அரசியல்

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவும் தாக்கமும் | எக்ஸ்ப்ளைனர் வீடியோ

செய்திப்பிரிவு

மகளிருக்​கான 33 சதவீத இடஒதுக்​கீட்டை அமல்படுத்துவதற்​காக அரசி​யல் சாசன திருத்​தம் மசோதா 2026, தொகுதி மறு​வரையறை மசோதா 2026, யூனியன் பிரதேச சட்டங்கள் திருத்தம் மசோதா 2026 ஆகிய 3 மசோதாக்​கள் கடந்த ஏப்​ரலில் மக்​களவை​யில் தாக்​கல் செய்​யப்​பட்​டன.

இந்த மசோதாக்​கள் மூலம் மக்​களவை தொகுதி​களின் எண்ணிக்கையை 543-ல் இருந்து 850 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டு இருந்​தது. அரசி​யலமைப்பு சட்டத் திருத்த மசோதாக்​கள் என்​ப​தால் இவற்றை நிறைவேற்ற மூன்​றில் இரண்டு பங்கு எம்​பிக்​களின் ஆதரவு தேவை. ஆனால் போதிய ஆதரவு கிடைக்​காததால் மசோதாக்​களை நிறைவேற்ற முடியவில்லை.

இந்தச் சூழலில் நாடாளு​மன்​றத்​தின் சிறப்பு கூட்​டத் தொடர் நவம்பர் 30-ம் தேதி தொடங்கி டிசம்​பர் 3-ம் தேதி வரை நடை​பெறும் என்று அறி​விக்​கப்​பட்டு உள்ளது. இதில் மகளிர் இடஒதுக்கீடு அமலாக்​கம் மற்​றும் மக்​களவை தொகுதி மறு​வரையறை தொடர்பான மசோதாக்​கள் தாக்கல் செய்​யப்​படும் என்று எதிர்பார்க்​கப்​படு​கிறது.

இதை உறுதி செய்​யும் வகை​யில் பிரதமர் நரேந்​திர மோடி தலைமையில் மத்​திய அமைச்​சரவைக் கூட்​டம் டெல்லியில் வெள்ளிக்கிழமை நடை​பெற்​றது. இதில் அனைத்து மாநிலங்​களுக்​கும் சரிசமமாக 50 சதவீதம் அளவுக்கு மக்​களவைத் தொகுதி​களை அதி​கரிக்க ஒப்புதல் அளிக்​கப்​பட்​டது. இந்த முடிவால் பாஜக அரசுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது.

இது​குறித்து மத்​திய அரசு வட்​டாரங்​கள் கூறும்போது, “கடந்த 1971-ம் ஆண்டு மக்​கள் தொகை​யின் அடிப்படையில் நாடாளு​மன்ற மக்களவை​யில் தற்​போது 543 இடங்​கள் உள்​ளன. இதைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டு மக்​கள் தொகை கணக்​கெடுப்பு அடிப்படை​யில் மக்களவைத் தொகுதி​களின் எண்​ணிக்​கையை 850 ஆக அதி​கரிக்க திட்​ட​மிடப்​பட்டு இருந்​தது. இதற்கு தென் மாநிலங்​கள் கடும் ஆட்​சேபம் தெரி​வித்​தன.

அனைத்து தென்​மாநிலங்​களி​லும் மக்​கள்தொகை கட்டுப்படுத்தப்​பட்டு உள்​ளன. எனவே மக்​கள் தொகை அடிப்​படை​யில் தொகுதி​களின் எண்​ணிக்​கையை அதிகரித்​தால் தென்​மாநிலங்கள் பாதிக்​கப்​படும் என்று சுட்​டிக் காட்​டப்​பட்​டது.

இதற்கு கடந்த ஏப்​ரல் மாத நாடாளு​மன்ற சிறப்பு கூட்​டத்​தொடரிலேயே மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா தெளிவான விளக்​கம் அளித்​தார். அனைத்து மாநிலங்களுக்​கும் ஒரே மாதி​ரியாக 50 சதவீத இடங்​கள் அதிகரிக்கப்​படும் என்று அவர் உறுதி அளித்​தார்.

இதன் அடிப்​படை​யில் தற்​போது மசோதாவில் திருத்​தம் செய்யப்பட்டு, அனைத்து மாநிலங்​களி​லும் 50 சதவீதம் என்ற வகை​யில் மக்​களவைத் தொகுதி​களை அதி​கரிக்க மத்​திய அமைச்​சரவை ஒப்​புதல் அளித்​துள்​ளது.

இதன்​படி நாடாளு​மன்ற மக்​களவைத் தொகுதி​களின் எண்​ணிக்கை 815 ஆக அதி​கரிக்​கும். இதில் 33 சதவீத இடங்கள் மகளிருக்கு ஒதுக்​கீடு செய்​யப்​படும். வரும் 2051-ம் ஆண்டு வரை மக்​களவைத் தொகுதி​களின் எண்ணிக்​கை​யில் மாற்​றம் செய்​யப்​படாது.

