காங்கிரஸில் கூட்டணி குறித்து பேச கிரிஷ் சோடங்கர் தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செ.ராஜேஷ்குமார் ஆகியோரை கொண்ட ஒருங்கிணைப்பு குழுவினர், கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் சென்னை சத்தியமூர்த்தி பவனில் டிசம்பர் 3-ம் தேதி ஆலோசனை நடத்தினர். இதில் மூத்த தலைவர்கள் கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு, சு.திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ், கே.ஆர்.ராமசாமி உள்ளிட்டோர் தங்கள் கருத்துகளை கூறினர்.
மூத்த தலைவர்களிடம் தனித்தனியே கருத்து கேட்டபோது, “கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் கூடுதலாக சில கட்சிகள் வர வாய்ப்புள்ளது. இந்த எதார்த்தத்தை புரிந்துகொண்டு, கடந்த தேர்தலில் கொடுத்த 25 இடங்களுக்கு குறையாமல் பெறுவதுதான் நல்லது” என சில தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் சில தலைவர்கள், “நாம் இல்லாமல் திமுக ஆட்சி இல்லை. அதனால் ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும். ஒரு மக்களவை தொகுதிக்கு 2 சட்டப்பேரவை தொகுதிகள் வீதம், மொத்தம் 78 தொகுதிகளை பெற வேண்டும்.
இப்போது கூட்டணி வலுவாக இருப்பதாலும், அதிமுக கூட்டணி வலிமை குறைந்து காணப்படுவதாலும், போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளன. இதன் மூலம் 2 ராஜ்யசபா எம்பி பதவிகளும் கிடைக்கும். இந்த வாய்ப்பை கை நழுவ விட்டுவிடக்கூடாது” என்று ஆலோசனை கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அனைவரின் கருத்துகளையும் கேட்ட கிரிஷ் சோடங்கர் தலைமையிலான ஒருங்கிணைப்பு குழுவினர் தனியாக ஆலோசனை நடத்தி, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொகுதிகள் அடங்கிய ஒரு பட்டியலை தயாரித்தனர். அதனுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.
தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வந்துள்ளதாக அக்குழு தெரிவித்தபோது, “இன்னும் நாங்கள் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவை அமைக்கவில்லை. அமைத்தபின் தெரியப்படுத்துகிறோம். அதன் பிறகு தொதி பங்கீடு குறித்து பேசலாம்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறும்போது, “திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கு இந்த சந்திப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இண்டியா கூட்டணி வலிமையாக இருக்கிறது என்பதற்கு இன்றைய சந்திப்பு ஒரு முன்னுதாரணம். இது வெற்றி கூட்டணி” என்றார்.