அரசியல்

கூட்டணி ‘குமுறல்’ தாக்கம் - திமுக ‘டார்கெட்’டுக்கு சிக்கலா?

வெற்றி மயிலோன்

தேமுதிக, மநீம போன்ற புதிய கட்சிகள் கூட்டணிக்கு வந்துள்ளதால்தான் உங்களுக்கு தொகுதிகளை குறைக்கிறோம் என திமுக காரணம் சொன்னது. அதில், மநீம தேர்தலே வேண்டாம் என விலகிவிட்டார்கள். ஆனால், தேமுதிகவுக்கு 10 தொகுதிகளை அள்ளிக் கொடுத்ததால் எல்லா தோழமைக் கட்சிகளும் வாயடைத்துப் போனார்கள். கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் எப்படியோ சமாதானமாகி தொகுதிப் பங்கீட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டார்கள். ஆனால், குறைவான தொகுதிகளைப் பெற்றதால், தலைமையை நோக்கி தொண்டர்கள் பல்வேறு கேள்விகளையும் எழுப்ப ஆரம்பித்துவிட்டனர்.

இதன் வெளிப்பாடாகவே திருமாவளன், “மக்கள் நீதி மய்யத்தை டார்ச் சின்னத்தில் போட்டியிட அனுமதித்து கூட்டணியின் நன்மதிப்பை உயர்த்த வேண்டும். தனிச் சின்னத்தில் போட்டியிட விரும்பும் கட்சிகளை அனுமதிக்காமல் இருப்பது, சுதந்திர அரசியல் நடவடிக்கைகளை முடக்கிப்போட்டுவிடும்” என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தோழமை சுட்டுதல் கடமையைச் செய்திருக்கிறார்.

இதற்கெல்லாம் மேலாக மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பாலபாரதி, “ஏன் இடதுசாரிகளுக்கு மட்டும் தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. தங்கள் வீட்டில் ஏற்பட்ட துக்கத்துக்கு கூட இத்தனை கலங்காத தோழர்கள் இன்றைய நாளில் அத்தனை துயரத்தோடு இருக்கிறார்கள். இடதுசாரிகளை இந்த அளவுக்கு கீழே தள்ளுவது நியாயமா? இடதுசாரிகளை வேண்டாவெறுப்பாக கூட்டணியில் வைத்துள்ளீர்களா?” என ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார்.

          

மதிமுக அவைத் தலைவர் அர்ஜுன ராஜ், “தனிச் சின்னத்தில் போட்டியிடவில்லையே என சிரித்துக்கொண்டே அழுகின்றோம். மதிமுகவின் தகுதி, தரத்துக்கு ஏற்ப தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை என்ற வருத்தம் உள்ளது” என்று விரக்தியோடு பேசினார். கமல்ஹாசனை தேர்தலை புறக்கணித்ததையும், அதன் பின்னால் உள்ள அழுத்தங்கள் குறித்தும் மநீம தொண்டர்கள் வேதனையோடு சமூக வலைதளங்களில் பதிவிடுவதையும் பார்க்க முடிகிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக தவிர்த்து அனைத்துக் கட்சிகளின் தொண்டர்களும் தங்கள் கட்சிக்கு மிக குறைவான தொகுதிகளே ஒதுக்கப்பட்டுள்ளது என்ற குமுறலோடுதான் உள்ளார்கள் என்று சொல்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். நம் கூட்டணியில் எப்படியும் 200+ அள்ளலாம் என்று டார்கெட் வைத்து இயங்குகிறது திமுக. ஆனால், தங்களுக்கு ஏற்பட்ட தொகுதிப் பங்கீடு காயத்தோடு, களத்தில் கூட்டணி கட்சியினர் தேர்தல் பணியில் உற்சாகத்தோடு ஈடுபடுவது சந்தேகமே என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

இந்த விஷயத்தை கையில் எடுத்துள்ள எடப்பாடி பழனிசாமி, திமுகவையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் கடுமையாக அட்டாக் செய்ய ஆரம்பித்துள்ளார். திமுக கூட்டணிக் கட்சிகள் ‘அடிமை சாசனம்’ எழுதிக் கொடுத்துவிட்ட என ஏகத்துக்கும் விமர்சிக்கவும் தொடங்கியுள்ளார். இது குறிப்பிட்ட கட்சிகளின் தொண்டர்களிடம், அக்கட்சிகளின் அனுதாபிகளிடம் எடுபட வாய்ப்புள்ளது என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

தேர்தல்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான தொகுதிப் பங்கீட்டில் கூடுதல், குறைவு என்பதெல்லாம் வழக்கமானதுதான். ஆனால், தொகுதிப் பங்கீட்டுக்குப் பிறகும் இத்தனை வெளிப்படையாக கட்சியின் முக்கிய தலைவர்களே ஆதங்கப்படுவது இப்போதுதான் நடக்கிறது. இதனையெல்லாம் திமுக எப்படி சரிகட்டப் போகிறது என்று பார்ப்போம்.

SCROLL FOR NEXT