அரசியல்

தாராபுரம், மதுராந்தகத்தில் திமுகவுக்கு ‘ஆறுதல்’, அதிமுகவுக்கு ‘சறுக்கல்’

செய்திப்பிரிவு

மதுராந்தகம், தாராபுரம் இரு தொகு​தி​களி​லும் முக்கியமான கூட்​டணி கட்​சிகள் இல்​லாமல் தனித்​துப் போட்​டி​யிட்ட திமுக இரண்டாம் இடத்​தைப் பிடித்துள்ளது. கடந்த ஏப்​ரல் பொதுத் தேர்​தலில் தாராபுரத்​தில் 64,373 வாக்குகளை பெற்ற திமுக​வுக்​கு, தற்​போது 57,370 வாக்குகள் கிடைத்​துள்​ளன. இதில் வாக்கு எண்​ணிக்கை குறைந்​த​போதும், அதன் வாக்கு சதவீதம் அதே நிலை​யில் நீடிக்​கிறது.

மது​ராந்​தகத்​தில் கடந்த முறை 59,838 வாக்​கு​களு​டன் மூன்றாம் இடத்​தில் இருந்த திமுக, தற்​போது 54,008 வாக்குகளுடன் இரண்டாம் இடத்​துக்கு முன்​னேறி​யுள்​ளது. எனினும், அதன் வாக்கு சதவீதம் சுமார் ஒரு சதவீதம் குறைந்​துள்​ளது. திமுக தனக்​கான வாக்கு வங்​கியை தக்க வைத்​திருப்​பது இந்த முடிவு​கள் மூலம் தெரி​கிறது. எனினும், இதை மட்​டுமே வைத்​துக் கொண்டு ஆளுங்கட்சியான தவெக​வின் எழுச்​சியை வீழ்த்​தி​விட முடி​யுமா என்ற கேள்வி எழுகிறது.

இந்த 32 சதவீத வாக்​குகளைத் தாண்​டி, முதல்​முறை வாக்காளர்​கள், இளைஞர்​கள், நடுநிலை​யாளர்​களை ஈர்த்தால் மட்​டுமே இனி வரும் தேர்​தல்​களில் வெற்​றியை வசப்​படுத்த முடி​யும். காலத்​துக்​கேற்ப புதிய தேர்​தல் வியூகங்​களை வகுக்க வேண்​டிய கட்​டா​யம் திமுக​வுக்கு ஏற்​பட்​டுள்​ளது. அதற்​கேற்ப, கட்சி மறுசீரமைப்​புப் பணிகளை திமுக விரைந்து முன்​னெடுக்​குமா என்​பதே தற்​போதைய எதிர்​பார்ப்​பாக உள்​ளது.

இதனிடையே, தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவில் இருந்து விலகி, தவெக வேட்பாளராக போட்டியிட்ட சத்யபாமாவின் செயல்பாட்டை அதிமுகவினர் ஏற்கமாட்டார்கள் என்பதால் இடைத்தேர்தலில் நிச்சயம் அதிமுக வெற்றிபெறும் என கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி நம்பினார். ஆனால் தவெக வெற்றி பெற்றது.

இதேபோல் மதுராந்தகம் தொகுதியில், அதிமுகவிலிருந்து விலகி, தவெக வேட்பாளராக போட்டியிடும் மரகதத்தின் நடவடிக்கையை அதிமுகவினர் மன்னிக்க மாட்டார்கள். எனவே வெற்றி பெறுவோம் என பழனிசாமி நம்பிய நிலையில் இங்கும் அதிமுக தோற்றது. கடந்த தேர்தலில் இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற அதிமுக, தற்போது மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இது தொடர்பாக அக்கட்சி நிர்வாகிகள் சிலர் பகிர்ந்த தகவல்களைப் பார்ப்போம்.

“இவ்விரு தொகுதிகளிலும் கிராமப்புறங்களில் தான் அதிமுகவுக்கு வாக்குகள் கிடைத்தன. அதிமுகவில் கடந்த தேர்தலில் பாமக, தமாக கட்சிகள் கூட்டணியில் இருந்தன. நிர்வாகிகள் அனைவரும் ஒன்றுபட்டு இருந்தனர். இந்தத் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு முன்பே, அத்தொகுதிகளில் அதிமுக சார்பில் வென்ற மரகதம், சத்யபாமா ஆகியோர் தவெகவில் இணைந்தபோது அதிமுகவினர் பலரும் தவெகவில் இணைந்துவிட்டனர்.

மதுராந்தகம் தனித் தொகுதியாக இருந்தாலும், வன்னியர்கள் வலுவாக இருக்கும் நிலையில், பாமக மறைமுகமாக தவெகவுக்கு ஆதரவளித்தது. செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் அதிமுக வன்னியர்களின் முகமாக விளங்கும் சி.வி.சண்முகம் இந்தத் தேர்தல் பிரச்சாரத்துக்கு வராததால், கடந்த தேர்தலைப் போல வன்னியர்கள் வாக்கு அதிமுகவுக்கு கிடைக்கவில்லை.

அதேபோல, தாராபுரம் தொகுதியில் கொங்கு சமூகத்தினர் அதிகமாக உள்ள நிலையில், அதிமுகவில் கொங்கு சமூகத்தின் முகமாக விளங்கும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரச்சாரத்துக்கு வரவில்லை. அதனால் அந்த சமூகத்தினரின் வாக்கும் அதிமுகவுக்கு கிடைக்கவில்லை. இதனாலேயே இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது” என்று அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறினர்.

SCROLL FOR NEXT