அதிமுக - பாஜக கூட்டணி 2026 தேர்தலுக்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செவ்வாய்க்கிழமை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் அதிமுக மற்றும் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்தப் பேச்சுவார்த்தை நான்கு அடுக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று அதிமுக - பாஜக கூட்டணியை பலப்படுத்துவது. அதாவது ஏற்கெனவே நட்புறவில் உள்ள பாமக, தேமுதிக, புதிய தமிழகம், ஜான்பாண்டியன், மூமுக உள்ளிட்ட கட்சிகளை உள்ளே இழுக்கும் வியூகம் வகுக்கப்பட்டதாம். அந்தக் கட்சிகளுக்கு உள்ள டிமாண்ட் என்ன, அதனை எப்படி பூர்த்தி செய்வது என்பன குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. சிறிய கட்சிகள் மற்றும் அமைப்புகளைக்கூட விடாமல் கூட்டணிக்குள் கொண்டுவருவது பற்றி சில ஆலோசனைகள் பியூஷ் கோயல் வழங்கியுள்ளார்.
இரண்டாவது, அதிமுகவிலிருந்து விலகிய தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோரை உள்ளே கொண்டு வருவது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் கருத்துக் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தினகரன், ஓபிஎஸ் போன்றோர் இடம்பெறாவிட்டால் அதிமுக - பாஜக கூட்டணிக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக பேசப்பட்டுள்ளது. அதேபோல இவர்களை சிக்கலில்லாமல் கூட்டணிக்குள் கொண்டுவருவது பற்றியும் பாஜக சார்பில் சில ஆலோசனை சொல்லப்பட்டுள்ளது.
தங்களுக்கு மொத்தமாக தொகுதிகளை கொடுத்தால், அதிலிருந்து ஓபிஎஸ், தினகரனுக்கு பங்கிட்டு கொடுப்பதாகவும் உறுதியளிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மூன்றாவதாக, முதல்கட்ட தொகுதி பங்கீடு பற்றி பேசப்பட்டுள்ளது. அதில் பாஜக தரப்பில் சுமார் 40 தொகுதிகள் வரை கேட்கப்பட்டதாகவும், அதிமுக 23 தொகுதிகள் வரை ஒதுக்க ஒப்புக்கொண்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது. மேலும், 170 தொகுதிகளில் நிற்க விரும்புவதாக அதிமுக தரப்பில் சொல்லப்பட்டுள்ளதாம். இதுமட்டுமின்றி ஒவ்வொரு கட்சிக்கும் ஒதுக்கக்கூடிய தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து உத்தேசமான பட்டியலையும் அதிமுக கொடுத்துள்ளதாம்.
நான்காவதாக, திமுக மற்றும் தவெக கூட்டணியை தங்கள் பாணியில் எதிர்கொள்ளும் வியூகம் பற்றி பாஜக தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. புதிய கட்சியான தவெகவை எதிர்கொள்வது பற்றியும் விரிவாக பேசப்பட்டுள்ளது. அதில் தவெக சிறுபான்மையினரின் வாக்குகளை பிரிப்பதால், அது திமுகவுக்கு பாதகமாகும். எனவே, தவெக தனியாக நிற்பதே நல்லது என சொல்லப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் தவெக கூட்டணியை பலப்படுத்த விடக்கூடாது எனவும் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. தவெக பக்கம் சாய வாய்ப்புள்ள ஓபிஎஸ், தினகரன், புதிய தமிழகம், தேமுதிக போன்ற கட்சிகளிடம் முறையாக பேசி அதிமுக கூட்டணி பக்கம் கொண்டுவரவும் ஆலோசனைகள் சொல்லப்பட்டுள்ளது.
இதனிடையே, பழனிசாமியின் தலைமையை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழக மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் திட்டவட்டமாக கூறியதும் கவனிக்கத்தக்கது.