அரசியல்

திமுகவின் டாப் 30 வாக்குறுதிகள் என்னென்ன?

செய்திப்பிரிவு

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்டி வெளியிடப்பட்டுள்ள திமுக தேர்​தல் அறிக்​கையில் 50 தலைப்புகளில் 525 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றில் டாப் 30 வாக்குறுதிகள் இவை:

> வரு​மான வரி செலுத்​தாத குடும்​பங்​களைச் சேர்ந்த இல்​லத்​தரசிகள், 8 ஆயிரம் ரூபாய் மதிப்​பிலான கூப்​பனை பயன்​படுத்தி வாஷிங் மெஷின், டிவி, ஃபிரிட்ஜ், மிக்​சி, மைக்​ரோவேவ் அவன், மின் அடுப்​பு​கள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்​களை புதி​தாக வாங்​கிக்​கொள்ள அல்​லது ஏற்​கெனவே பயன்​படுத்தி வரும் பழைய பொருட்​களுக்கு மாற்​றாக​ பெற்​றுக்​கொள்ள ‘இல்​லத்​தரசி’ திட்​டம் செயல்படுத்​தப்​படும்.

> முதல்​வரின் காலை உணவு திட்​டம் எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்​தப்​படும்.

> ஒரு கோடியே 31 லட்சம் சகோதரி​கள் பெற்று வரும் மகளிர் உரிமைத் தொகை ​1,000 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்​கப்​படும்.

> இலவச மின்​சா​ரம் பெறும் 20 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட விவசாயிகளுக்கு நவீன மின் பம்ப்செட் வழங்​கப்​படும்.

> அடுத்த 5 ஆண்டு​களில் 10 லட்​சம் புதிய வீடு​கள் கட்​டித்​தரப்​படும்.

> முதல்​வரின் மருத்​துவக் காப்​பீடு திட்​டத்​தில் சேர்க்கப்படுவதற்கான வரு​மான வரம்பு 5 லட்​ச​ம் ரூபாயாகவும், காப்​பீட்​டுத் ​தொகை 10 லட்​சம் ரூபாயாகவும் உயர்த்​தப்​படும்.

> நெல் கொள்​முதல் விலை குவின்​டாலுக்கு 3500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

> கரும்பு கொள்​முதல் விலை டன்னுக்கு 4,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்​படும்.

> பால் கொள்​முதல் விலை லிட்​டருக்கு 5 ரூபாய் உயர்த்தி வழங்கப்​படும்.

          

> முதி​யோர் உதவித்​தொகை 1,200 ரூபாயில் இருந்து 2 ஆயிர​ம் ரூபாயாக​வும், மாற்​றுத் திற​னாளி​களுக்​கான உதவித்​தொகை 1,500 ரூபாயில் இருந்து 2,500 ரூபாயாகவும் உயர்த்​தப்​படும்.

> மீன்​பிடி தடைக்​கால சிறப்பு நிவாரணத் ​தொகை 8 ஆயிரம் ரூபாயில் இருந்து 12 ஆயிரம் ரூபாயாகவும், மீன்​பிடி குறைவு கால சிறப்பு நிவாரணத் ​தொகை 6 ஆயிரம் ரூபாயில் இருந்து 9 ஆயிர​ம் ரூபாயாகவும் உயர்த்​தப்​படும்.

> சுய உதவிக் ​குழு உறுப்பின​ராக இருக்​கும் பெண்​களை, தொழில் ​முனை​வோ​ராக முன்​னேற்ற பிணையின்றி 5 லட்சம் ரூபாய் வரை மானி​யத்​துடன் கடன் வழங்​கப்​படும்.

> பேரிடர் கால இழப்​பீடு​கள் ஹெக்​டேர் ஒன்​றுக்​கு, இறவைப் பாசன பயிர்​கள் மற்​றும் நெற்​ப​யிர்​களுக்கு 25 ஆயிரம் ரூபாய், நீண்​ட​கால பயிர்​களுக்கு 27 ஆயிரம் ரூபாய், மானாவரி பயிருக்கு 12 ஆயிர​ம் ரூபாயாக உயர்த்தி வழங்​கப்​படும்.

> அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​களுக்​காக அறிவிக்​கப்​பட்ட தமிழ்​நாடு உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​திய திட்​டம் சிறப்​பாக செயல்படுத்தப்படும்.

> எட்டாவது ஊதி​யக்​குழு அறிக்​கையை மத்​திய அரசு செயல்​படுத்​தி​யதும், மாநில அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​களுக்​கும் செயல்படுத்தப்​படும்.

> ஒரு லட்சத்து 50 ஆயிரம் அரசு காலி ​பணி​யிடங்​கள் நிரப்​பப்​படும்.

> உயர்​கல்வி பயிலும் 35 லட்​சம் மாணவர்​களுக்கு 5 ஆண்​டு​களில் மடிக்​கணினி வழங்​கப்​படும்.

> தகவல் தொழில்​நுட்ப ஏற்​றுமதி இரண்டரை லட்​சம் கோடி ரூபாயில் ​இருந்து 5 லட்​சம் கோடி ரூபாயாக உயர்த்​தப்​படும்.

> ஆயிரம் கிராம தெய்வ கோயில்​கள் மறுசீரமைக்​கப்​படும்.

> 5 ஆயிரம் கோயில்​களுக்கு குட​முழுக்கு நடத்தப்​படும்.

> சிறு​பான்​மை​யினர் தொழில் தொடங்க டாம்கோ மூலம் கடன் பெறும் உச்​சவரம்பு 30 லட்​ச​ம் ரூபாயாக உயர்த்​தப்​படும்.

> முதல்​வரின் கிராம சாலை திட்​டத்​தின் கீழ் 15 ஆயிரம் கிலோமீட்டர் நீள சாலைகள் 10 ஆயிரம் கோடி ரூபாயில் சீரமைக்​கப்​படும்.

> அனைத்து மாநக​ராட்​சிகள், முக்​கிய நகராட்​சிகளில் 50 புதிய செம்​மொழி பூங்​காக்​கள் அமைக்​கப்​படும்.

> திருச்​சி, மதுரை, கோவை, சேலம் மாநக​ராட்​சிகளின் அரு​கில் நவீன உலகத்தர வசதி​களு​டன் புதிய நகரங்​கள் அமைக்​கப்​படும்.

> தமிழகத்​தில் 10 கைத்​தறி பூங்​காக்​கள் அமைக்​கப்​படும்.

> உயர்கல்விச் சேர்க்கையை அதிகரிக்க, புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்படி மாதம்தோறும் வழங்கப்பட்டு வரும் ஆயிரம் ரூபாய், இனி 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

> உயர்கல்வி முடித்த 5 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் நான் முதல்வன் திட்டத்தில் 1500 ரூபாய் மாத உதவித் தொகையுடன் 6 மாதம் பயிற்சி வழங்கப்படும்.

> புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் நியோ டைடல் பூங்காக்களும், நகரங்களில் தேவைப்படும் இடங்களில் முழு அளவிலான தொழில்நுட்பப் பூங்காக்களும் அமைக்கப்படும்.

> ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை உயர்த்தப்படும்.

> அனைத்து அரசுக் கல்லூரிகளிலும் Wi-Fi வசதியுடன் கூடிய டிஜிட்டல் கற்றல் மையங்கள் அமைக்கப்படும்.

> தொழிற்சாலைகள் அதிகமுள்ள நகரங்களில், பெண்கள் வேலைக்குச் செல்வதை எளிதாக்கும் பொருட்டு, 1000 குழந்தைகள் காப்பகங்கள் உருவாக்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

SCROLL FOR NEXT