. எதிர்க்கட்சிகளிடம் பலவீனமும், பாஜகவை வீழ்த்துவதற்கான வியூகம் அமைப்பதில் தடுமாற்றமும் நீடித்தன.
2024 மக்களவைத் தேர்தலிலும் ஹரியாணா சட்டமன்றத் தேர்தலிலும் வாக்குகள் திருடப்பட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டு தேசிய அரசியலில் அனலைக் கிளப்பியது. எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தப் பணியின் மூலம் குழப்பங்களை ஏற்படுத்தத் தேர்தல் ஆணையத்தின் மூலம் மத்திய அரசு முயல்வதாகவும், பிஹாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகவும் ராகுல் காந்தி விமர்சித்தார்.
ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகள் அரசியல் அரங்கில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தினாலும் வாக்காளர்களின் மத்தியில் அதிர்வுகளை ஏற்படுத்தத் தவறின. பிஹார் சட்டமன்றத் தேர்தலில் 202 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அபார வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது.
பிஹார் வெற்றி தந்த களிப்பில், 2026 மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தலில் வெல்வதற்கான வியூகங்களில் பாஜக இறங்கியிருக்கிறது. தற்காப்பு வியூகத்தில் இறங்கியிருக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, எஸ்.ஐ.ஆர். பணிகளில் பெரும் தவறுகள் நடந்திருப்பதாக விமர்சித்திருக்கிறார். ஆனால், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களில் தோல்வியடைந்திருக்கும் திரிணமூல் காங்கிரஸ் அரசு, இந்து - முஸ்லிம் கலவரத்தைத் தூண்டுவதாக பாஜக குற்றம்சாட்டியிருக்கிறது.
முன்னதாக, பிப்ரவரியில் நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்தி, பாஜக ஆட்சியைப் பிடித்தது அக்கட்சிக்குப் பெரும் பலம் சேர்த்தது. எனினும், டெல்லியில் அதிகரித்திருக்கும் காற்று மாசு பிரச்சினை பாஜக அரசுக்கு நெருக்கடியாக மாறியிருக்கிறது. முந்தைய ஆம் ஆத்மி அரசுதான் இதற்குக் காரணம் என பாஜக பதிலடி கொடுத்தது.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தின் முதல்வர் பதவியிலிருந்து பிரேன் சிங் விலகினார். குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. கலவரத்துக்குப் பின்னர் பிரதமர் மோடி மணிப்பூருக்குச் செல்லவில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறிவந்த நிலையில், செப்டம்பர் 13-இல் பிரதமர் அங்கு சென்றார்.
ஏப்ரல் 22-இல் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் ஒரு பிரிவான தி ரெசிஸ்டன்ட் ஃபிரன்ட் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக்கொண்டது.
இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையைத் தொடங்கியது. எனினும், சில நாள்களிலேயே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. போரை நிறுத்தியது தான்தான் என அமெரிக்க அதிபர் டிரம்ப் பல முறை சொல்லிக்காட்டிக்கொண்டே இருக்கிறார். அதைச் சுட்டிக்காட்டி பிரதமர் மோடிக்கு அடிக்கடி அழுத்தம் கொடுக்க ராகுல் காந்தி தவறவில்லை.
உக்ரைன் போரில் ஈடுபட்டிருக்கும் ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதைக் காரணம் காட்டி, இந்தியாவிலிருந்து வரும் இறக்குமதிப் பொருள்களுக்கு, ஏற்கெனவே இருந்த வரிகளுடன் சேர்த்து 50 சதவீத வரி விதித்த டிரம்ப்பால் இந்தியாவில் பல தொழில்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இது ஒரு பொருளாதார மிரட்டல் என்றும், பிரதமர் மோடியின் பலவீனத்தால் மக்கள் நலன் பாதிக்கப்படக் கூடாது என்றும் ராகுல் விமர்சித்தார்.
ஜூலை 21-இல் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், முதல் நாளிலேயே உடல்நலக் காரணங்களைக் கூறி ஜகதீப் தன்கர் குடியரசு துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் ஏன் தலைமறைவாக இருக்கிறார் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியது. குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்காதது ஏன் எனத் திமுகவுக்கு பாஜக கிடுக்கிப்பிடி கேள்வி எழுப்பியது.
ராகுல் தலைமையிலான மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் கூட்டத்துக்குப் போகாதது, கேரள உள்ளாட்சித் தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் வென்ற பாஜகவை வாழ்த்தியது எனப் பல்வேறு தருணங்களில் காங்கிரஸுக்குக் கசப்பை ஏற்படுத்தினார். எனினும், 2026-இல் கேரள சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், சசி தரூர் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் சங்கடத்தில் இருக்கிறது காங்கிரஸ். அதேவேளையில், உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி பெரும் வெற்றியைப் பெற்றிருப்பது அக்கட்சிக்குத் தெம்பைத் தந்திருக்கிறது.
அணுசக்தித் துறையைத் தனியார் நிறுவனங்களுக்குத் திறந்துவிடும் சாந்தி மசோதா, வக்ஃபு திருத்த மசோதா போன்றவை விவாதங்களை உருவாக்கின. - வெ.சந்திரமோகன்