அரசியல்

திமுகவின் ரூ.5,000 அஸ்திரம்... வெற்றி வியூகமா, தோல்வி பயமா?

செய்திப்பிரிவு

மகளிர் உரிமைத் தொகையாக 5 ஆயிரம் ரூபாயை விடுவித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “அதிமுக - பாஜக கூட்டணி தேர்தலை காரணம் காட்டி மகளிர் உரிமைத் தொகையை நிறுத்துவதற்கான சூழ்ச்சி செய்கிறது. அடுத்து அமைய உள்ள திராவிட மாடல் 2.0 ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்’ என அடுத்தடுத்த பரபரப்புகளையும் அவர் பற்றவைத்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி, ‘2024 மக்களவைத் தேர்தலின்போது உரிமைத் தொகை நிறுத்தப்படவில்லை. அப்படி இருக்கையில் எப்படி வரும் தேர்தலில் நிறுத்த முடியும்? ஒரு திட்டம் செயல்பாட்டில் இருக்கும்போது, அதனை தேர்தல் நேரத்தில் நிறுத்த முடியாது என்பதை நாடே அறியும். 2026 தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில்தான் இந்த ரூ.5000 அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்’ என்றார். தோல்வி பயத்தில்தான் முதல்வர் ஸ்டாலின் ரூ.5000 அறிவித்துள்ளார் என அதிமுக, பாமக, பாஜக, நாம் தமிழர், தவெக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

          

தமிழகத்தில் திமுக, அதிமுக, தவெக, நாதக என நான்கு முனைப் போட்டி உறுதியாகிவிட்டது. ஆட்சி மீதான எதிர்ப்பு வாக்குகள் மூன்றாகப் பிரிகிறது என ஒருபக்கம் தெம்பாக இருந்தாலும், வெற்றிக்கான எந்த வாய்ப்பையும் தவறவிடக் கூடாது என நினைக்கிறது திமுக. மேலோட்டமாக பலமான கூட்டணி, சிதறிக்கிடக்கும் எதிர்க்கட்சிகள் என பாசிட்டிவ் விஷயங்கள் இருந்தாலும், ஆளும் கட்சிக்கு கிடைத்த ‘உளவுத்துறை’ தகவல்கள் அத்தனை இனிப்பாக இல்லை என்றே சொல்லப்படுகிறது.

அதீத நம்பிக்கையில் இருந்து 2016 தேர்தலில் கோட்டைவிட்டது போல இப்போதும் நடந்துவிடுமோ என்ற அச்சம் ஒருபக்கம் திமுகவுக்கு வர ஆரம்பித்துவிட்டது. அதன் தாக்கமாகவே அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம், மடிக்கணினி உள்ளிட்ட திட்டங்களை கடைசி நேரத்தில் திமுக அரசு அறிவித்தது. விலைவாசி உயர்வு, குடும்ப அரசியல், வேலை வாய்ப்பின்மை உள்ளிட்டவை திமுக அரசுக்கு தலைவலியாக மாறும் என்பதால், பெண்களின் வாக்குகளைக் கவர ‘சீக்ரெட் அஜென்டா’ வாக ரூ.5000 அறிவிக்கப்பட்டதாக சொல்கின்றனர். அதேபோல, விவசாயிகள், இளைஞர்களின் வாக்குகளைக் கவர இன்னும் சில அறிவிப்புகளும் வெளிவரும் என சொல்லப்படுகிறது.

எதிர்க்கட்சிகள் விமர்சனங்கள் செய்தாலும், மொத்தமாக வந்த ரூ.5000 தொகை என்பது பெண்களின் வாக்குகளில் கணிசமான தாக்கத்தை உருவாக்கும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். இதனை ஓவர் டேக் செய்யும் அளவுக்கான ‘அறிவிப்புகள் மற்றும் செயல் திட்டங்களை’ உருவாக்கும் நெருக்கடியில் இப்போது அதிமுக கூட்டணி நிற்கிறது என்பதே உண்மை. பெண்களின் வாக்குகளைக் கவரும் வகையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முதல் ‘கோல்’ போட்டு ஆட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளது திமுக. எதிர்க்கட்சிகளின் எப்படி எதிர்கொள்ளப்போகின்றன எனப் பார்ப்போம்!

SCROLL FOR NEXT