தமிழகத்தில் தற்போது 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. ஐம்பது சதவித உயர்வு அடிப்படையில், தமிழக மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 59 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தரப் பிரதேசத்தில் 80 தொகுதிகளில் இருந்து 120 ஆகவும், மகாராஷ்டிராவில் 48 தொகுதிகளில் இருந்து 72 ஆகவும், மேற்கு வங்கத்தில் 42-ல் இருந்து 63 ஆகவும், பிஹாரில் 40-ல் இருந்து 60 ஆகவும் மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது கவனிக்கத்தக்கது.

நாடாளு​மன்​றத்​தில் மசோதா நிறைவேற்​றப்​பட்ட பிறகு தொகுதி மறு​வரையறை ஆணை​யம் அமைக்​கப்​படும். இந்த ஆணை​யம் நாடு முழு​வதும் மக்​களவை தொகுதிகளை மறு​வரையறை செய்யும். வரும் 2029-ம் ஆண்​டில் 815 மக்​களவைத் தொகுதிகளுக்கும் பொதுத்​தேர்தல் நடை​பெறும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரி​வித்​துள்​ளன.

கடந்த ஏப்​ரல் மாத நில​வரப்​படி மக்களவை​யில் பாஜக கூட்டணிக்கு 292 எம்​.பி.க்கள் இருந்​தனர். மேற்​கு ​வங்க சட்டப்​பேரவைத் தேர்​தலுக்​குப் பிறகு திரிணமூல் காங்​கிரஸ் உடைந்​தது. அந்த கட்​சி​யின் 20 மக்​களவை எம்.பி.க்கள் தேசியவாத குடிமக்​கள் கட்​சி​யில் இணைந்து பாஜகவுக்கு ஆதரவு அளிக்​கின்​றனர்.

உத்​தவ் தாக்​கரேவின் சிவசேனா கட்​சியை சேர்ந்த 6 எம்.பி.க்​கள், ஏக்​நாத் ஷிண்டே தலை​மையி​லான சிவசேனாவில் இணைந்​தனர். இத​னால் பாஜக கூட்டணியின் பலம் 318 ஆக அதி​கரித்​தது.

அசாம் மாநிலம் நகோன் மக்​களவைத் தொகுதிக்கு நடை​பெற்ற இடைத்தேர்​தலில் பாஜக வெற்றி பெற்​றது. இதன் ​காரண​மாக மக்களவையில் பாஜக​ கூட்டணியின் பலம் 319 ஆக அதிகரித்திருக்​கிறது.

மகளிர் இடஒதுக்​கீடு அமலாக்​கம், தொகுதி மறுவரையறை மசோதாக்​களை நிறைவேற்ற ஆளும் பாஜக கூட்​ட​ணிக்கு 360 எம்.பி.க்​களின் ஆதரவு தேவை. மத்திய அரசுக்கு கூடுதலாக 41 எம்.பி.க்​கள் மட்​டுமே தேவை என்ற சூழலில் திமுகவின் 22 எம்.பி.க்கள், சரத்பவாரின் தேசி​ய​வாத காங்​கிரஸின் 8 எம்.பி.க்கள், ஒய்​எஸ்ஆர் காங்​கிரஸின் 4 எம்.பி.க்கள் உள்​ளிட்ட சில கட்சிகள் ஆதரவு அளிக்​கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்​கட்​சிகளை சேர்ந்த சில எம்​.பி.க்​கள் அணி மாறி வாக்களிக்கக்​கூடும் என்​றும், சமாஜ்வாதி உள்​ளிட்ட சில கட்சிகள் புறக்​கணிக்​கக்​கூடும் என்றும் தெரிகிறது.

மாநிலங்களவை நிலவரத்தை எடுத்துக்கொண்டால், ஆம் ஆத்மி கட்​சி​யின் 7 மாநிலங்​களவை எம்​.பி.க்​கள் கடந்த ஏப்ரலில் பாஜக​வில் இணைந்​தனர். இதேபோல கடந்த ஜூலை​யில் திரிணமூல் காங்​கிரஸை சேர்ந்த 4 மாநிலங்களவை எம்.​பி.க்​கள் பாஜக​வில் இணைந்​தனர். இதன்​மூலம் மாநிலங்​களவையில் பாஜக கூட்​ட​ணி​யின் பலம் 151 ஆக உயர்ந்​திருக்​கிறது.

மாநிலங்களவையில் தற்​போது 243 எம்​.பி.க்​கள் உள்ள நிலை​யில், மகளிர் இடஒதுக்​கீடு அமலாக்​கம், தொகுதி மறு​வரையறை மசோதாக்​களை நிறைவேற்ற 162 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. ஆளும் பாஜக கூட்​ட​ணிக்கு திமுகவின் 8 எம்.பி.க்கள், ஒய்​எஸ்ஆர் காங்​கிரஸின் 4 எம்.பி.க்கள் உள்​ளிட்ட சில கட்​சிகள் ஆதரவு அளிக்​கும் என்று தகவல்​கள் வெளியாகி உள்​ளன.

