அரசியல்

பாஜக ‘சாதித்தது’ எப்படி? @ மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல்

செய்திப்பிரிவு

ம​கா​ராஷ்டி​ரா​வின் 29 மாநக​ராட்​சிகளுக்கு ஜனவரி 15-ம் தேதி தேர்​தல் நடை​பெற்​றது. இதில் பாஜக மட்​டுமே அபார வெற்றி பெற்றிருக்கிறது. பாஜக​வின் கூட்​டணி கட்சிகளான ஏக்​நாத் ஷிண்டேயின் சிவசே​னா, அஜித் பவாரின் தேசி​ய​வாத காங்​கிரஸ் கட்​சிகள் பின்​னடைவை சந்தித்து உள்​ளன.

மகா​ராஷ்டி​ரா​வின் 29 மாநக​ராட்​சிகளில் மொத்​தம் 2,869 வார்​டு​கள் உள்​ளன. இதில் பாஜக 1,421 வார்​டு​களை கைப்பற்றி உள்​ளது. ஏக்​நாத் ஷிண்​டே​வின் சிவசேனா கட்சிக்கு 367, காங்​கிரஸுக்கு 327, உத்​தவ் தாக்​கரே​வின் சிவசே​னா​வுக்கு 173, அஜித்​ ப​வாரின் தேசிய​வாத காங்கிரஸுக்கு 161, சரத் பவாரின் தேசி​ய​வாத காங்கிரஸுக்கு 29, மகா​ராஷ்டிர நவ நிர்​மாண் சேனாவுக்கு 13 வார்​டு​கள் கிடைத்​துள்​ளன.

இது தொடர்​பாக அரசி​யல் நோக்​கர்​கள் சில கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர். மகா​ராஷ்டி​ரா​வில் பாஜக கூட்​டணி ஆட்சி நடை​பெறுகிறது. ஆனால் மாநக​ராட்சி தேர்​தலில் பாஜக கூட்​டணி கட்​சிகளிடையே கருத்து வேறுபாடு​ எழுந்​தன. மும்பை மாநக​ராட்சி தேர்​தலில் மட்டும் பாஜக, ஷிண்டேவின் சிவசேனா கூட்​டணி அமைத்து போட்​டி​யிட்​டன. பல்​வேறு மாநகராட்சிகளில் பாஜக கூட்​டணி கட்​சிகள் எதிரெ​திர் அணி​யாக போட்டியிட்​டன.

          

இந்தச் சூழலில்தான் பாஜக மட்​டும் அபார வெற்றி பெற்றிருக்​கிறது. மொத்​த​முள்ள 29 மாநக​ராட்​சிகளில், 17 மாநக​ராட்​சிகளில் அந்தக் கட்சி அறு​திப் பெரும்பான்மையை பெற்றுள்​ளது. ஷிண்டே கட்​சி​யுடன் இணைந்து மும்பை உட்பட மேலும் 8 மாநக​ராட்​சிகளை பாஜக கூட்​டணி கைப்​பற்றி இருக்​கிறது. ஒரு காலத்​தில் மும்​பை, தானே பிராந்​தி​யங்​களில் பால் தாக்​கரே​வின் சிவசேனா மிக​வும் வலு​வாக இருந்​தது. சிவசேனா உடைந்த பிறகும் உத்​தவ் தாக்​கரே, ராஜ் தாக்​கரேவுக்கு இந்த பிராந்​தி​யங்​களில் செல்​வாக்கு நீடித்​தது.

ஆனால், தற்​போதைய தேர்​தலில் மும்​பை, தானே பிராந்தியங்​களில் தாக்​கரே குடும்ப கட்​சிகளை பின்னுக்கு தள்ளி அசைக்க முடி​யாத சக்​தி​யாக பாஜக உரு​வெடுத்து இருக்​கிறது. மகா​ராஷ்டி​ரா​வின் புனே, சோலாப்​பூர், கோலாப்​பூர் பிராந்​தி​யங்​களில் சரத் பவாரின் தேசி​ய​வாத காங்​கிரஸ் ஆதிக்​கம் செலுத்தி வந்​தது. அந்த கட்சி உடைந்த பிறகு சரத் பவார், அவரது தம்பி மகன் அஜித் பவார் இந்த பிராந்​தி​யங்​களில் ஆதிக்​கம் செலுத்தி வந்தனர்.

