அரசியல்

திமுக - காங். கூட்டணி விரிசல்? | விஜய் - பிரவீன் ‘மீட்’ அரசியல்

செய்திப்பிரிவு

காங்கிரஸ் நிபுணர்கள் மற்றும் தரவு பகுப்பாய்வுக் குழுவின் தலைவராக இருந்த சசி தரூரின் இடத்தில் இப்போது பிரவீன் சக்கரவர்த்தி இருக்கிறார். இவர் ராகுல் காந்திக்கு நெருக்கமான வட்டத்தில் இருப்பவர். அதனால், இவரின் ஒவ்வொரு நகர்வும் ராகுலுக்கு நெருக்கமான நகர்வாகவே காங்கிரஸ் கட்சியினரால் பார்க்கப்படுகிறது. ஆனால், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு உடன்பிறவா சகோதரனாக இருக்கிறார் ராகுல். பிரவீனுக்கோ திமுக என்ற பெயரைச் சொன்னாலே வேப்பங்காயாய் கசக்கிறது; திமுக-வுக்கும் அப்படித்தான்.

திமுக-வை அவ்வப்போது வெறுப்பேற்றி வந்த பிரவீன் சக்கரவர்த்தி, விஜய்யை சந்தித்து அரசியல் பேசி இருப்பதன் மூலம் எரிகின்ற தீயில் எண்ணெய் வார்த்திருக்கிறார். இதுபற்றி நம்மிடம் பேசிய டெல்லி தொடர்பில் இருக்கும் காங்கிரஸ் புள்ளிகள் சிலர், “ராகுல் என்ன நினைக்கிறாரோ தெரியவில்லை. ஆனால், தமிழகத்தில் தவெக-வுக்கு பெரிய மாஸ் இருப்பதாக அவரைச் சுற்றி இருப்பவர்கள் அவரை நம்பவைத்துவிட்டார்கள். அதில் முக்கியமானவர் பிரவீன் சக்கரவர்த்தி.

இவர்களை மீறி ராகுல் காந்தி ஒரு முடிவை எடுப்பார் என்பதைச் சொல்வதற்கில்லை. காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசிவிட்டு வந்த ஒரு சில நாட்களில் பிரவீன் இந்த முயற்சியில் இறங்கி இருக்கிறார் என்றால், காங்கிரஸ் குழுவினர் எதிர்பார்த்துப் போனதற்கு மாறாக ‘துரைமுருகன் பாணியில்’ அறிவாலயத்தில் ஏதேனும் அனுபவம் ஏற்பட்டிருக்கலாம்.

அந்தத் தகவல் டெல்லிக்கு பாஸ் பண்ணப்பட்டு அதன் அடிப்படையில் பிரவீன் சக்கரவர்த்தி பனையூருக்குப் புறப்பட்டு வந்திருக்கலாம். அல்லது பேச்சுவார்த்தையில் வளவள என்றெல்லாம் இருக்கக் கூடாது என்பதை திமுக-வுக்கு உணர்த்தவும் இப்படி போக்குக் காட்டி இருக்கலாம்” என்கிறார்கள். ஆக, எது எப்படி இருந்தாலும் பழைய நட்புடன் காங்கிரஸும் இனி திமுக-வை அணுகமுடியாது. திமுக-வும் காங்கிரஸிடம் முன்பு போல் கெடுபிடிகளைக் காட்டமுடியாது என்பது மட்டும் உறுதி.

SCROLL FOR NEXT