இந்தப் பின்னணியில்தான் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம், அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன்படி, நியாயமான தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிக்கப்போவதாக திமுக அறிவித்துள்ளது. மேலும், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் கொண்டு வர உள்ள தொகுதி மறுவரையறை மசோதாவால், தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் அக்கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நியாயமான தொகுதி மறுவரையறை கோரிக்கைகளை ஏற்ற மசோதாவுக்கு திமுக ஆதரவு.

கடந்த ஏப்ரல் மாதம் எந்தக் காரணங்களுக்காக தொகுதி மறுவரையறை சட்டமுன்வரைவை எதிர்த்தோமோ, அந்த இரண்டு கோரிக்கைகளும் எழுத்துப்பூர்வமாகப் புதிய சட்டமுன்வரைவில் சேர்க்கப்பட்டுள்ளன. இது, 2024-ஆம் ஆண்டு முதல் திமுக மேற்கொண்ட தொடர் போராட்டங்களுக்கான வெற்றி. தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் அனைத்துக்குமான வெற்றி.

1971 மக்கள்தொகையின் அடிப்படையிலேயே அனைத்து மாநிலங்களுக்கும் 50 சதவீத தொகுதிகள் உயர்வு எனும் இந்த தொகுதி மறுவரையறை மசோதாவைத் தவறவிட்டால் என்ன நடக்கும் என உணர்ச்சிவயப்படாமல் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அதையெல்லாம் தீர ஆராய்ந்துதான், நடைமுறைக்கு சாத்தியமானதில் நமக்கு சாதகமான இந்த வடிவிலேயே தொகுதி மறுவரையறை நடந்திடத் திமுக ஆதரவளிக்கும் என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது” என்று திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

மகளிர் இடஒதுக்​கீடு அமலாக்​கம், தொகுதி மறுவரையறை மசோதாக்​களை நிறைவேற்ற ஆளும் பாஜக கூட்​ட​ணிக்கு 360 எம்.பி.க்​களின் ஆதரவு தேவை எனும் நிலையில், திமுக ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியம் வெகுவாக கூடியுள்ளது என டெல்லி அரசியல் வட்டாரங்கள் உறுதிபட தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், திமுகவின் முடிவுக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

“தொகுதி மறுவரையறை விவகாரத்தில், அதிக இடங்கள், விகிதாச்சாரக் கணக்கு என்ற பாஜகவின் பொறியில் திமுக சிக்கிவிடக் கூடாது. பாஜகவின் வாக்குறுதிகளை நம்பினால் திமுகவுக்கு தீராப்பழி ஏற்படும். கர்நாடகா, ஆந்திரா, கேரளா என்ன நிலைப்பாடோ அதுவே நமது நிலைப்பாடாகவும் இருக்க வேண்டும்” என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

“தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு அளித்திருப்பது பேரதிர்ச்சி தருகிறது. இதன்மூலம் திமுக வரலாற்றுப் பிழையைச் செய்திருக்கிறது. பாஜகவின் சதித்திட்டத்துக்கு திமுக துணைபோவது போல் உள்ளது. திமுகவின் நிலைப்பாடு தேசத்துக்கே ஆபத்தை விளைவிக்கும்” என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

“இந்த மகத்தான நாட்டின் கூட்டாட்சிக் கட்டமைப்பின் அடித்தளங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் இந்தத் தருணத்தில், மவுனமாக இருந்தவர்களையும், தங்களின் பொறுப்பைக் கைவிட்டவர்களையும், அரசியலமைப்பைக் காக்க வேண்டிய கடமையில் இருந்து பின்வாங்கியவர்களையும் வரலாறு ஒருபோதும் மன்னிக்காது” என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கூறியுள்ளார்.

அதேவேளையில், திமுக எம்.பி. ஆ.ராசா , “இது இப்போது எடுக்கப்பட்ட முடிவு அல்ல. மு.க.ஸ்டாலின் முதல்வராக இருந்தபோது, சட்டமன்றத்தில் அவர் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார். அந்த தீர்மானத்தில் அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலோடு என்ன முடிவை எடுத்தோமோ, அந்த முடிவுக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு மாநிலங்களின் எதிர்க்கட்சித் தலைவர்களையும் முதல்வர்களையும் சென்னைக்கு அழைத்து ஒரு கூட்டு நடவடிக்கைக் குழு அமைத்து, அந்த குழு ஒரு நாள் முழுவதும் விவாதித்து, என்ன முடிவு எடுத்தோமோ அந்த முடிவுக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இண்டியா கூட்டணியில் திமுக இல்லை என்பதற்காக வலிந்துபோய் ஏதோ ஒரு புதிய முடிவை எடுத்ததுபோல சித்தரிப்பது என்பது மிகக் கேவலமான செயல். அது அரசியல் நாகரிகம் அல்ல” என்று ஆ.ராசா கூறியுள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT