அரசியல்

கோவை வடக்கு தொகுதியில் வாகை சூடப்போவது யார்?

இரா.கார்த்திகேயன்

கோவை தெற்கு, தொண்டாமுத்தூர் தொகுதிகளை தொடர்ந்து அதிகம் எதிர்பார்க்கப்படும் தொகுதியாக கோவை வடக்கு தொகுதி உள்ளது. பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் போட்டியிடுவதுதான் இதற்கு முக்கிய காரணம்.

முருகனின் 7-ம் படை வீடாக போற்றப்படும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் இந்த தொகுதிக்குள் தான் வருகிறது. அரசுத்துறையில் பல உயர் பொறுப்புகளில் இருக்கும் ‘அதிகாரிகளின் உற்பத்தி கூடாரமான’ கோவை வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் பாரதியார் பல்கலைக்கழகம் இந்த தொகுதியில் தான் உள்ளன.

வடகோவை ரயில் நிலையம், மேட்டுப்பாளையம் சாலை பேருந்து நிலையம் என பல்வேறு பகுதிகளை உள்ளடக்கியது. கோவை மாநகரில் லாலிரோடு, ரத்தினபுரி, கண்ணப்பநகர், சங்கனூர், கணபதி, சாய்பாபா காலனி, டாடாபாத், ஆர்.எஸ்.புரத்தின் ஒருபகுதி என மாநகராட்சியின் 18 வார்டுகளை கொண்ட தொகுதி ஆகும்.

பேரூர் வட்டத்தில் வீரகேரளம், வடவள்ளி, மருதமலை, கல்வீரம்பாளையம் பகுதிகள் இந்த தொகுதிக்குள் வருகின்றன. கோவை வடக்கு தொகுதியில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. கோவையின் அடையாளமான வெட் கிரைண்டர், பம்ப்செட் தயாரிப்பு நிறுவனங்கள், லேத் பட்டறைகள், பவுண்டரிகள் ஏராளமாக உள்ளன.

தொகுதியில் நிலவும் பிரச்சினை

கோவை வடக்கு தொகுதியில் போக்குவரத்து நெரிசல் தீர்க்கப்படாத பிரச்சினையாக இருக்கிறது. சத்தியமங்கலம் சாலை, மேட்டுப்பாளையம் சாலை, தடாகம் சாலை, மருதமலை சாலை என முக்கிய சாலைகள் அனைத்தும் அகலப்படுத்தப்படாமலும், தேவையான இடங்களில் மேம்பாலங்கள் இல்லாமலும் போக்குவரத்து நெரிசலுக்கு பிரச்சினையாக இருக்கின்றன.

மேட்டுப்பாளையம் சாலையில் எம்.ஜி.ஆர். மார்க்கெட், புதிய பேருந்து நிலையம் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இரண்டும் இருப்பதால் தொடர்ந்து நெரிசல் நிலவுகிறது. சூயஸ் மூலம் செயல்படுத்தப்படும் 24 மணிநேர குடிநீர் திட்டம் முழுமை அடையாமல் இருப்பது, கழிவுநீர் மேலாண்மை, சங்கனூர் பள்ளம் சீரமைப்பு பணிகள் என தொகுதிக்குள் பிரச்சினைகள் ஏராளம்.

இத்தொகுதி கோவை கிழக்கு என்ற பெயரில் 1951-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை தேர்தலை சந்தித்தது. 5 முறை மார்க்சிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் 4 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் 2 முறையும், திமுக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. தொகுதி மறுசீரமைப்பில் கோவை வடக்கு தொகுதியாக மாறியது.

தொகுதியில் போட்டியிட்ட முதல் 3 முறையும் அதிமுகவே வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்தமுறை கூட்டணி கட்சியான பாஜகவுக்கு ஒதுக்கியுள்ளது. வானதி சீனிவாசன் இத்தொகுதியை குறிவைத்து காய் நகர்த்தி வந்த நிலையில், அண்ணாமலை களமிறங்கப் போவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இறுதியாக வேட்பாளராக வானதி சீனிவாசன் அறிவிக்கப்பட்டார். அண்ணாமலையும் அவருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இருப்பினும் அதிமுகவில் எதிர்பார்த்து வேலை செய்தவருக்கும் சீட் கிடைக்காத அதிருப்தி, கட்சிக்குள் இருக்கும் குழப்பங்கள் எல்லாம் வானதி சீனிவாசனுக்கு எந்தளவுக்கு சறுக்கலை ஏற்படுத்தும் என்பது தேர்தல் முடிவுகளில் தெரியவரும்.

கடந்த முறை சுமார் 4001 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக தோல்வி அடைந்ததாலும், தொடர்ச்சியாக தோல்வி கண்டு வருவதற்கு தீர்வாகவும் இந்த தேர்தலில் வடக்கை குறி வைத்து மாநகர் மாவட்ட பொறுப்பாளரான துரை செந்தமிழ்ச்செல்வனை களம் இறக்கி உள்ளது.

நாம் தமிழர் கட்சி சார்பில் நர்மதாவும், தவெக சார்பில் சம்பத்குமாரும் போட்டியிடுகின்றனர். பாஜக- திமுக வேட்பாளர்களிடையேதான் முக்கிய போட்டி நிலவும் நிலையில், கோவை வடக்கில் வாகை சூடப்போவது யார் என்பது மே 4-ல் தெரிந்துவிடும்.

வாக்காளர்கள் விவரம்

  • ஆண் - 1,45,849

  • பெண் - 1,51,061

  • 3-ம் பாலினத்​தவர் - 29

  • மொத்த வாக்​காளர்கள் - 2,96,939

SCROLL FOR NEXT