சாத்தூர் சட்டப் பேரவைத் தொகுதியில் இந்த முறை ஐந்து முனைப் போட்டி நிலவுவதால் வாக்குகள் சிதறும் நிலை உள்ளது.
தவெக, நாதக உள்ளிட்ட சிறிய கட்சிகளும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதால் தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவதால், நட்சத்திரத் தொகுதியாக மாறியுள்ளது.
திமுக சார்பில் கடற்கரைராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் ஆனந்தராஜா, தவெக சார்பில் அஜித், சசிகலா தலைமையிலான கூட்டணியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இசக்கிராஜா ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.
நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி தொகுதியில் கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். திருநெல்வேலி தொகுதியில் ஒரு முறை வெற்றி பெறுபவர் அடுத்த முறை தோல்வியடைவார் என்ற ‘சென்டிமென்ட்’ உள்ளது. அதன் காரணமாக இந்த முறை சாத்தூரில் களமிறங்கியுள்ளார்.
பாஜக, அதிமுக, கூட்டணி கட்சிகளின் வாக்குகள் மட்டுமின்றி சமுதாய வாக்குகளும் தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் நயினார் நாகேந்திரன்.
ஆனால், இவரது சமுதாய வாக்குகளைப் பிரிக்கும் வகையில் சசிகலா கூட்டணியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இசக்கிராஜா தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக, கிராமப்புறங்களில் உரிமையோடும், கனிவோடும், சென்டிமென்டாகவும் பேசி வாக்குச் சேகரித்து வரும் இசக்கிராஜா குறிப்பிட்ட, வாக்கு வங்கியை தன்னிடம் வைத்துள்ளார்.
இதனால், மாநில நிர்வாகிகள், தேசியத் தலைவர்கள், பாஜக ஆளும் பல்வேறு மாநில முதல்வர்களைப் பிரச்சாரத்தில் பாஜக களமிறக்கி வருகிறது.
கடந்த முறை இந்தத் தொகுதியை மதிமுகவுக்கு ஒதுக்கிய திமுக, இம்முறை நேரடியாக களமிறங்கியுள்ளது. திமுக வேட்பாளர் கடற்கரைராஜ் ஏற்கெனவே சாத்தூர் மாவட்ட கவுன்சில் தலைவராக இருந்துள்ளார். உள்ளூர் பிரமுகர் என்பதால், அவருக்கென தனி ஆதரவு வட்டம் உள்ளது. அவருக்கு ஆதரவாக மாவட்டச் செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இவ்விரு பிரதானக் கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆனந்தராஜா, தவெக வேட்பாளர் அஜித் ஆகியோர் தொகுதியின் பல்வேறு இடங்களுக்கு சுற்றிச் சுழன்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதானக் கட்சிகளின் மீது அதிருப்தியில் உள்ள வாக்காளர்களைக் குறிவைத்து இவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள், முதல் முறை வாக்காளர்களின் கவனத்தைப் பெற தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தத் தொகுதியில் திமுக, பாஜக இடையே பிரதானப் போட்டி நிலவினாலும், தவெக, நாதக, சசிகலா ஆதரவுபெற்ற வேட்பாளர் ஆகியோரும் கணிசமான வாக்குகளைப் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஐந்து முனைப் போட்டி காரணமாக வாக்குகள் சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது.