புதுச்சேரியில் நடைபெற்ற தவெக பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசும்போது, “1977-ல் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்பதற்கு முன்பாகவே, எம்ஜிஆர் 1974-ல் புதுச்சேரியில் ஆட்சியை பிடித்தார். எம்ஜிஆர் நமக்கானவர், அவரை மிஸ் பண்ணிடாதீங்க என தமிழ்நாட்டுக்கு அலெர்ட் செய்ததே புதுச்சேரிதான். அப்படிப்பட்ட புதுச்சேரியை மறக்க முடியுமா?
தமிழக மக்களைப் போலவே, புதுச்சேரி மக்களும் கடந்த 30 ஆண்டுகளாக என்னை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் இந்த விஜய் தமிழகத்துக்கு மட்டும்தான் குரல் கொடுப்பார் என நினைக்காதீர்கள். புதுச்சேரி மக்களுக்கும் சேர்ந்து குரல் கொடுப்பேன். அது எனது கடமையும்கூட.
புதுச்சேரி அரசு, தமிழகத்தில் உள்ள திமுக அரசாங்கத்தை போன்றது கிடையாது. வேறு ஒரு அரசியல் கட்சி நடத்தும் நிகழ்ச்சியாக இருந்தாலும், அந்த நிகழ்ச்சிக்கு தன்னெழுச்சியாக வரக்கூடிய மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து, பாரபட்சம் இல்லாமல் நடந்து கொள்கிறது. புதுச்சேரி முதல்வருக்கு எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதை பார்த்தாவது தமிழகத்தில் உள்ள திமுக அரசு கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், அவர்கள் கற்றுக் கொள்ள மாட்டார்கள். வரப் போகின்ற தேர்தலில் அவர்கள் 100% கற்றுக் கொள்வார்கள். மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.
புதுவை அரசு கூட்டணி ஆட்சியில் இருந்தாலும் புதுச்சேரியை ஒன்றிய அரசு எந்த விஷயத்திலும் கண்டு கொள்ளவில்லை என்பது மக்களுக்கே தெரியும். புதுச்சேரிக்கு இன்னும் மாநில அந்தஸ்து கொடுக்கவில்லை. புதுச்சேரி மக்களுக்கு ஒன்று மட்டும் சொல்லிகொள்கிறேன். திமுகவை நம்பாதீர்கள்; அவர்கள் நம்பவைத்து ஏமாற்றி விடுவார்கள்.
இந்த விஜய் புதுச்சேரி மக்களுக்காக எப்பவும் குரல் கொடுப்பான். வரவிருக்கும் புதுச்சேரி தேர்தல் களத்தில் தவெக கொடி பட்டொளி வீசி பறக்கும்... வெற்றி நிச்சயம்” என்றார் விஜய்.