கடலூர்: காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விசிக - பாமக முதன்முறையாக நேரடியாக மோதுகிறது. தமிழக சட்டப்பேரவைக்கு ஏப். 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் நான்குமுனை போட்டி ஏற்பட்டுள்ளது.
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி ஆகிய அணிகள் களத்தில் இறங்கியுள்ளன. நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிடுகின்றன.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் மதசார்பற்ற கூட்டணி கட்சிகளில் 4 தொகுதிகிளில் திமுகவும், 5 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளும் பேட்டியிருகின்றன. இதில் காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தேசிய முற்போக்கு கூட்டணி சார்பில் பாமக போட்டி யிடுகிறது.
அக்கட்சியின் வேட் பாளராக மாநில மருத்துவ அணி செயலாளர் மருத்துவர் அன்பு.சோழன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் காட்டுமன்னார்கோவில் தொகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
இந்த தொகுதியில் முதன் முறையாக விசிக - பாமக நேரடியாக மோதுகிறது. இங்கு கடந்த 2006-ல் விசிக சார்பில் போட்டியிட்ட ரவிக்குமார் வெற்றி பெற்றார். அதைத்தொடர்ந்து 2011-ல் ரவிக்குமார் தோல்வியடைந்தார்.
2016-ல் விசிக தலைவர் திருமாவளவன் போட்டி யிட்டு தோல்வியடைந்தார். பின்னர் 2021-ல் விசிக சார்பில் சிந்தனைசெல்வன் வெற்றி பெற்றார். அப்போது பாமக போட்டியிடவில்லை.
இந்நிலையில் தற்போது இந்த தொகுதியில் விசிக - பாமக இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. விசிக தலைவர் திருமாவளவன் 10 ஆண்டுகளுக்கு பின்னர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
கடந்த 2001-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் கடலூர் மாவட்டம் மங்களூர் தொகுதியில் திருமாவளவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமாவளவன் தற்போது சிதம்பரம் மக்களவை தொகுதி உறுப்பினராக இருந்து வருகிறார். இத்தொகுதியில் தான் காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவை தொகுதி இடம் பெற்றுள்ளது.
காட்டுமன்னார்கோவிலில் பாமகவுடன் விசிக தலைவர் திருமாவளவன் நேரடியாக மோதுவதால் இந்த தொகுதி ஸ்டார் அந்தஸ்து பெற்ற தொகுதியாக மாறியுள்ளது.
இந்த தொகுதியின் வெற்றி தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விசிக மற்றும் பாமகவினர் உற்சாகத்துடன் தேர்தல் களப்பணிகளை தொடங்கியுள்ளனர்.