தஞ்சாவூர் மாவட்டத்தில் முழுவதும் கிராம பின்னணி கொண்ட தொகுதியாக ஒரத்தநாடு உள்ளது. கல்லணைக் கால்வாய் பாசனமும், மழை பெய்தால்தான் சாகுபடி என்கிற மானாவாரி பாசனமும் கொண்ட பகுதியாகும். 60 சதவீதம் நெல் உற்பத்தியும், மீதம் கரும்பு, சோளம், கடலை போன்ற பயிர்களும் சாகுபடி செய்யப்படுகின்றன.
இந்த தொகுதியில் முக்குலத்தோர், பட்டியலினத்தவர்கள், முத்தரையர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இங்கு அதிமுக 6 முறையும், திமுக 5 முறையும், காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆர்.வைத்திலிங்கம் 90,063 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின் எம்.ராமச்சந்திரன் 61,228 வாக்குகளும், அமமுகவின் மா.சேகர் 26,022 வாக்குகளும், நாதகவின் எம்.கந்தசாமி 9,050 வாக்குகளும் பெற்றனர்.
இந்த முறை, கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வைத்திலிங்கம் தற்போது திமுக சார்பிலும், கடந்த தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட்ட மா.சேகர் தற்போது அதிமுக சார்பிலும் போட்டியிடும் வித்தியாசமான களமாக அமைந்துள்ளது.
திமுக வேட்பாளர் வைத்திலிங்கம், இந்த தொகுதியிலிருந்து அதிமுக சார்பில் 5 முறை போட்டியிட்டு 4 முறை வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிடும் மா.சேகர், வைத்திலிங்கம் அதிமுகவில் இருந்த போது அவரை தனது வழிகாட்டியாக கொண்டு செயல்பட்டவர்.
பின்னர் அதிமுகவிலிருந்து பிரிந்து அமமுக சென்ற இவர், கடந்த முறை வைத்திலிங்கத்தை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியுற்றார். பின்னர் அமமுக விலிருந்து விலகி மீண்டும் அதிமுக சென்ற அவர், தற்போது மீண்டும் அதே தொகுதியில் களம் காண்கிறார். இதனால், இந்த தேர்தல் குரு, சிஷ்யன் போட்டியிடும் தொகுதியாக உள்ளது.
திமுக வேட்பாளர் வைத்திலிங்கம், அதிமுகவில் அமைச்சராக இருந்தபோது, தமிழகத்திலேயே முதல்முறையாக, பேரூராட்சியாக உள்ள ஒரத்தநாட்டில் புதை சாக்கடை திட்டத்தை செயல்படுத்தியதையும், கலைக் கல்லூரி, கிராமப்பகுதிகளில் சாலை வசதிகள் செய்து கொடுத்துள்ளதையும் நினைவூட்டி, ரூ.8 ஆயிரம் கூப்பன் உள்ளிட்ட திமுக வாக்குறுதிகளை எடுத்துக் கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ஒரத்தநாடு பேரூராட்சித் தலைவரான மா.சேகர், அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள பிரிட்ஜ், சிலிண்டர்(ஆண்டுக்கு 3 இலவசம்), நெல் மூட்டை (குவிண்டாலுக்கு ரூ.3,500) ஆகியவற்றை ஒரு வாகனத்தில் வைத்து பிரச்சாரத்துடன் எடுத்துச் செல்கிறார்.
அத்துடன் இவர் வைத்திலிங்கத்துடன் பல ஆண்டுகளாக உடனிருந்து தேர்தல் பணியாற்றி உள்ளதால், அவரது பிளஸ், மைனஸ் அத்துப்படி என்பதால், அவரது தேர்தல் வியூகங்களை உடைத்து வெற்றி பெற முடியும் என நம்பிக்கையுடன் உள்ளார். இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை என்பதால் இருவருக்கும் இடையே போட்டி கடுமையாக உள்ளது.
அதேபோல, திரைப்பட நடிகர் எஸ்.திருமுருகன் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். பல மாதங்களாகவே இவர் தொகுதி முழுவதும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். தவெக வேட்பாளர் மருத்துவர் அரவிந்த் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த தொகுதியில் போட்டியிடும் 4 பேரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்பார்ப்புகள்
* ஏரி, குளங்களை முழுமையாக தூர் வாரி நீர் மேலாண்மையை மேம்படுத்த வேண்டும்.
* மருங்குளம் பகுதியில் துணை மின் நிலையம் அமைத்து மின் பற்றாக்குறையை போக்க வேண்டும்.
* குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் அரைவை திறனை அதிகப்படுத்த வேண்டும்.
* தரிசு நிலங்களை மேம்படுத்த சிறப்பு திட்டங்களை கொண்டுவர வேண்டும்.
* முந்திரி சாகுபடி அதிகமாக இருப்பதால் முந்திரிக்கான தொழிற்சாலை அமைக்க வேண்டும்.
* பருத்திக்கோட்டை, ஒக்கநாடு கீழையூரில் உள்ள மின் இறவை பாசனத் திட்டத்தை மேம்படுத்தி முழு செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
இதுவரை வென்றவர்கள்
1967 - எல்.கணேசன் - திமுக
1971 - எல்.கணேசன் - திமுக
1977 - டி.எம்.தைலப்பன் - திமுக
1980 - தா.வீராச்சாமி - காங்கிரஸ்
1984 - தா.வீராச்சாமி - அதிமுக
1989 - எல்.கணேசன் - திமுக
1991 - அழகு.திருநாவுக்கரசு - அதிமுக
1996 - பி.ராஜமாணிக்கம் - திமுக
2001 - ஆர்.வைத்திலிங்கம் - அதிமுக
2006 - ஆர்.வைத்திலிங்கம் - அதிமுக
2011 - ஆர்.வைத்திலிங்கம் - அதிமுக
2016 - எம்.ராமச்சந்திரன் - திமுக
2021 - ஆர்.வைத்திலிங்கம் - அதிமுக
வாக்காளர்கள் எண்ணிக்கை
ஆண்கள் - 1,12,298
பெண்கள் - 1,18,947
மூன்றாம் பாலினத்தவர் - 6
மொத்தம் - 2,31,251