தற்​போதைய மாநக​ராட்சி தேர்​தலில் சரத் பவாரும் அஜித் பவாரும் கூட்​டணி அமைத்து போட்​டி​யிட்​டனர். ஆனால் இரு​வருமே பெரும் பின்​னடைவை சந்​தித்து உள்​ளனர். புனே, சோலாப்​பூர், கோலாப்​பூரில் பாஜக​வின் செல்​வாக்கு கணிச​மாக உயர்ந்​திருக்​கிறது. இந்த தேர்தலில் பாஜக மட்டுமே அபார வெற்றி பெற்​றிருக்​கிறது. துணை முதல்வர் ஏக்​நாத் ஷிண்​டே​வின் சிவசேனா தானே மாநகராட்சி​யுடன் முடங்கி உள்​ளது. மற்​றொரு துணை முதல்​வர் அஜித் பவாரின் தேசி​ய​வாத காங்​கிரஸ் கட்சி ஒரு மாநக​ராட்​சி​யைக்​கூட கைப்​பற்​ற​வில்​லை.

மாநக​ராட்சித் தேர்​தலின்​போது சிவசேனா உத்​தவ் அணியின் வாக்​கு​கள், காங்​கிரஸ் மற்​றும் தேசி​ய​வாத காங்​கிரஸின் வாக்​கு​கள் பாஜகவுக்கு கைமாறி இருக்கிறது. இதன் ​காரண​மாகவே உள்​ளாட்​சித் தேர்​தலில் பாஜக மட்​டும் அபார வெற்றி பெற்​றிருக்​கிறது என்று அரசியல் நோக்கர்கள் தெரி​வித்​துள்​ளனர்.

இதனிடையே, ஹைதரா​பாத்​ எம்​பி​யான அசாது​தீன் ஒவைசி​யின் ஏஐஎம்​ஐஎம் கட்சி 144 வார்​டு​களில் வென்று கவனம் பெற்​றுள்​ளது.

இக்​கட்​சிக்கு சிறு​பான்​மை​யினர் அதி​க​மாக வாக்​களித்​திருப்​பது தெரியவந்​துள்​ளது. இதன்​மூலம், சிறு​பான்மை வாக்​கு​களை வழக்​க​மாகப் பெற்ற காங்​கிரஸ் மற்​றும் சமாஜ்​வாதி கட்​சிகளுக்கு பெரும் இழப்பு ஏற்​பட்​டுள்​ளது.

மும்​பை​யில், 2017-ம் ஆண்​டை விட இந்த முறை ஏஐஎம்​ஐஎம் சிறப்​பாகச் செயல்​பட்​டுள்​ளது. குறிப்​பாக, மும்பை மாநக​ராட்​சி​யின் முஸ்​லிம்​கள் அதி​கம் வாழும் பகு​தி​யாக கோவண்டி உள்​ளது. இதன் 6 வார்​டு​களை​யும் வழக்​க​மாக வெல்​லும் சமாஜ்​வா​தி​யிட​மிருந்து ஏஐஎம்​ஐஎம் பறித்துள்ளது.

சாம்​பாஜி நகர் எனப் பெயர் மாறிய அவுரங்​கா​பாத்​தி​லும் முஸ்​லிம்​கள் அதி​கம். இங்கு காங்​கிரஸ் அதிக வார்டுகளில் வெல்​வது வழக்​கம். ஆனால், இந்த தேர்​தலில் ஒவைசி​யின் கட்​சி​யின் வெற்றி பெற்று இரண்​டாவது நிலையை பெற்​றுள்​ளது. 29 மாநக​ராட்​சிகளி​லும் சேர்த்து மொத்​தம் 144 கவுன்​சிலர்​களை வென்​றதன் மூலம், ஒவைசி தனது பலத்தை நிரூபித்​துள்​ளார்.

இந்த முடிவு​களின் மூலம், அசாதுதீன் ஒவைசி தலைமையிலான கட்சி மாநில அரசி​யலில் தனது வலுவான இருப்பை நிலைநிறுத்தியுள்​ளது, காங்​கிரஸின் ராகுல் காந்​திக்​கும், சமாஜ்​வா​தி​யின் அகிலேஷ் யாதவுக்கும் பதற்​றத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது. ஏஐஎம்ஐஎம் கட்​சி​யின் இந்த எழுச்சி காங்​கிரஸ் மற்​றும் சமாஜ்​வா​திக்கு ஓர் எச்​சரிக்​கை​யாக அமைந்​துள்​ளது.

SCROLL FOR NEXT